Published:Updated:

'பனானா' பவுன்ராஜ் முதல் யோகிபாபு வரை - 2016 ன் டாப் காமெடியன்ஸ்!

'பனானா' பவுன்ராஜ் முதல் யோகிபாபு வரை - 2016 ன் டாப் காமெடியன்ஸ்!
'பனானா' பவுன்ராஜ் முதல் யோகிபாபு வரை - 2016 ன் டாப் காமெடியன்ஸ்!

டிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடி ஃபீல்டில் இல்லாத இந்த வருடத்தில் 'பனானா' பவுன்ராஜ், யோகிபாபு எனப் பல புது காமெடியன்ஸ் குறுக்கே புகுந்து ஸ்கோர் செய்தார்கள். ஒரு படம் வெற்றிப்படமாவது அந்தப் படத்தில் ஹிட் அடிக்கும் காமெடிக் காட்சிகளையும் வைத்துத்தான். 2016 -ல் காமெடியில் கலக்கியவர்களின் லிஸ்ட் இது... 

பவுன்ராஜ் : 

இந்த வருடத்தில் இவர் நடித்ததே இந்த ஒரு படம்தான். ஆனாலும், பார்க்கும் ரசிகர்களைப் படம் முழுக்க விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார் 'பனானா பவுன்ராஜ்'. 'என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை' எனச் சொன்னது இவர் ஸ்லாங்கில் எட்டுத்திக்கும் ஹிட் அடித்த காமெடி. ஒவ்வொரு ஊர்ப் பஞ்சாயத்துக்கும் ஃபாலோ பண்ணிப்போய் அவ்வப்போது கவுன்ட்டர்கள் இறக்குவது, சூரியைக் கலாய்ப்பது என பாடி லாங்குவேஜ், டைமிங், ஸ்லாங் எனப் பட்டையைக் கிளப்பினார். இதற்கு முன்பு, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலும் கிச்சுக்கிச்சு மூட்டிய இவர் இயக்குநர் பொன்ராமின் அசிஸ்டென்ட் டைரக்டராம்.

யோகி பாபு : 

வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடியனாக நடிக்காத இந்த வருடத்தைக் கொஞ்சம் நிரப்பியதில் நிறையப் பங்கு யோகி பாபுவுக்கே. புறாக்கூடு போல மண்டை, ஸ்டைலிஷ் இங்கிலீஷ் எனப் பார்த்ததும் சிரிக்கவைக்கும் தோற்றத்தைச் சரியாகப் பயன்படுத்தி இந்த வருடம் இவர் செய்தது காமெடி டிராஜடி. 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', 'ரெமோ', 'ஆண்டவன் கட்டளை, 'குற்றமே தண்டனை' உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தார். 'ஆண்டவன் கட்டளை'யில் விஜய் சேதுபதியோடு அலைந்து திரிந்து வாடகைக்கு வீடு தேடுவது, 'ரெமோ'வில் 'ரெஜினா மோத்வானி'க்கு ரூட் போடுவது என காமெடி கிடார் வாசித்தார். குழந்தை ரசிகர்களைத் தன்னிடத்தில் ஈர்க்கும் மேஜிக் வடிவேலுவுக்குப் பிறகு இவருக்கு வெகுவாய் வாய்த்திருக்கிறது. இந்த வருடத்தின் காமெடி பாம் யோகிபாபு. 

விஜய் வரதராஜ் : 

இந்த ஆண்டின் இன்னொரு புதுவரவு காமெடியன் விஜய் வரதராஜ். 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் ஜி.வி.பிரகாஷின் நண்பனாகக் கூடவே லந்து பண்ணிய விஜய் வரதராஜுக்கு வாய்ஸ் மாடுலேஷன், டயலாக் டெலிவரி எல்லாம் பக்கா. இந்தப் படத்தின் மூலம் சினிமாத் துறையில் கவனிக்கப்படும் காமெடி நடிகராகவும் வலம் வருகிறார். 

பால சரவணன் :

'ஒரு நாள் கூத்து' படம் பாலசரவணனுக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. இந்தப் படத்தில் நடித்த 'அண்டா' நடிகரும் கவனிக்கப் பட்டார். மேலும் இவர் நடித்த 'கவலை வேண்டாம்', 'ராஜா மந்திரி' படங்களிலும் தனக்குரிய ரோலைச் சிறப்பாகச் செய்துமுடித்திருந்தார். 

ஆர்.ஜே.பாலாஜி : 

ஹியூமர்சென்ஸ், கடகட டயலாக் டெலிவரி, எல்லோரையும் கலாய்க்கும் ரோல் என மொத்தமும் ஒருசேர வாய்க்க, 'க்ராஸ் டாக்' பாலாஜி இந்த வருடமும் காமெடியில் கலக்கினார். 'கடவுள் இருக்கான் குமாரு' படம் இந்த வருடத்தில் அவருக்கு குட் கிராஃப் ஏற்றிக் கொடுத்த படம். ஜி.வி.பிரகாஷுடன் சேர்ந்து மீடியாக்களை வறுத்தெடுத்து வடகமாய்க் காயப்போட்ட 'கடவுள் இருக்கான் குமாரு' பாலாஜியின் காமெடி இல்லையெனில் சுத்தமாகத் துடைத்துத் தொங்கப்போடப்பட்டிருக்கும். 'கவலை வேண்டாம்' எனப் படத்தின் பெயர் வைத்தாலும் பாலாஜிக்கு அந்தப் படத்தில் கவலை தீரவில்லை என்பதே நிஜம். 

