Published:Updated:

ஆசை காட்டி மோசம் செய்த டாப் 10 தமிழ்ப் படங்கள்! #2016Rewind

ஆசை காட்டி மோசம் செய்த டாப் 10 தமிழ்ப் படங்கள்! #2016Rewind
ஆசை காட்டி மோசம் செய்த டாப் 10 தமிழ்ப் படங்கள்! #2016Rewind

ஆசை காட்டி மோசம் செய்த டாப் 10 தமிழ்ப் படங்கள்! #2016Rewind

2016-க்கு பூசணிக்காய் உடைச்சு வழியனுப்பி வைக்கும் கவுண்டவுன்லாம் உலகம் முழுக்க ஸ்டார்ட் ஆகிடுச்சு. தமிழ் சினிமாவில் ஆரம்பித்து உலக சினிமா வரை நிறைய "பட்டியல்” கட்டுரைகள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இந்த சூழலில் நம்மை ரொம்பவும் எதிர்பார்க்க வைத்து மொக்கையாக்கிய டாப் 10 படங்கள் பற்றிய ஒரு சோக லிஸ்ட். 

தாரை தப்பட்டை 

இயக்குநர் பாலாவின் இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இதுக்கு கிடைத்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் வேற லெவல். ஹிரோ சசிகுமார் என செய்தி வெளியானதும் இன்னும் டெம்பரேச்சரை அதிகமாக்கியது. காரணம் சசிகுமாரை இயக்குநர் என்பதை தாண்டி 'சுப்பிரமணியபுரம்' சசிகுமாராகவே இன்னும் எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்களின் மனநிலைதான். பாலா & சசி காம்போ தெறிக்கவிடப்போறாங்க என பெரிய எதிர்பார்ப்பு ஒருப்பக்கம் என்றால் பத்தாத குறைக்கு இளையராஜா இசை வேறு. எல்லாம் இருந்தும் எதோ ஒண்ணு (ஆக்ச்சுவலி ஒன்பது குறைஞ்ச) குறைஞ்ச மாதிரி இருக்குமே அப்படியே இருந்தது படம். 

கெத்து 

பூனைக்கண், மொபைலில் 'பியூட்டி பை' ஆப்சனில் செதுக்கியது போன்ற வித்தியாசமான லுக்கில் உதயநிதி என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவுடனே எதோ ட்ரை பண்றார் என தெரிந்தது. ஷூட்டிங் முடிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்த கதைப்படி படம் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் என தெரியவந்தது. சத்யராஜ்,எமி ஜாக்சன், ராஜேஷ், கருணாகரன் என ரொம்ப சேஃப் ஆன டீமுடன் உதயநிதி களமிறங்கியதாலும் அவரின் முதல் ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2016-ன் பொங்கல் அவருக்கு கசப்பு பொங்கலாக மாற்றியது கெத்து. 

ஜில் ஜங் ஜக் 

கௌபாய் + மேட் மேக்ஸ் பாணியிலான டீசர் சித்தார்த் எதோ வித்தியாசமா செய்ய விரும்புகிறார் என்பதை சொன்னது..அவர் விரும்பும் கதையை இயக்குநர் தீரஜ் வைத்திருக்கிறார் என புரிய வந்தது. கொஞ்சம் விரிவான ட்ரைலர் வெளியான பிறகு மேட் மேக்ஸ் பாணியிலான 'போஸ்ட் அபோகஃலிப்ட்' படம். நியோ நோயர் வகை 'கறுப்பு காமெடி' கதையாக இருக்கும் என யூகிக்க முடிந்தது. கொஞ்சம் ஸ்டைலிஸ்டான மேக்கிங் படம் குறித்த ஆவலை தூண்டியது உண்மைதான். ஆனால் படம் வந்த பிறகு 'அதிகம் ஆசைப்படாதே' என்று பார்த்தவர்களின் மைண்ட் வாய்ஸ் ஓப்பனாகவே வெளியில் கேட்டது. 

