Published:Updated:

காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம்

காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா?  -  ’கத்தி சண்டை’ விமர்சனம்
காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம்

’நாய்’ சேகர், ‘ஏட்டு’ ஏகாம்பரம் என வடிவேலுவின் ஹிட் வெர்ஷன் கொடுத்த இயக்குநர் சுராஜுடன் வடிவேலு ‘கம்-பேக்’ கூட்டணி வைத்திருக்கும் படம், வடிவேலு - சூரி ஒரே படத்தில் காமெடி செய்திருக்கும் படம் என்று எதிர்பார்ப்புகள் சிலவற்றோடு வெளியாகியிருக்கிறது கத்தி சண்டை. காது கிழிந்ததா.. இல்லை கைதட்டலால் அரங்கம் அதிர்ந்ததா?

’6 மாதங்களுக்கு முன்’ என்றொரு ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது படம். கண்டெய்னர் லாரி, கோடி கோடியாய்ப் பணம், மடக்கிப்பிடிக்கும் ஏ.சி. ஜெகபதி பாபு என்று டைட்டில் கார்டு வரும் வரை கொஞ்சம் விறுவிறுப்பு காட்டிவிட்டு, டைட்டிலுக்குப் பிறகு புளித்துப்போன பூர்வஜென்ம புரூடா விட்டு தமன்னாவை கரெக்ட் செய்யப் பார்க்கும் விஷால், தன் காதலுக்காக சூரியை டார்ச்சர் செய்வதில் ஆரம்பிக்கிறது படம். ஒருவழியாக காதல் கைகூடி, நல்ல பேர் எடுத்து  தமன்னாவின் அண்ணனான போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபுவின் குட் புக்ஸில் இடம்பிடித்து என்று படம் ஒரு ட்ராக்கில் பயணிக்கிறது. திடீரென்று சிலர் ஜெகபதி பாபுவைக் கடத்த, விஷால் அவர்களை அடித்து துவம்சம் செய்து காப்பாற்றிக் கொண்டு வருகிற காட்சியில் அடுத்தடுத்து ட்விஸ்ட்களால் நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கிறார் இயக்குநர் சுராஜ். ‘படம் பரவாயில்லையே’ என்று நினைத்தால், அதுக்கு அப்புறம் கண்ணுக்குள் கத்தியை விட்டு ஆட்டுகிறார் இயக்குநர்.
 

இடைவேளைக்குப் பிறகு, விஷாலைத் துரத்தும் வில்லன்களிடமிருந்து விஷால் தப்பித்து, வில்லன்களிடமே மாட்டிக்கொண்டு, அதே சமயம் அவர்களிடமிருந்து தப்பித்து (குழம்புதா.. ஆனா அப்படித்தான்) சண்டை போட்டு, ‘சிட்டிசன்’ படத்தில் அஜித் சொன்ன பிளாஷ்பேக்கைச் சொல்லி, லஞ்சம், ஊழலுக்கு எதிராகப் பத்து நிமிடம் மூச்சு விடாமல் விஷால் வசனம் பேசி.... அப்பாடா, படத்தை முடிக்கிறார்கள். 
  விஷாலுக்கு இன்னுமொரு ஆக்‌ஷன் படம். தமன்னாவைக் காதலிக்கும்போது மென்முகம் காட்டும் இவர், இடைவேளைக்குப் பிறகு சண்டைக்கோழி ஆகிறார். சூரி, வடிவேலு இருவருடனும் நகைச்சுவைக் காட்சிகளில் தன்னை நன்கு பொருத்திக் கொள்கிறார். ஆனால், விஷால் நடிக்கும் எல்லாப் படங்களிலும் டாட்டா சுமோக்கள் அந்தரத்தில் பறப்பது நம் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் மிகமிகக் கேடு பயக்கும்!
    சோகமான காட்சியென்றால்கூட, 4 இஞ்ச் ஷார்ட்ஸில் வந்து உள்ளம் கொள்ளை கொள்ள முயல்கிறார் அழகுப்பதுமை தமன்னா. சோகக் காட்சி என்பதால் வருத்தப்படுவதா, தமன்னாவின் அழகை ரசிப்பதா என்று திணறித் திக்குமுக்காடித்தான் போகிறார்கள் ‘தமன்னா’ ரசிகர்கள். தமன்னாவுக்கு குரலுதவி செய்திருக்கும் மானசாவுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து.    
    முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் நகைச்சுவைக் கொடி பிடித்திருக்கிறார்கள். விஷாலிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் சூரி, பலவித கெட்டப்களில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். தன் சகாக்களோடு மகாபலிபுரத்தில் செய்யும் அட்டகாசம் சிரிசிரி பட்டாசு. தாதாக்களைக் கவிதை எழுத வைத்த ஐடியாவில் சுராஜின் டிரேட்மார்க் காமெடி ஓகே.  ‘சரித்திரத்துக்குப் பதிலா தரித்திரம்னு எழுதின.. ஆனா ஹார்ட்டுக்குப் பதிலா ஏண்டா கிட்னி வரைஞ்ச?’ என்று விஷால் சூரியை அடிக்கும் காட்சி.... டமாஸூ பட்டாசு! அடிக்க வரும் தாதாவிடம் ஆதார் அட்டை கேட்பதும், கடைசி வரை பிரியாணி தின்ன முடியாமல் அவஸ்தைப்படுவதும் கலகல. ஆனால் அந்த பூர்வஜென்மக் கதையெல்லாம் கொட்டாவி சமாச்சாரம் பாஸ்! பின்பகுதியில் சைக்கியாட்ரிஸ்ட் பூத்ரியாக வரும் வடிவேலுவின் என்ட்ரிக்குத்தான் தியேட்டரில் அதிகபட்சக் கரவொலி. அவரது ஸ்பெஷல் உடல்மொழியும், மாடுலேஷனும் ரசிக்க வைத்தாலும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் திரைக்கதையும், லாஜிக்கும்... இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்! 

