Published:Updated:

காதலுக்கு மரியாதை செய்! #LoveAndLoveOnly

காதலுக்கு மரியாதை செய்! #LoveAndLoveOnly
காதலுக்கு மரியாதை செய்! #LoveAndLoveOnly

“ஜீவாவ நான் விட்டுக்கொடுக்குறேன், அவங்க பெத்தவங்களுக்காக! ஜீவா என்னை தாரை வாக்கறாரு, என் குடும்பத்திற்காக..” பெற்றவர்களுக்காக தங்கள் காதலையே தியாகம் செய்து காதலுக்கு மரியாதை செய்து நேற்றுடன் 19 வருடங்களாகிவிட்டது. ஃபாசில் இயக்கத்தில் விஜய்-ஷாலினி நடிப்பில் இளையராஜா தாலாட்டலில் காதலை மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்திய விதத்தினால் இன்றும் நினைவுகளில் நிறைகிறார்கள் ‘காதலுக்கு மரியாதை’செய்தவர்கள்.

காதலும், காதல் நிமித்தமுமாக எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் இப்படம் ரசிகனால் கொண்டாடப்பட்டது. டைட்டிலிலே இளசுகளின் மனதில் மரியாதையாக ஓர் இடம்பிடித்தது. காதலையும் பதிவுசெய்துவிட்டுச் சென்றது. அன்றைய தினத்தில் 100 நாட்களைத் தாண்டியும் திரையங்குகளில் பூஜிக்கப்பட்டது. யார் இந்த ஜீவாவும் மினியும்? இவர்களுக்கான மதவேற்றுமைகளை மீறி, எதற்காக இவர்களுக்குள் காதல் துளிர்விட்டது? திருமணம் செய்யத் துணிந்த இவர்கள், க்ளைமேக்ஸில் திருமணத்தை நிராகரிக்க காரணம் என்ன? எதிர்பாராத க்ளைமேக்ஸ் என முழுபடமும் டெம்போ இறங்காமல் காதலைச்சொல்லும்.

விஜய்யும் ஷாலினியும் போட்டிப்போட்டு நடித்தப் படம். புக் ஷாப்பில் ஷாலினியை சந்திக்கிறார் விஜய். ஷாலினியின் விழிகளில் விழுந்து கரைகிறார். லவ் & லவ் ஒன்லி புத்தகத்தை ஒரே நேரத்தில் எடுக்கிறார்கள். விழிகள் அகலாமல் இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த நொடியிலேயே காதல். அடுத்தடுத்த காட்சிகளில் ஷாலினியைப் பின் தொடர்கிறார் விஜய். விஜய்யின் நண்பர்களாக தாமு, சார்லி. ஷாலினியின் முதல் அண்ணனிடம் போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்க, மருத்துவமனையில் இரண்டாம் அண்ணன் என்று மூன்று அண்ணன்களிடமும் சரிசமமாக காயங்களை காதலுக்காக பெறுகிறார் விஜய். ஷாலினியும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, இருவருமே வீட்டை விட்டு காதலைத் தேடி வெளியேறுகிறார்கள். சார்லியின் வளர்ப்புத் தந்தை மணிவண்ணன் இவர்களின் காதலைத் திருமணமாக நிறமாற்றம் செய்ய துணிகிறார்.  அந்தவேளையில் இருவருமே பிரியும் முடிவுக்கு வருகிறார்கள். சில நாட்கள் பழக்கத்திற்காக பலவருட சொந்தங்களை உதறுவதில் விருப்பமில்லை அவர்களுக்கு. அதற்குப் பிறகான சென்டிமென்டல் டச்சுடன் முடிகிறது “காதலுக்கு மரியாதை”. 

விக்ரமன் இயக்கத்தில் “பூவே உனக்காக” படம் மூலமாக விஜய் பெற்ற குடும்பத்து ரசிகர்களை, இன்றுவரையிலும் தக்க வைக்க காரணம் இப்படம். குறிப்பாக பெண் ரசிகர்களை விஜய் கவர்ந்த படமும், அன்றைய தேதியில் அதிகநாள் ஓடி விஜய்க்கு வசூலில் சாதனை படைத்த படமும் இதுவே. மலையாளத்தின் வெற்றி இயக்குநர் ஃபாசில், திடீரென தமிழில் ஒரு படம் இயக்குவார். அதுவும் அதிரிபுதிரி ஹிட்டடிக்கும்.