பரோட்டா சூரி :

'ரஜினிமுருகன்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' எனக் கலகல காமெடிப் படங்களில் நடித்து டென்ஜன் ரசிகர்களை கூல் ஆக்கிய சூரி எப்போதும் போல இந்த வருடமும் கிராமத்து ரசிகர்களின் டாப் சாய்ஸ். அவர் இங்கிலீஷ் பேசும் ஸ்டைலுக்கே லட்ச ரசிகர்களின் அப்ளாஸ்.'ப்ளீஸ் எல்ப் மீ... ப்ளீஸ் எல்ப் மீ...' என அவர் கையை ஆட்டி மிரட்டும் காட்சிகள் உட்பட அவருக்கே உரிய மேனரிசத்தோடு செய்த அதகளம். தனக்கு எது வரும் எனத் தெரிந்து ஸ்டைல் காமெடியை இறக்கிவிடும் சூரி, காமெடியில் கில்லாடி. 

ரோபோ சங்கர் : 

ரோபோ சங்கர் பத்துப் படங்களுக்கும் மேல் இந்த வருடத்தில் நடித்திருந்தாலும் அவர் பேர் சொல்லிய படங்கள் ஒன்றிரண்டுதான். அதில் ரொம்பவே ஸ்பெஷல் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'. ஒரே வசனத்தை டயர்டாகாமல் சொல்லியெ எல்லோரையும் டயர்டாக்கி ரசிகர்களை உருண்டு புரண்டு சிரிக்க வைத்தார். 'அன்னிக்குக் காலையில ஆறு மணி இருக்கும்...' வசனம்தான் இந்த வருடத்தின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற காமெடி டயலாக். சின்னக் குழந்தையைப் போல மிட்டாயைச் சப்பிக்கொண்டே கார்ட்டூன் பார்த்துக்கொண்டே அவர் கலாய்த்தது கலகல.

சதீஷ் :

வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடித்து வந்த சதீஷ் இந்த வருடம் அரை டஜன் படங்களுக்கு மேல் தலையைக் காட்டினார். சில படங்கள் சறுக்க, 'தேவி', 'றெக்க', 'ரெமோ' ஆகிய படங்கள் தூக்கி நிறுத்தின. இந்த மூன்றும் ஒரே நாளில் ரிலீஸான படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைமிங்கில் டயலாக் பாஸ் செய்வதில் சதீஷ் எப்போதும் கில்லி. அவருக்கு சிறப்பான காம்போ அமைந்தால் அந்தப் படத்தில் நகைச்சுவை தெறிக்கும்.

பிபின் : 

தமிழில் வெளிவந்த பிளாக் ஹியூமர் படமான 'ஜில் ஜங் ஜக்' தமிழ் சினிமாவில் காலங்காலமாக இருந்துவந்த கதைக் கட்டுமானங்களை உடைத்துப் புதுவித அனுபவத்தைக் கொடுத்தது. வாட்ஸ் அப் தலைமுறை மக்கள் மத்தியில் மோஸ்ட் பாப்புலர் கேரக்டரான 'ஹர ஹர மஹாதேவகி' வாய்ஸை அந்த மொட்டைத்தலை கேரக்டருக்குக் கொடுத்து இன்னும் கலகலப்பாக்கியது இந்தப் படத்தின் ஸ்பெஷல். 'ஹர ஹர மஹாதேவகி'யின் ரசிகர் வட்டத்தை அப்படியே படத்திற்கும் பயன்படுத்திக்கொண்ட வகையில் காமெடியில் சைலன்ட்டாக கெத்து காட்டியது இந்தப் படம். 

ஆனந்தராஜ் : 

ஒரு காலத்தில் வில்லன் நடிகராக முறைத்து மிரட்டிக்கொண்டிருந்த ஆஜானுபாகு ஆனந்தராஜ் கடந்த வருடங்களிலேயே 'காமெடி பீஸ்' ஆக நடிக்கத் தொடங்கிவிட்டார். சென்ற வருடத்தில் இவர் நடிப்பில் 'நானும் ரெளடிதான்' படத்தில் காமெடி ரௌடியாக இவரை ஃபார்ம் ஆக்கியது. 'என்னடா பாம் எல்லாம் போடுறீங்க...' வசனம் மீம்ஸ் வஸ்துவாகப் பயன்படுத்தப்பட்டதே அதற்குச் சான்று. இந்த ஆண்டில், 'தில்லுக்கு துட்டு' காமெடிப் பேய்ப் படத்தில் சந்தானத்திற்கு அப்பாவாக விக் வைத்து நடித்தார். வில்லன் நடிப்பு இன்னும் விட்டுப் போய்விடவில்லை போல... காமெடி சீன்களிலும் இந்த மனிதர் முறைத்துக்கொண்டேதான் இருக்கிறார்.

- விக்கி

அடுத்த கட்டுரைக்கு