Published:Updated:

‘அடப்பாவி’னு அவரைத் திட்டும்போது வருத்தமா இருக்கும்!’ - ஒரு மனைவியின் கலக்கம்

‘அடப்பாவி’னு அவரைத் திட்டும்போது வருத்தமா இருக்கும்!’ - ஒரு மனைவியின் கலக்கம்
‘அடப்பாவி’னு அவரைத் திட்டும்போது வருத்தமா இருக்கும்!’ - ஒரு மனைவியின் கலக்கம்

‘அடப்பாவி’னு அவரைத் திட்டும்போது வருத்தமா இருக்கும்!’ - ஒரு மனைவியின் கலக்கம்

தலைவாசல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் விஜயகுமார். அதன் பிறகு 'தலைவாசல்' விஜய் என்கிற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

'தலைவாசல்' விஜய் திரைத்துறையில் வித்தியாசமானவர். தன்னுடைய மகன் மற்றும் மகள் இருவரையும் நீச்சல் வீரர்களாக்கி, சாதிக்கவும் வைத்திருக்கிறார். இரு கைகள் தட்டினால்தான் ஓசை; அது போல அவருடைய மனைவியின் உதவி இல்லாமல் இந்தச் சாதனைகளை அவரால் நிகழ்த்தியிருக்க முடியுமா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 'தலைவாசல் விஜயின் மனைவி ராஜேஸ்வரியிடம் பேசினேன்.

''இத்தனை வருடங்களில், உங்களுக்கும் அவருக்குமானப் புரிதல் எப்படி?''

''எல்லா கணவன், மனைவியைப் போலத்தான் நாங்களும். சின்னச் சின்ன மனஸ்தாபம் வந்துபோனாலும், அதைக் கடந்துபோக கற்றுக் கொண்டோம். நிறைய விஷங்களில் விட்டுக்கொடுக்கப் பழகிக்கொண்டோம். அவருடைய தாத்தாவும், என்னுடைய தாத்தாவும் நண்பர்கள். திருமணத்துக்குப் பிறகுதான் நாங்கள் நெருங்கிய சொந்தம் என்பதே தெரிந்தது. நான் பீகாரைச் சேர்ந்தவள். அங்கேதான் பி.எஸ்.சி முடிச்சுட்டு பயாலஜி டீச்சராக ஆறு ஆண்டுகளாக வேலைப் பார்த்தேன். 1992-ம் ஆண்டு திருமணம் ஆனப் பிறகு சென்னையில் வந்து செட்டில் ஆகிட்டோம். தமிழ் அவ்வளவாகத் தெரியாததால் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டேன். இவரும் ஃபுல் டைம் சினிமா ஷூட்டிங்கிலேயே இருப்பார். அதனால் எந்த வேலைக்கும் போகாமல் ஹவுஸ் ஒய்ப்பாகவே இருந்துவிட்டேன்.''

''உங்களுக்கு உதவிகள் செய்வாரா?''

''கண்டிப்பாக. எங்கள் மகனும், மகளும் குழந்தைகளாக இருக்கும்போது நிறைய உதவிகளைச் செய்வார். இப்போதும் கூட. நான் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தால் கூட, 'வேற வேலை இருந்தா பாரு நான் பாத்துக்குறேன்' என்று சொல்லி அந்த வேலையையும் செய்வார். சமையல், வீட்டு வேலை எனப் பல வேலைகளில் அவர் உதவியாக இருப்பார். இந்த விஷயத்தில் எனக்குப் பெருமையாக இருக்கும்''. 

''குழந்தைகளை விளையாட்டுத் துறையில் கொண்டுவர வேண்டும் என்று உறுதியாக இருந்தாரா?''

