Published:Updated:

‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை

‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை
‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை

‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை

'மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபட்டவராக வாழ்ந்து வருகிறார் நடிகர் லிவிங்ஸ்டன். அப்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த குஷ்பு, தேவயாணி, கெளசல்யா என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். காமெடி, வில்லன், ஹீரோ என அனைத்து கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர் அவர். இதுவரை 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தொய்வில்லாமல் நடிப்புப் பணியில் தீவிரத்தை காட்டி வருகிறார். பொது இடங்களில் சாதாரணமாக ஆட்டோக்களிலும், அரசு பேருந்துகளிலும் பயணிக்கிறார். பொதுமக்கள் அடையாளம் காணும் போது புன்முறுவலோடு கடந்து செல்கிறார் லிவிங்ஸ்டன்... அவரிடம் பேசினோம்.

''எதற்காக இந்த சிம்பிளிசிட்டி?''

''நான் எப்பவுமே இப்படித்தான். 1934 ஆம் ஆண்டு 'பவளக்கொடி' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் தியாகராஜ பாகவதர்.

பிரிட்டிஷ் அதிகாரிகள் ரயில்வே பணியில் அப்போது இருந்தார்கள். தியாகராஜ பாகவதர் ரயிலில் பயணிக்க வந்த போது, பொதுமக்கள் வெள்ளம் அவரைப் பார்க்க திரண்டுவிட்டது. ரயில் நகர முடியாத சூழல். அப்போதுதான் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இவரைப் பற்றி தெரிந்துகொண்டு, அவர் அருகில் போய், 'சார் இனிமேல் நீங்கள் ரயிலில் பயணிக்க வேண்டாம். நீங்கள் காரில் பயணிப்பதுதான் நல்லது' என கூறி அவரை பாதுகாப்போடு அழைத்துச் சென்றார்களாம்.

அப்படி மக்கள் மனதை கொள்ளைக் கொண்டு மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் தியாகராஜ பாகவதர். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஓடி மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. அந்த நேரத்தில்தான் திடீரென லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர். விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு வெளியில் வந்த சில ஆண்டுகளில் மக்களிடையே அவருடைய செல்வாக்கு குறைந்தது. அவர் எங்கிருக்கிறார் என்றுக்கூட யாரும் யோசிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நாள் கவிஞர் வாலி ரயிலில் பயணிக்க சென்ற போது ரயில்வே பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் வேறு யாரும் அல்ல மக்கள் பெருவெள்ளத்திலும், புகழின் உச்சத்திலும் இருந்த தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகர் தியாகராஜ பாகவதர் தான். வாலி அவர்கள் பாகவதரைப் பார்த்தும் அழுதுவிட்டாராம். அப்படிப்பட்ட தியாகராஜ பாகவதர்கே அந்த நிலைமைனா, நாமெல்லாம் எம்மாத்திரம். சந்திரபாபு, தியாகராஜ பாகவதர் போன்ற புகழின் உச்சத்தில் இருந்த பலருடைய வாழ்க்கையும் கடைசியில் டிராஜிடியில் முடிந்ததாக நிறையப் படித்திருக்கிறேன். அதிலிருந்துதான் நான் வாழ்க்கையின் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்''. 

''நான் நடிக்க வாய்ப்புக் கேட்க எப்படி வந்தேனோ அப்படியேத்தான் இப்போதும் இருக்கிறேன். என்னுடைய கேரக்டர் எந்த விதத்திலும் மாறவில்லை. எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில் இருக்கும் அட்வான்டேஜ் , கடைசி வரை எந்த ஏற்ற, இறக்கம் வந்தாலும் கலங்காமல் வைத்துக் கொள்ளும். இன்றைக்கு உயரத்தில் இருந்துவிட்டு, தேவையில்லாத ஆடம்பரங்களுக்கு அடிமையாகிவிட்டு திடீரென சறுக்கல் ஏற்படும் பொழுது மனம் உடைந்து போகும். இப்படி எதற்க்கும் ஆளாகாமல் இருக்க என்னை நானே சாதாரணமாக வாழப் பழக்கப்படுத்திக் கொண்டேன் அவ்வளவுதான். இதில் பெரிய பெருமை எல்லாம் கிடையாது''.

''பொது இடங்களில் சாதாரணமாக பயணிக்கும் பொழுது மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?''

''சாதாரணமாக என்று சொல்லாதீர்கள். எல்லோரையும் போலத்தான் நாங்களும். நடிகர் மம்முட்டி, மோகன்லால் இவங்க எல்லாம் சாதாரணமாக மக்களோடு மக்களாக உட்கார்ந்து டீ குடிப்பாங்க. பேசுவாங்க. ஆனால் தமிழ்நாட்டுலதான் தலைகீழா இருக்கு. மக்களோடு மக்களாக ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான், என் மனைவி, இரண்டு மகள்கள் என நாங்கள் நான்கு பேரும் இடித்துக் கொண்டு ஒரே ஆட்டோவில் பயணித்திருக்கிறோம். சில நேரங்கள் வீட்டிற்கு நடந்தே வந்திருக்கிறேன். எனக்கு இப்படி எளிமையான வாழ்க்கை வாழதான் பிடித்திருக்கிறது. பொதுமக்கள் யாராவது என்னை அடையாளம் கண்டு பேசும்போது, 'ஏன் சார் நீங்க எல்லாம் பஸ்ல வரலாமா?' என கேட்பார்கள். அதற்கு நான், 'நானும் உங்கள மாதிரி ஒருத்தன் தானே. உங்களோடு கலந்து இருக்கப் பிடிச்சிருக்கு. எங்களை நீங்களாகவே பெரிதுப் படுத்துவதால்தான் பல பிரபலங்கள் பொதுவெளியில் பயணிக்கவே பயப்படுகிறார்கள். நீங்களும் எங்களை சாதாரணமாகப் பார்த்தாலேப் போதும்' என புன்னகையோடு விடைபெறுவேன்''.

''உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?''

''என்னைப் போலத்தான் என் மனைவியும். எனக்கு என்ன பிடிக்குமோ அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வார். என் இரண்டு மகள்களும் அப்படித்தான், நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல. 120 க்கும் மேற்பட்ட என்னுடைய ஷீல்ட், விருதுகள் எல்லாத்தையும் மூட்டைக் கட்டி ஷெல்ஃபில் போட்டுட்டேன். இப்படித்தான் வாழணும் என நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் தனித்துவமாக வாழ்வது ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொருத்தது. எப்பொழுதுமே நான் ஒரே மாதிரிதான் இருக்கேன். மாறுவதற்கும் விருப்பம் இல்லை. அடிக்கடி கோபம் வரும், அடுத்த நிமிடம் மறந்துட்டு சாதாரணமாகப் பேச ஆரம்பிச்சுடுவேன்''.

''தற்போது உங்களுடையப் படங்கள்?''

“சிபிராஜ் நடிக்கும் ‘கட்டப்பாவை காணோம்', உதயநிதி ஸ்டாலினின் 'சரவணன் இருக்க பயமேன்' , 'அதிமேதாவிகள்' என இந்த மூன்று படங்களிலும் நடிச்சிருக்கேன். இந்த மூன்று படங்களும் இந்த டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ரிலீஸ் ஆகலாம். வரும் மார்ச் மாதம் புதிதாக படம் பண்ணப் போறேன். அதில் ஹீரோவாக நடித்து இசையமைக்கிறேன். அடிப்படையில் நான் இசையமைபாளர். கிடார், பியானோ  என பல கருவிகளில் வாசிக்கத் தெரியும். நான் இயக்கும் முதல் படம் இதுதான். பத்தாம் வகுப்பில் பெயில் ஆகி, மறுபடியும் படிச்சுப் பாசாகி, பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் போது பாட்டுக்காக முதல் பரிசுகளை வாங்கியிருக்கேன்.  இதற்கு முன்பு இசையமைப்பாளர் ஆதித்யன் இசையில் பாடியிருக்கேன். சில சூழ்நிலைகள் காரணமாக அந்தப் பாடல் ரிலீஸ் ஆகவில்லை''.

''உங்கள் மகளை நடிகையாக்கும் ஆசை இருக்கிறதா?''

''பெரிய பொண்ணு ஜோவிட்டா விஷூவல் கம்யூனிகேஷன் முதல் வருஷம் படிக்கிறாங்க. இரண்டாவது பொண்ணு ஜம்மா 10 ம் வகுப்பு படிச்சிட்டு இருக்காங்க. பப்ளிக் எக்ஸாம் என்பதால படிப்பில் தீவிரமா இருக்காங்க. பெரிய பொண்ணு ஜோவிட்டா, 'ஒரே ஒரு படம் மட்டும் நடிக்கிறேன்ப்பா' னு கேட்டிருக்காங்க. நல்லக் கதை அமையும்போது பார்ப்போம்''.

''இந்த ஃபீல்டுக்கு ஏன் வந்தோமென்று யோசித்தது உண்டா?''

''நிச்சயமா இல்லை. என்னுடைய தொழில் நடிப்பது. நடிப்பது மட்டுமே என்னுடைய வேலை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டேன். மற்ற நேரங்களில் குடும்பத்தலைவராக, நல்ல கணவராக, பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கேன். முதன் முதலா விஜயகாந்த் சாருக்கு ஒரு கதை சொல்லப் போயிருந்தேன். பெரும்பாலான இயக்குநர்கள் உட்கார்ந்தபடியே கதையை விளக்குவாங்க. ஆனால், நான் நடித்தபடியேதான் கதை சொல்லுவேன். அப்போ என்னைப் பார்த்த விஜயகாந்த் சார், 'நீங்க ஏன் நடிக்கக் கூடாது. நடிகனாக உங்களுக்கு அத்தனை தகுதியும் இருக்கு' என தோளில் தட்டிக் கொடுத்தார். அதற்குப் பிறகு நான் நடித்த முதல் படம் 'பூந்தோட்டக் காவல்காரன்'. இந்த படம் 1988-ல் வெளியானது. ஹீரோ விஜயகாந்த், ஹீரோயின் ராதிகா''. 


-வே.கிருஷ்ணவேணி 

அடுத்த கட்டுரைக்கு