‘கருப்பா இருக்கறவன் இன்னொரு கருப்பா இருக்கறவனை அடிக்ககூடாது’, ‘காக்கா கலர்ல இருக்கறவனுக்கு வோட்கா கலர்ல பொண்ணா?’ என்று பசும்பொன் ஜோதியின் வசனங்கள் அங்கங்கே கவனிக்க வைக்கின்றன. பிற்பாதி கார், பைக் சேஸிங்கில் கேமராவுக்கு எக்ஸ்ட்ரா வேலை. ‘நான் கொஞ்சம் கருப்புதான்’ பாடலின் ரயில், டெலிபோன் பூத், சிக்னல் செட்டிங்ஸுக்காக ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஸ்பெஷல் சபாஷ்!


இடைவேளை ட்விஸ்டில் அசரடித்த திரைக்கதை, அதற்குப் பிறகு ட்வெண்டி ட்வெண்டியாய் பரபர என்றிருக்கும் என எதிர்பார்த்தால் பெரும் ஏமாற்றம். வடிவேலு வந்தும் கதை நகர்வேனா என்கிறது. ‘எப்படியும் இதுக்கொரு கிராமத்து ஃப்ளாஷ்பேக் காட்டுவாங்கப்பா” என்று தியேட்டரிலேயே ரசிகர்கள் சொல்லக்கூடிய அளவுக்குப் பலவீனமான திரைக்கதை. அத்தனை பெரிய போலீஸ் அதிகாரி, தன் தங்கையைக் காதலிப்பவனைப் பற்றி விசாரிக்கும்போதே விஷாலின் பின்னணி தெரியாமலா போகும்? 
    `நான் கொஞ்சம் கருப்புதான்’ பாடலில் மட்டும் ஹிப் ஹாப் ஆதி கவர்கிறார். பின்னணி இசையில் அனிருத், இளையராஜா என்று பலரை துணைக்கு அழைத்திருக்கிறார். ‘எல்லாப் பாடல்களையும் நான்தான் பாடுவேன்’ என்று அடம்பிடிக்காமல் இருப்பது அவருக்கும் நமக்கும் நலம். விஷால், வடிவேலு, தமன்னா, சூரி என்று பவர் ப்ளேயர்ஸை வைத்துக் கொண்டு அசரடிக்கிற திரைக்கதையில் அசத்தலாக வந்திருக்கவேண்டிய படம், எப்படியோ ‘முடிந்தால் சரி’ என்ற ரீதியில் முடித்திருப்பதால் கண்களில் கத்தியை விட்டு ஆட்டி சண்டை போட்டது போல இருக்கிறது.


 சேம் ப்ளட்!

பின் செல்ல