Published:Updated:

‘எங்களுக்குள் எப்போதும் நல்ல உறவுதான்!’-ராமராஜன் பற்றி நளினி

‘எங்களுக்குள் எப்போதும் நல்ல உறவுதான்!’-ராமராஜன் பற்றி நளினி
‘எங்களுக்குள் எப்போதும் நல்ல உறவுதான்!’-ராமராஜன் பற்றி நளினி

80களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை நளினி. அன்றைய காலகட்டத்தில் கதாநாயகியாக உச்சத்தில் இருந்தவர். அதே நேரத்தில் தான் ராமராஜனும் உச்சத்தில் இருந்தார். அப்படி இருவரும் திரையுலகில் உச்சகட்டத்தில் இருக்கும்போது, 1987 இருவரும் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் உள்ளனர். பின்னாளில் ராமராஜன், நளினி இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். அதற்குப் பிறகு, நளினி முதன் முதலில் 'கிருஷ்ணதாசி' சீரியல் மூலம் டிவி சேனலுக்குள் வந்தார். சன் டி.வி.யில் ஒளிபரப்பான 'கோலங்கள்' சீரியலில் அவர் நடித்த மாமியார் பாத்திரம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் மட்டுமல்லாது இப்போது தெலுங்கு சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார் நளினி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகும் 'டார்லிங் டார்லிங்' சீரியலிலும் காமெடி மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம், கலகலப்பாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார் நளினி, 

''ஏன் இப்போதெல்லாம் சினிமாவில் வில்லியாக நடிப்பதில்லை?''

''கதாநாயகியாக நடித்தப் பிறகு சீரியலுக்குள் வந்தேன். சிவப்புக் கம்பளம் விரித்து என்னை சின்னத்திரை வரவேற்றது. ஹீரோயினாக நடித்துவிட்டு வந்த எனக்கு வில்லி ரோல் கொடுக்கப்பட்டது. அதிலும் என் திறமையைக் காட்ட ஆரம்பித்தேன். அதற்காக மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. சீரியல்களிலும் அதே போல கண்களை உருட்டி உருட்டி நடிக்க வேண்டியிருந்தது. உடல் பாவனையும் மிக முக்கியம். கண்களை உருட்டி உருட்டி நடிப்பதற்கு முன்னாடி 'eye sight' பிரச்னை இருந்தது. கண்களை சரியாக அசைப்பதால் அந்தப் பிரச்னையும் சரியாக இப்போ நான் கண்ணாடிப் போடுறதே இல்ல. ஆரம்பத்தில் வில்லிக் கேரக்டருக்காக முகப் பாவனையில் இருந்து பாடி லாங்குவேஜ் வரை மாற்ற வேண்டியிருந்தது. வீட்டுக்குப் போனாலும் சீரியஸாகத்தான் இருப்பேன். இதை என் பிள்ளைகள் பார்த்துவிட்டு, இனிமேல் வில்லிக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என சொல்லிவிட்டனர். அதற்குப்பிறகு பெரும்பாலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களுக்கே முன்னுரிமை கொடுப்பேன்.  தற்போது 'சிங்கம் 3' படத்தில் சூரியின் மனைவி ரோலில் நடித்திருக்கிறேன். கஞ்சத்தனமான மாமியாராக 'அம்மன்னா கோடலா' சீரியலில் நடித்ததற்காக கடந்த ஆண்டு ஆந்திரா அரசு விருதான 'பெஸ்ட் அத்தை விருது' என பல விருதுகளை வாங்கியுள்ளேன். அந்த சீரியல் 700 எபிசோடுகளை தாண்டியுள்ளது''.

''சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் எப்படி வில்லி, நகைச்சுவை என்கிற கதாப்பாத்திரமாக மாறினீர்கள்?''

''எனக்கும் ஆரம்பத்தில் இதில் விருப்பம் இல்லாமல் தயங்கியபடி தான் இருந்தேன். ரசிகர்கள் இந்த கதாப்பாத்திரங்களில் என்னை ஏற்றுக் கொள்வார்களா என்கிற பயமும் இருந்தது. அப்போதுதான், 'சின்னப்பாப்பா பெரியபாப்பா' டைரக்டர் சக்திவேல் 'உங்களுக்கு கண்டிப்பா இது பெயர் வாங்கிக் கொடுக்கும் என சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார். நான் எதிர்பார்க்காத அளவுக்கு பலரிடமும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. ஒவ்வொரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் போகும் பொழுது என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.''

''சமீபத்தில் உங்கள் கணவர் ராமராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும்  நீங்கள்தான் கவனித்துக் கொண்டீர்களாமே?''

''நானும் இந்த செய்தியைக் கேள்விபட்டபோது அவருக்கு போன் பண்ணி விசாரிச்சேன். 'எனக்கு ஒண்ணுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்'னு சொன்னார். ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த செய்தி கேட்டு, திடீரென ராமராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றார் என்கிற செய்திகள் எல்லாம் உண்மையில்லை. மற்றபடி, எப்போதும் நார்மலாகப் பேசிக் கொள்வோம்''.

''அப்படியா...? தற்போது இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறீர்களா?''

தனித்தனியாகத் தான் இருக்கிறோம். ஆனால், அடிக்கடிப் பேசிக் கொள்வதுண்டு.

''நல்ல நட்புடன் இருக்கும் பொழுது மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் எப்போதாவது வந்திருக்கிறதா?''

''அப்படி எதுவும் தோன்றியதே இல்லை. நான் இப்போது பல சீரியல்களில் பிஸியாக இருந்து வருகிறேன். அவரும் அவருடைய பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். என்னுடைய பிள்ளைகள் இருவருடைய திருமணத்தையும் முன் நின்று நடத்தி வைத்தார். எங்கள் இருவருக்குள்ளும் தீய எண்ணம் எதுவும் இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்ட பிறகுக்கூட நன்றாகத்தான் பழகிக்கொண்டிருக்கிறோம். 'எங்களுக்குள் எப்போதும் நல்ல உறவுதான். ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கிறோம். அவ்வளவுதான்''.

''புதிதாக கமிட் ஆகியிருக்கும் ஜீ தமிழ் 'டார்லிங் டார்லிங்' சீரியலில் உங்கள் பங்கு?''

''சீரியல்களில் பொதுவாக மாமியார் என்றால் வில்லியாகத்தான் இருப்பார் என்கிற இலக்கணத்தை உடைத்தவள் நான். இந்த சீரியலில் முழுக்க முழுக்க மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் மாமியாராக நடித்திருக்கிறேன். மகன் தான் எனக்குப் பயந்துகொண்டிருப்பான். சீரியல் முழுக்க நகைச்சுவைத் ததும்பும். ஷூட்டிங் ஸ்பாட்லயும் அப்படித்தான். சித்ராவுக்கு நான் வைக்கும் காரக்குழம்பு என்றால் உயிர். நந்தினிக்கு நான் எந்த உணவு செய்து கொண்டு போனாலும் ரசிச்சு சாப்பிடுவா. 'அம்மா அம்மா'னு என் மேல உயிரையே வச்சிருக்குங்க நந்தினியும், சித்ராவும்''. 

- வே. கிருஷ்ணவேணி