அந்த வகையில் தமிழில் ஃபாசிலின் 'காதலுக்கு மரியாதை' என்றுமே முதலிடம். மலையாளத்தில் அனியத்தி புறாவு (Aniyathipraavu) என்று இவர் இயக்கிய படத்தை தமிழ் ரீமேக்காக, புதுமையான திரைக்கதையுடன், நேர்த்தியான நடிப்புடன் படத்தின் வெற்றியை உறுதிசெய்தார்.  ரீமேக் படத்தின் மீதான விஜய்யின் நம்பிக்கைக்கு முதல் சுழி போட்ட படம். 

“நீ என் மனசுல பெரிய சுமையா இருக்குற. உன்ன பார்த்த நொடியில இருந்தே என் மனசு குத்திக்கிட்டே இருக்கு. நீ விரும்புறனு சொன்னா அந்த வேதனை போய்டும். நீ விரும்பலனு சொன்னா கூட போய்டும். நீ என்ன விரும்புறனு முடிவு பண்ணிடலாமா? விரும்புறியா இல்லையானு” வார்த்தையாலே மிரட்டி... ஷாலினியின் காதல் சொல்லவைப்பார் விஜய். அந்த தருணங்களில் கண்களால் பார்க்கிறார். கண்களால் பேசுகிறார். கண்களால் சினுங்குகிறார் என ஒவ்வொரு காட்சியிலும் கிறங்கடித்திருப்பார் ஷாலினி. அப்பாவித்தனமான அந்தக் காதல் ஷாலினியின் ப்ளஸ்.

அநீதியை எதிர்த்து கேள்விகேட்கும் மாஸ் ஹீரோ, துப்பாக்கியால் வில்லன்களை சரமாரியாக சுட்டுவீழ்த்தும் போலீஸ் கதைகளையே தமிழ்சினிமா ரசிகர்கள் பார்த்துப் பழகிய நேரத்தில், காதலுக்காக சாகசங்கள் செய்யாமல், காதலையே தியாகம் செய்த இடத்தில் வித்தியாசப்படுகிறது “காதலுக்கு மரியாதை”.

இந்தப் படத்தை நாம் அளவுக்கு அதிகமாக காதலித்ததற்கு மற்றுமொரு காரணம் இளையராஜா. விஜய் காதலைச் சொல்லும் இடத்திலும், காதலே வேண்டாம் என்று பிரியும் காட்சியிலும் சிலிர்க்கவைத்திருப்பார். காதலியிடம் காதலைச் சொல்ல நினைக்கும், தயங்கும் நவீன நெட்டிசன்களின் மனதிலும் “என்னைத் தாலாட்ட வருவாளா.... ” நிச்சயம் ஒலித்துக்கொண்டு தான் இருக்கும். 

காதலுக்கு எதிர்ப்பு சூழ்ந்த அன்றைய நாட்கள். இதில் மதம் மாற்றி காதல் என்றாலே வன்முறையை கையிலெடுக்கும் சமூகத்தில், நிச்சயம் இப்படம் புரட்சியை செய்துவிட்டு தான் சென்றது. அதற்கு ஸ்ரீவித்யாவிடம் லலிதா சொல்லும் டையலாக்கே ஆகச்சிறந்த உதாரணம். 

காதலையும் தமிழ் சினிமாவையும் நிச்சயம் பிரித்துப்பார்க்கமுடியாது. அந்த அளவிற்கு காதலால் உருவான பல கதைகள் தமிழ் சினிமாவிற்கும், ரசிகனுக்கும் பரிச்சயம். அதில் நிச்சயம் 'காதலுக்கு மரியாதை' தனித்து நிற்கும்.

நிஜவாழ்க்கையில் எத்தனையோ காதலர்கள், பெற்றோருக்காக தங்களின் காதலைத் தியாகம் செய்திருப்பார்கள். அதற்கான சுவடுகள் நிறைந்திருந்தாலும் காதல் மட்டும் குறைவதில்லை.  ஜீவா - மினிக்கு நிகழ்ந்த அந்த மேஜிக் அனைத்து காதலர்களின் வாழ்விலும் நிகழ்வதே..... நிஜமான காதலுக்கு மரியாதை! 

- பி.எஸ்.முத்து