24

டோட்டல் நாகர்ஜுனா ஃபேமிலியை வைத்து 'மனம்' என்கிற மெக ஹிட் கொடுத்திருந்த 'யாவரும் நலம்' விக்ரம் குமாரை சுடச்சுட தனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுக்க அழைத்து வந்தார் சூர்யா. தமிழில் கடந்த ஆண்டு வெளியான "நேற்று இன்று நாளை" படத்தின் டைம் மெஷின் படம் அவரை ரொம்ப கவர்ந்ததாலோ என்னவோ இந்த படத்தின் பிளாட்டும் அதே டைம் மெஷிந்தான். ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி படத்தின் ஒவ்வொரு ப்ரோமோவும் செம எதிர்பார்ப்பை கிளப்பியது. இந்த பக்கம் டபுள் சூர்யா,சமந்தா, நித்யா மேனன் என பெர்பெக்ட் டீமுடன் களமிறங்கினாலும் சூர்யாவுக்கு சற்று சறுக்கல்தான். வசூலில் கொஞ்சம் தப்பித்தாலும், ஏற்றிய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.

வெற்றிவேல்

டாப் மோஸ்ட் இயக்குநர் - இளையராஜா காம்போ கை கொடுக்காத நிலையில் தனது வழக்கமான ஹிட் ஃபார்முலாவான மிட்-டவுன் நாயகனாக சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் வருவதற்கு முன்னர் எதிர்பார்ப்பை கிளப்பியது. 2014-லேயே இந்தப்படத்தின் வேலைகள் துவங்கிவிட்ட செய்தி மீடியாவில் கசிந்தது. சசிகுமார்,ஜெய், சமுத்திரகனி என 'சுப்ரமணியபுரம்' டீம் மீண்டும் ரியூனியன் ஆகி நடிக்க உள்ளதாக  சொல்லப்பட்டது. பின்னர் ஜெய் விலகிக்கொண்டார் எனவும் இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமுத்திரகனியும் விலகிகொள்ள (வேறு ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார்) பிரபு உள்ளே வந்தார். யார் வந்தாலும் காப்பற்றமுடியாத சூழலுக்கு உள்ளானது வெற்றிவேலின் ரிசல்ட். 

திருநாள்

ஜீவா கடைசியா ஹிட் கொடுத்தது 2013-ல் வெளியான 'என்றென்றும் புன்னகை' படத்தில்தான். அதன் பிறகு வெளியான 'யான்' சரியாக போகவில்லை. இரண்டு ஆண்டுகளாக அவர் ஹீரோவாக நடித்த எந்தப்படமும் வெளியாகவில்லை என்பதால் 2014-ல் அறிவிக்கப்பட்டாலும்  இந்தப்படம் அவரது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருந்தது. தமிழின் பெரிய ஹீரோக்களுக்கு இணையான மார்க்கெட்டை கையில் வைத்திருந்த நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்ததால் படத்தின் வேல்யூ பெரிதாகவே இருந்தது. எது எப்படியென்றாலும் அரதப்பழசான கதை என்பதால் தமிழ் ரசிகர்கள் தயவு தாட்சண்யமின்றி நிராகரித்தார்கள். உண்மையில் ஜீவா தன் கேரியரை ஸ்டடி பண்ணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது இந்தப்படம்.  போக்கிரி ராஜா, கவலை வேண்டாம் என இந்த ஆண்டு முழுவதுமே ஜீவாவுக்கு சோதனை காலம் தான்.

