Published:Updated:

''அஜீத் பிரியாணி சமைக்கும் போது முதலில் இதைத்தான் செய்வார்!'' - உடன் இருந்தவரின் ஷேரிங்

''அஜீத் பிரியாணி சமைக்கும் போது முதலில் இதைத்தான் செய்வார்!'' - உடன் இருந்தவரின் ஷேரிங்
''அஜீத் பிரியாணி சமைக்கும் போது முதலில் இதைத்தான் செய்வார்!'' - உடன் இருந்தவரின் ஷேரிங்

கடந்த 30 வருடங்களாக தன்னுடைய காமெடி கலந்த நடிப்பு பயணத்தில் ஓய்வில்லாமல் பயணித்து வருபவர். விஜய், அஜித், ஆர்யா... எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இன்று வரை அந்த நட்பை தொடர்ந்து வருபவர்தான் காமெடி நடிகர் சுவாமிநாதன். தற்போது பல புதுமுகங்களுடனும் அவருடைய காமெடி செட் ஆவதுதான் செம்ம ஹிட். தற்போது அஜீத்தின் புதுப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு, பரத், நமீதா நடிக்கும் 'பொட்டு' பேய் படத்திலும், விஷ்ணு விஷால் படங்களிலும் நடித்து வருகிறார். மணல் கயிறு 2 படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில் இருந்தவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.  

"சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாத்தியார்தான் உங்களுக்கும் வாத்தியாராமே?"

''அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ரஜினி சார் நடிப்புப் பயிற்சி பெற்ற வாத்தியாரிடம் தான் நானும் பயிற்சிப் பெற்றேன். நான் இந்தத் துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் நான் எவ்வளவு ஆர்வமாக நடித்தேனோ அதே ஆர்வத்துடன்தான் இப்போதும் நடித்தும் கொண்டிருக்கிறேன்."

"உங்களுடன் பழகியவர்களில் நட்புடன் தொடர்பவர்கள்?"

''நிறையப் பேர் இருக்கிறார்கள். அதில் மூன்று பேர் தான் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அஜித், எஸ்.வி.சேகர், சந்தானம். 'பெரிய இயக்குநர்கள் படத்தில் ஏன் நீங்கள் நடிக்கவில்லை' எனக் கேட்டு 'மணல் கயிறு 2' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கொடுத்தார் எஸ்.வி.சேகர். அதை நட்புக்கு மரியாதையாகவே பார்க்கிறேன். 'லொள்ளு சபா' காலத்தில் இருந்து இப்போதும் எங்கு பார்த்தாலும் அருகில் அழைத்து பேசக்கூடிய ஒரே நபர் சந்தானம். எப்போது என்னைப் பார்த்தாலும் நலம் விசாரித்து, நிறையப்பேசுவார். அஜித் சாரைப் பொருத்தவரை சகஜமாகப் பழகும் பழக்கம் உள்ளவர். அவர் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், அந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் சீன்களில் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு 'வேதாளம்' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இப்போது 'தல 57' -வது படத்தில் நடிக்கிறேன். அவர் எல்லோரையும் விட வித்தியாசமானவர்." 

"ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் எப்படிப் பழகுவார்?"

"எல்லோரிடமும் சரிசமமாகப் பழகக்கூடியவர். இத்தனை வருடங்களில் இப்படி ஓர் இனிமையான நபரைப் பார்த்ததே இல்லை. அவ்வளவு அன்பானவர். ரொம்ப தங்கமான ஆளு. சுவாமி சார்னு மரியாதையா கூப்பிடுவார். எவ்வளவோ ஹீரோக்கூட நடிச்சிருக்கேன். இந்த மாதிரி எந்த ஹீரோக்கூடயும் நெருக்கமா இருந்தது இல்ல. ஃபேமிலியில கூட இருக்க மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். வெளிநாட்டில் ஷூட்டிங் நடக்கும்போது, எங்களிடம் 'வீட்டுக்குப் போன் பண்ணி பேசிட்டீங்களா..?' என நடிகர்கள் முதல் டெக்னீஷியன் வரை எல்லாரிடமும் கேட்டுவிட்டுத்தான் தூங்கப் போவார். அவர் என்ன சாப்பிட்டாலும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார். என்றைக்குமே அவர் கேரவனுக்குள் உட்கார்ந்தது இல்லை. நாங்க டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பக்கத்துல வந்து உட்கார்ந்து அவரும் நம்மக்கூட சேர்ந்து டீ சாப்பிடுவார். ஜாலியாக இருக்கும்போது தோளில் கைப் போட்டு பேசிக்கொண்டிருப்பார். தன்னோட கையால தான் எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுவார்."


"ஷூட்டிங் ஸ்பாட்ல அஜீத் எப்படி பிரியாணி சமைப்பார்?"

"ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் டைம் கிடைக்கும்போது பிரியாணி சமைப்பதில் இறங்கிவிடுவார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பிரியாணி சமைப்பதாக முன் கூட்டியே சொல்லிவிடுவார். அதன்படி தேவையானப் பொருட்களை சமைப்பவர்கள் தயார் செய்து வைத்துவிடுவார்கள். அதற்கு முன்பாக ஷூட்டிங்கில் சமைக்கும் சாப்பாட்டை குறைத்து சமைக்கச் சொல்லிவிடுவார். அவர் பிரியாணி சமைக்க ஆரம்பிக்கும்போதே அந்த இடம் கலகலப்பாக மாறிவிடும். பிரியாணிக்கு என்று தயாராக வைத்திருக்கும் பொருட்களை அடுப்பு அருகே கொண்டு வந்து வைத்துவிடுவாங்க. அவருடன் எப்பவும் கூடவே இருக்கும் ஒரே நபரான மேக்கப் மேன், அசிஸ்டன்டான சக்தி மட்டும்தான் அஜித் சமைக்கும் பொழுது கூட இருப்பார். அவர்தான் அவருக்கான உதவிகளைச் செய்து கொண்டிருப்பார். மற்ற யாரும் வர வேண்டாம்னு சொல்லிடுவார். ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்துப் போடுவார். எவ்வளவு பொருட்கள் வேண்டுமோ அதற்கு மேல் ஒரு துளி கூட, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்காது. ஒவ்வொன்றுக்கும் பிறகு பொருட்களைச் சேர்த்து வேக விடும்போது, வரும் வாசனையே பசியைத் தூண்டிவிடும். பிரியாணி சமைத்து தயாரானதும் டேஸ்ட் பார்த்துவிட்டு, திருப்தியான பிறகே ஒவ்வொருக்கும் அவர் கையாலயே பரிமாறுவார். ஒவ்வொரு முறை சமைக்கும்போதும் குறைந்தது 30 பேருக்கு பரிமாறுவது போலத்தான் சமைப்பார். யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கப் டேஸ்டுக்காகப் போகும்.""நீங்க அஜித் சமைத்த பிரியாணியைச் சாப்பிட்டிருக்கிறீர்களா?"

"ஒரு முறை சமைத்து முடித்துவிட்டு, எல்லோருக்கும் பரிமாறினார். என் அருகில் வந்து 'சாமி சார் சிக்கன் பிரியாணி சாப்பிட்டீங்களா'னு கேட்டார். ஐயோ சார் நான் அசைவம் சாப்பிடுறது இல்ல என சொல்லி அசடு வழிந்தேன். 'சாரி சாமி சார்'ன்னார்.. அஜித் எப்போதும் ஹெல்த் கான்சியஸாக இருப்பார். அவருடைய மனைவி ஷாலினியிடமும், குழந்தைகளிடமும் அடிக்கடி போனில் பேசுவார். யாரைப் பார்த்தாலும், 'வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா' என்று தான் விசாரிப்பார். அவரே ஷூட்டிங்கில் ஓய்வாக இருக்கும்போது தன்னோட போனில் இருக்கும் குழந்தைகளுடையப் போட்டோ, தான் ரேஸூக்குப் போனப் போட்டோக்களைக் காண்பிப்பார். எப்போதும் ஒரே மாதிரி பழகக் கூடிய ஆள் அஜித் மட்டுமே."

"மற்றவர்களிடம் அஜித் என்ன எதிர்ப்பார்ப்பார்?"

"அவரைச் சுற்றி இருப்பவர்கள் சின்ஸியராக இருக்கணும். இல்லனா அவருக்கு கோபம் வரும். 'வேதாளம்' படப்பிடிப்பின்போது காலை ஐந்து மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு கார் வந்துடும். 'சார் சீக்கிரம் வாங்க அஜித் சார் ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவார். அதுக்குள்ள அங்க இருக்கணும் என டிரைவர் அவசரப்படுத்துவார். இவங்க சும்மா சொல்லிதான் கூட்டிட்டுப் போறாங்கனு நினைச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்ல போய் நின்னா அவர் தயாராகி உட்கார்ந்திருக்கார். நான் அவர் பக்கத்துல போய், 'சார் தப்பா நினைச்சுக்காதீங்க.. எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க?' என்று கேட்டேன். 'ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்துடுவேன் சாமி சார். கை நீட்டி காசு வாங்கிட்டோம்ல அதுக்கு உண்மையா இருக்கணும். தொழிலுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கணும்' என சொன்னார். நம்ப மாட்டீங்க அந்த விஷயத்தை இப்போது நானும் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன்" 

- வே. கிருஷ்ணவேணி