Published:Updated:

2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..!

மா.பாண்டியராஜன்
2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..!
2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..!

பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள் என்று தினம் ஒரு படம் அப்பேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதுவரை எட்டு படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருக்கும் நிலையில், அந்த படங்கள் எது..? அந்த படங்களில் என்ன ஸ்பெஷல் என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...

‘பைரவா’

பொங்கல் ரேஸில் முதலில் பெயர் கொடுத்தது, விஜய்யின் ‘பைரவா’ படம் தான். இந்த படத்தில் முதன் முதலாக விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த இரண்டு செய்திகள் தான் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், ‘ரஜினி முருகன்’ படத்தில் கீர்த்தியின் அழகும், ‘கபாலி’ படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையும் பலரால் பாராட்டப்பட்டது. அதனால் தான் ரசிகர்கள் இந்த காம்போவை வரவேற்றனர். அடுத்ததாக இயக்குநர் பரதன். இவர் விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவர். அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் விஜய் மறுபடியும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால், இந்த வாய்ப்பை கண்டிப்பாக நல்லா பயன்படுத்தியிருப்பார் என்கின்றனர் பலர். ‘அழகிய தமிழ் மகன்’ படத்தைப் போலவே இந்த படத்திலும் விஜய்க்கு இரட்டை வேடம்! இந்த மாதிரி பல ஸ்பெஷலோடு ‘பைரவா’ படம் வெளியாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

‘புரியாத புதிர்’

மெல்லிசையாக அறிமுகமாகி தற்போது நம்முன் புரியாத புதிராக நிற்கிறது விஜய் சேதுபதியின் படம். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் இந்த படம் பல மாதங்களாக ரிலீஸுக்கு காத்திருந்தது. டிசம்பர் மாத இறுதியில் ரிலீஸ் என்று சொன்னவர்கள் தற்போது பொங்கலுக்கு என்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி படம் என்றாலே அது வித்தியாசமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அதற்கேற்ப இந்த படத்தின் டிரெய்லரும் சிறப்பாக இருந்ததால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சைக்கோ த்ரில்லராக எடுத்திருக்கும் இந்த படம் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை எடுத்துத்தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

‘புரூஸ் லீ’

இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் ‘புரூஸ் லீ’. சண்டையே போடத் தெரியாதவனுக்கு பெயர் ‘புரூஸ் லீ’. இந்த ஒன் லைன்னே அதிக பேரை கவர்ந்தது.இளைஞர்களுக்கு ஜி.வி.பிரகாஷை அதிகம் பிடித்துப்போக, படத்திற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். பொங்கலுக்கு விஜய் அண்ணனோடு வர்றோம் என்று போஸ்டர் ஒட்டி பல விஜய் ரசிகர்களையும் தியேட்டருக்குள் இழுக்கிறார் ஜி.வி.

‘எனக்கு வாய்த்த அடிமைகள்’

ஜெய், பிரணிதா, கருணாகரன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து, புதுமுக இயக்குநர் மகேந்திரன் இயக்கியிருக்கும் படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. எப்ப வேணாலும் வருவோம் என்ற அறிவிப்போடு இருந்தவர்கள் தை பொங்கலுக்கு தைரியமா வர்றோம் என்று போஸ்டர் அடித்துள்ளனர். ஜெய் ஸோலோ ஹீரோவாக நடித்த சில படங்கள் சரியாக போகாததால் இந்த படத்தின் மூலம் தனது ஹீரோ அந்தஸ்த்தை எப்படி தங்க வைத்து கொள்கிறார் என்று பார்ப்போம். 

‘குற்றம் 23’

‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ படங்களுக்கு அடுத்து இயக்குநர் அறிவழகன் இயக்கியிருக்கும் படம் ‘குற்றம் 23’. முதல்முறையாக நடிகர் அருண் விஜய் போலீஸாக நடிக்கிறார். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது. தற்போது இந்த படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அறிவழகனின் ஸ்டைல் பலருக்கும் பிடித்திருப்பதால் இந்த படத்தில் போலீஸ் ஸ்டோரியை எப்படி இயக்கியிருக்கிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளனர்.

‘யாக்கை’

குழந்தை வேலப்பன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், கிருஷ்ணா-ஸ்வாதி நடித்திருக்கும் படம் ‘யாக்கை’. இந்த படத்தில் யுவன் பாடிய 'நீ' பாடல் செம ஹிட் என்பதால் பலரின் கண் இந்த படத்தின் மீது இருக்கிறது. ‘ஜோக்கர்’ படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது கூடுதல் கவனம். கிருஷ்ணாவிற்கு இந்த படம் ப்ரேக் கொடுக்குமா என்று பார்ப்போம்.

‘அதே கண்கள்’

கலையரசன், ஜனனி, ஷிவதா நாயர், பால சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘அதே கண்கள்’. தனது நடிப்பால் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் கலையரசன். தற்போது அவர் ஸோலோ ஹீரோவா நடித்திருப்பதால் இந்த படம் அவரது கேரியரில் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது. பல பெரிய படங்கள் ரிலீஸாகும் நாளில் இந்த படமும் வருவதால் பலர் கவனிக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அதையும் தாண்டி இந்த படம் எப்படி பெயர் எடுக்கிறது என்பதை பார்க்கலாம். 

ஒரே நாளில் இத்தனை படங்கள் வந்தால் மக்கள் எப்படி சமாளிப்பார்கள்..? முதலில் இத்தனை படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா..? என்று பல கேள்விகள் எழுகின்றன. பொங்கல் தினத்திற்கு இன்னும் 25 நாட்களுக்கு மேல் உள்ளதால் இந்த ரேஸில் இருந்து சில படங்கள் விலகிக்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பார்க்கலாம்..!

மா.பாண்டியராஜன்