Published:Updated:

’பிரசவத் தழும்புகளை நினைச்சு கலங்கியிருக்கேன்!’ - மலைகா அரோரா

’பிரசவத் தழும்புகளை நினைச்சு கலங்கியிருக்கேன்!’ - மலைகா அரோரா
’பிரசவத் தழும்புகளை நினைச்சு கலங்கியிருக்கேன்!’ - மலைகா அரோரா

'உயிரே' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'சைய்யா சைய்யா...'வுக்கு ஷாருக் கானுடன் ரயில் மீது ஆட்டம் போட்ட மலைகா அரோரா-வை நினைவிருக்கிறதா?

40 பிளஸ்சை கடந்த நிலையிலும் பாலிவுட்டின் செக்ஸி பியூட்டி ஸ்டேட்டஸை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் மாடல் ஸ்வேதா ஜெய்சங்கரின் புத்தக வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தவரிடம் பேசினோம். 'உயிரே' படத்தின் பார்ட் 2 எடுத்தாலும் அதே ஆட்டம் போடுகிற அளவுக்கு இப்பவும் செம ஹாட் மலைகா.

''குழந்தை பிறந்ததும் எல்லாப் பெண்களும் சந்திக்கிற அதே பிரச்னை எனக்கும் வந்தது. எக்கச்சக்கமா வெயிட் போட்டேன். வாழ்க்கையில முதல் முறையா வெயிட் போட்டது அப்போதான். அதைக் குறைக்கிறது எல்லாருக்கும் பெரிய போராட்டம். ஆனாலும் பண்ணித்தான் ஆகணும். ஒரு விஷயத்தின் மூலமா மட்டும் அது சாத்தியமில்லை. உணவுக்கட்டுப்பாடு, எக்சர்சைஸ், சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம், பேலன்ஸ்டு லைஃப்ஸ்டைல்னு எல்லாத்தையும் ஃபாலோ பண்ணினா மட்டும்தான் ஏறின வெயிட்டை குறைக்க முடியும்...'' என்கிறவர், ஸ்வேதாவின் இந்தப் புத்தகத்தில் தன் ஃபிட்னஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

''எக்சர்சைஸ் பண்ண முடியலை... டயட்டை ஃபாலோ பண்ண முடியலைனு எல்லாம் காரணங்கள் சொல்றவங்க, தங்களையே ஏமாத்திக்கிறாங்கன்றதுதான் உண்மை. மனசு இருந்தா எதுவும் சாத்தியம்...'' நச்செனச் சொல்கிறவர், ஆரோக்கியத்தின் அடிப்படையாகக் குறிப்பிடுவது வீட்டுச் சாப்பாடு.

''கூடியவரைக்கும் வீட்ல சமைச்ச உணவுதான் எடுத்துப்பேன். ஷூட்டிங்ல இருந்தாலும் எனக்கு வீட்டுச் சாப்பாடுதான் வரும். தினமும் காலையில எழுந்ததும் தேனும் எலுமிச்சை சாறும், பட்டைத் தூளும் கலந்த வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பேன். நிறைய பேருக்குத் தெரிஞ்ச அதே விஷயத்தைத்தான் நானும் சொல்றேன். வெள்ளையா இருக்கிற உணவுகள் ஆரோக்கியமானவை இல்லை. உதாரணத்துக்கு அரிசி சாதம், சர்க்கரை, உப்பு, மாவுப் பொருட்கள்.... அத்தனையும் எடையை அதிகரிக்கச் செய்யும். நான் ஒரு காலத்துல பயங்கர மட்டன் பிரியாணி பிரியையா இருந்தேன். குலாப் ஜாமூன் கொடுத்தீங்கன்னா எண்ணிக்கை பார்க்காம சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். ஆனா ருசியா, ஆரோக்கியமானு யோசிச்சா எப்போதும் ஆரோக்கியம்தானே முக்கியம். அதை உணர்ந்து என் டயட் பிளானை மாத்திக்கிட்டேன்.

அடிப்படையில நான் ஒரு டான்சர். டான்ஸ் பண்றவங்களுக்கு தனியா வேற எந்த எக்சர்சைஸும் தேவை இருக்காது. ஆனா என் குழந்தை பிறந்த உடனே ஏறின எடையைக் குறைக்க டான்ஸ் மட்டுமே உதவாதுனு தெரிஞ்சுதான் முதல் முறையா ஜிம்ல சேர்ந்தேன்... அழகாகவும் இருக்கணும், அதே நேரம் கஷ்டப்படாமலும் இருக்கணும்னு நினைக்கிறது பேராசை. எனக்கு அந்தப் பேராசை இல்லை....'' என்கிறவர் ஸ்வேதாவின் புத்தகத்தில் பகிர்ந்திருக்கிற இன்னொரு தகவல் அம்மாக்கள் அத்தனை பேருக்குமான அவசிய அட்வைஸ். பிரசவத் தழும்புகளை அழகுக் குறைவின் அடையாளமாகப் பார்க்கிற அம்மாக்களுக்கான மெசேஜ் அது!

''என் பையன் அர்ஹான் பிறந்ததும் என் வயித்துல ஏற்பட்ட பிரசவத் தழும்புகளைப் பார்த்து அதிர்ச்சியாயிருக்கேன். அதுவரைக்கும் ஒரு சின்ன தழும்பைக்கூடப் பார்க்காத எனக்கு, அந்த வரிகள் அசிங்கமாத் தெரிஞ்சது. பயங்கரமா கவலைப்பட்டிருக்கேன். அதுலேருந்து மீள முடியாமத் தவிச்சிருக்கேன். ஒருநாள் என் பையன் அந்தத் தழும்புகளைப் பார்த்துட்டு என்னன கேட்டான். 'நீ கிடைக்கிறதுக்காக ஒரு புலியோட சண்டை போட்டேன். அந்தத் தழும்பு'னு நான் சொன்ன கதை அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. அந்தக் கணத்துலேருந்து அந்தத் தழும்புகள் எனக்கும் அசிங்கமா தெரியறதில்லை. அது அசிங்கமில்லை.. தாய்மைக்கான பெருமையான அடையாளம்...'' என்கிறவரின் வார்த்தைகளில் நிஜமான தாய்மையின் பிரதிபலிப்பு!

-ஆர்.வைதேகி

படங்கள்: வேங்கடராஜ்

அடுத்த கட்டுரைக்கு