இது நம்ம ஆளு

படத்தின் டைட்டில் ரொம்ப ரொமாண்டிக்காக இருந்தது. முன்னாள் ரியல் லைஃப் ஜோடியான 'சிம்பு- நயன்தாரா' இணையும் படம் என்பதால் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் படத்துக்கான எதிர்பார்ப்பு செம ஹைப்பில் இருந்தது. 'பசங்க' படத்தின் இயக்குநர் பாண்டிராஜின் இயக்கம் என்பதால் படத்தின் மீதான நம்பிக்கை 'சிம்பு' இருந்தும் மக்களிடம் எகிறியது. இருந்தாலும் வழக்கம் போல் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக கிளம்பத்தொடங்கியன. ஷூட்டிங் வருவதில்லை, வந்தாலும் தூங்கிவிடுகிறார் என ஒரு கட்டத்தில் இயக்குநர் பாண்டிராஜ் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்களே விடத்தொடங்கிவிட்டார். பெரிதாக சர்ச்சைகளில் சிக்காத நாயகி நயன்தாரா கூட சம்பளம் தரவில்லை என ஒரு பாடலை நடித்துக்கொடுக்க மறுத்துவிட்டார். அந்தா இந்தா என வெளியாகியது படம். இவ்வளவு பஞ்சாயத்துக்கு பிறகு வெளியானாலும் பெரிய வெற்றியை படம் கொடுக்கவில்லை. 

வாகா

'வாகா' படம் அவரது கேரியரில் மிகப்பெரிய டிஸாஸ்டர் மூவி என்றுதான் சொல்லவேண்டும். எல்லை தாண்டிய காதல் என்கிற அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதையில் சிறுபிள்ளைத்தனமாக படம் பிடிக்கப்பட்டிருந்தன. சாதாரண மக்களுக்கே தெரியும் லாஜிக்குகள் கூட அபத்தமாக மீறப்பட்டிருந்தது சிரீயஸான காட்சிகளில் கூட சிரிப்பை உருவாக்கி விட்டது. இந்தப்படத்தின் இயக்குநர் குமரவேலனின் முந்தைய படமான 'ஹரிதாஸ்' நல்ல பெயரை வாங்கிக்கொடுத்திருந்தாலும் இது அவருக்கும் பெரிய பின்னடைவுதான். 

தொடரி

கும்கிக்கு பிறகு பிரபு சாலமனுக்கும் நல்லது நடக்கவில்லை. ஓடும் ட்ரைனில் நடக்கும் கதை. ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தே சமூக ஊடகங்களில் ஆளாளுக்கு தங்களுக்கு தெரிஞ்ச டிரையின் கதைகளை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். படம் வெளியான பின்னர் அப்படி சொல்லப்பட்ட கதைகள் இதை விட நல்லா இருந்ததே என்ற எண்ணம் வரவைத்தது. மலைப்பாதைகளில் தடதடக்கும் தொடர்வண்டியின் ஓட்டுநர் ஸ்பீடிங் கியரின் மீதே இறந்துவிட இன்னும் வேகமெடுக்கிறது தொடரி. ஆனால் இது பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் கீர்த்தி சுரேசுடன் லவ்ஸில் இருக்கிறார் தனுஷ். பார்வையாளர்கள் தயாரிப்பாளரை நினைத்து உச்சுக்கொட்டினர். 

கடவுள் இருக்கான் குமாரு

 நான் ஸ்டாப் ஹிட்களாக கொடுத்துக்கொண்டிருந்த ஜிவி.பிரகாஷ் சந்தித்த முதல் ஸ்பீட் ப்ரேக்கர்தான் இந்த கிக். வழக்கமான ராஜேஷ் படங்களில் இருக்கும் நகர்வுகூட இதில் இல்லை. எதை குறை சொன்னாலும் ஜாலியான படத்துக்கு கேரண்டி அளிக்கும் ராஜேஷின் டயலாக் கூட இதில் கைகொடுக்கவில்லை. இந்தப்படம் செய்த காயத்தை இன்னொரு மெஹா ஹிட் கொடுத்துதான் தமிழ் ரசிகர்ளின் மனதை இயக்குநர்  ராஜேஷ் ஆற்றவேண்டும்.

-வரவனை செந்தில் 

அடுத்த கட்டுரைக்கு