Published:Updated:

எல்லையில் வீரர்கள் காவலிருக்கும்போது, இங்கே காதலிக்கலாமா?

Vikatan Correspondent
எல்லையில் வீரர்கள் காவலிருக்கும்போது, இங்கே காதலிக்கலாமா?
எல்லையில் வீரர்கள் காவலிருக்கும்போது, இங்கே காதலிக்கலாமா?

ஓர் ஆலமரம், நான்கு தெருக்கள், 300 வீடுகளுடன் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும், அழகான வயலூர் கிராமத்தில்தான் முழுப்படமும். பொதுவாக கிராமம் சார்ந்த படங்களில் உணர்ச்சிமிகுந்த கதைகள் இருக்கும். இல்லையென்றால் அதற்கு மாறாக கதையே இல்லாமல்  முழுப்படமும் காமெடியில் தூள் பறக்கும். இந்த இரண்டு வகைகளில் சசிகுமாரின் “பலே வெள்ளையத் தேவா” எந்த வகை...? கிராமம் முதல் சிட்டிவரை ரசிகர்களை ஈர்த்தாரா கிராமத்துக் காதலன் சசிகுமார்.....?

வேலை மாற்றல் ஆகி, தபால் மாஸ்டர் ரோகிணியும் மகன் சசிகுமாரும் வயலூர் கிராமத்திற்கு வருகிறார்கள். ஊர் தலைவர் வளவன், அந்தக் கிராமத்தில் கேபிள் டிவி  நடத்தி வருகிறார். அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டனா வாங்கிவிட்டால், போட்டுப் பொளந்துகட்டிவிடுகிறார். அந்த நேரத்தில் தான் சசிகுமார் என்ட்ரி. வழக்கம் போல டிஷ் ஆன்டனா வைத்திருக்கும் சசிகுமாரைச் சீண்டுகிறார் வளவன். இதனால் ஒட்டுமொத்தக் கிராமத்து மக்களையும் டிஷ் வாங்க வைக்கிறார். (பெரிய புரட்சி தான்...!) இவருடன் சண்டை ஒன்வேயில் போக, வழிப்போக்கில் நாயகி தன்யாவுடன் காதலில் விழுகிறார் சசி.  இவர்களையெல்லாம் கனெக்ட் செய்யும் இரண்டு கதாபாத்திரங்கள் தான் கோவை சரளாவும், சங்கிலிமுருகனும். சசிகுமாரின் காதல் கைகூடியதா, வளவனுடனான பிரச்னை என்னவானது,  தன்யாவின் தந்தையாக வரும் பாலாசிங் எதற்கெடுத்தாலும் ஏன் அருவாளை தூக்குகிறார் என்பது கதை. இது கதையா... இல்ல இதுதான் கதையானு நீங்கள் கேட்டால் தோராயமாக இதுதான் கதை!
    அறிமுக இயக்குநர்களுக்காகவே சேவை மையம் நடத்திவரும் சசிகுமார், இந்த முறையும் புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாராட்டுகள்..! ஆனால், அதே கரிசனம், அக்கறையை கொஞ்சம் அந்த ‘கதை’ விஷயத்திலும்....!?
    படித்த கிராமத்துப் பையன், மார்டன் லுக் ஜாலி பேர்வழியாக கிராமத்தைச் சுற்றி வருகிறார் சசிகுமார். “அடிடா அவனை” என அம்மா ரோகினி சொன்னால், ’ஏன்.. என்ன’வென்று கேட்காமல் போட்டு துவைத்தெடுக்கும் அதே சசிகுமார் தான். ஜாலியாக பேசுகிறார், நன்றாக நடிக்கிறார், படம் முழுவதும் நிறைகிறார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தன்யாதான் ஹீரோயின். படத்தில் ஒட்டாமல் ஆவரேஜ் மார்க் வாங்கித் தேறும் தான்யா, அடுத்தடுத்த படங்களில் அசத்துவார் என்று நம்புவோம். லோன் வாங்கிவிட்டுப் பணம் தராவிட்டால் அவர்களின் படங்களை பேனர் அடித்து கிராமத்தில் வைப்பது வழக்கம். நாயகியின் போட்டோ பேனரில் வராததால் சசிகுமார் மீது காதல் கொள்வதெல்லாம்.... ‘அங்கே எல்லையில் வீரர்கள் காவல் காக்கும்போது, இங்கே காதல் கொள்ளலாமா?’ என கேட்கத் தோன்றுகிறது!    

விழாவில் மொய் செய்யும் இடத்தில் "இந்தாய்யா.. புது ஐநூறு" என்றும், " என்னய்யா கறிக்கடையில் ஏடிஎம்மை விட அதிக கூட்டமிருக்கு" போன்ற சில டாபிக்கல் வசனங்கள்! 

படத்தின் ப்ளஸ் கோவை சரளா - சங்கிலிமுருகன் கூட்டணியில் வரும் காமெடி கலாட்டாக்கள். படத்தின் மைனஸ் ஆங்காங்கே அந்நியனாக உருமாறும் கோவை சரளாவின் ஓவர் ஆக்டிங்.  கோவை சரளாவிற்கு சிறுவயதிலேயே பல பாய் ஃப்ரெண்ட்ஸ் என்பதைக் கேட்டதும், கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் இடங்களிலும், திருட்டு வி.சி.டி. விற்பதற்காக இவர் சொல்லும் நியாயங்களுமாக சங்கிலி முருகன் நடிப்பில் டாப் கியர். 


    சசிகுமாரிடம் நகைகள் வாங்கிக் கேட்டு ஒரண்டை இழுப்பதும், “நீ செல்ஃபி காத்தாயி இல்ல... செல்ஃபிஷ் காத்தாயி..” எனுமளவுக்கு செல்ஃபி எடுக்கும் ஆன்ட்ராய்டு பாட்டியாகவும் ஜொலிக்கிறார் கோவை சரளா. ஆனால், சென்ட்டிமென்டா கதறி அழும் கோவை சரளா அடுத்தடுத்த காட்சிகளில் நகையோடு ஜொலிப்பதுதான் ஏன்னு புரியலை! 
    லா சிங் எதுக்கு அருவாளைத் தூக்குகிறார் என்பதற்குத் தரும் விளக்கம் சின்னப்புள்ளத்தனம். சீட்டுப் பணத்தை ஏமாற்றும் நாயகியை திருமணம் செய்ய, ஒட்டுமொத்த கிராம மக்களுக்கு ஒருகோடி ரூபாய் ( 2000 ரூபாய் நோட்டுகளும் அடக்கம்) பிரித்துக்கொடுப்பது எப்படி? 
    வழக்கமாக சசிகுமார் படத்தில ஒரு பாட்டாவது மனதில் நிற்கும். ஆனால், தர்புகா சிவாவின் இசையில் பாடல்களில் ஏதோ மிஸ்ஸிங். பின்னணி இசையில் நல்ல ஸ்கோர். தானே நடித்து, தானே தயாரிக்கும் மன உறுதிக்காக சசிகுமாரைப் பாராட்டுகிறோம். இயக்குநர் சசிகுமாரை பலரும் மிஸ் செய்கிறார்கள். நடிப்பை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு பழைய பன்னீர் செல்வமாக வந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ற நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை. 


அதனாலேயே, ‘பலே’ சொல்ல முடியவில்லையே வெள்ளையா!⁠⁠⁠⁠