''அப்படியான திட்டம் இல்லை. அவர் தாத்தா, பாட்டி வீட்டில்தான் வளர்ந்தார். தாத்தாவிடமிருந்து விளையாட்டுகளை கற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு பல போட்டிகளில் கலந்து கொண்டார். நிறைய இடங்களில் தோல்வி அவருக்கு வலியை ஏற்படுத்தியது. நம் குழந்தைகளுக்கு விருப்பம் இருந்தால் அவர்களை இந்தத் துறைக்கு கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருப்பார். டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் என பல விளையாட்டுகளில் தேர்ந்தவர் அவர். என் மகன் வயிற்றில் இருந்தபோது, இரவில் எவ்வளவு லேட்டாக வந்தாலும் சரி வயிற்றின் அருகில் வந்து, 'விளையாட்டில் உன்னாலும் சாதிக்க முடியுமடா செல்லமே'னு சொல்லிட்டே இருப்பார். அந்த தூண்டுதலோ என்னவோ எங்கள் குழந்தைகள் இருவருக்குமே விளையாட்டின் மீது வளர வளர ஆர்வம் வந்துவிட்டது. என் மகன், மகளை நீச்சல் விளையாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று, நான்கு மாதங்கள் ஆலோசித்தோம்''.


''எந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டீர்கள்?''

''குழந்தைகளை இந்தத் துறைக்குள் அனுப்புவதற்கு முன்பு என்னிடம் அவர், 'குழந்தைகள் முழு மூச்சாக விளையாட்டில் இறங்கினால் அவர்களை கவனித்து தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியிருக்கும். இப்படி முழு மூச்சாக இருந்தால் மட்டுமே அவர்களால் இந்தத் துறையில் முன்னேற முடியும். அதனால், சொந்த, பந்தங்கள் வீட்டுக்குச் செல்வது தடைபடும். உனக்கு இதில் பிரச்னை இல்லை என்றால், குழந்தைகளை இந்த துறைக்கு அனுப்பலாம்' என்றார். நான் எதையும் யோசிக்காமல் சட்டென ஓ.கே சொல்லிவிட்டேன். அதே போல எங்கள் பிள்ளைகளிடம், 'ஸ்விம்மிங்கில் இறங்கியப் பிறகு, வெயில், மழை, குளிர் என எதையும் பார்க்காமல் காலை 5.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் பயிற்சிக்குத் தயாராக இருக்க வேண்டும். முழுக்க இதில் ஈடுபடும் பொழுது சருமம் கருத்துப் போகும். இதை எல்லாம் தாங்கிக் கொள்வீர்களா?' எனக் கேட்டப் பிறகே, நீச்சல் போட்டிக்கான பயிற்சிகளைத் தொடங்க வைத்தார். எப்போதுமே பிள்ளைகளை அவர் கட்டாயப்படுத்தியதில்லை. இப்போதும் அப்படித்தான். இந்த விளையாட்டுக்கு முன்பு சில விளையாட்டுகளில் விளையாடிப் பார்த்தார்கள். எதுவும் அவர்களுக்கு பெரிதாக அமையவில்லை. நீச்சல்தான் இருவருக்குமே கைவந்தது. இப்போது அதில் சாதனை படைத்திருக்கிறார்கள்''.

''உங்கள் மகன், மகள் இருவரும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?'' 

"மகன் ஜெயவந்த் விஜயகுமார் தற்போது லண்டனில் எம்.எஸ்.ஸி சைக்காலஜி படித்துக் கொண்டிருக்கிறார். அந்த கோர்ஸ் முடிந்தப் பிறகு நம் நாட்டில் பி.ஹெச்.டி செய்ய இருக்கிறார். மகள் ஜெயவீணா ராமச்சந்திரா கல்லூரியில் பி.எஸ்ஸி  விளையாட்டுத் துறையில் மருத்துவம் படித்துவருகிறார். எங்களுக்கு மகன் பிறந்தால் கபில் தேவ் என்றும் மகள் பிறந்தால் அவருடைய பாட்டிப் பெயரான புஷ்பா என்கிற பெயரைத்தான் வைக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தார். அதே போலவே மகன் பிறந்த பிறகு அவரை கபில் தேவ் என்று அழைத்தப் பிறகே சாஸ்திரப்படி ஜெயவந்த் விஜயகுமார் எனப் பெயர் வைத்தோம். மகளுக்கும் புஷ்பா என்கிற பெயர் வைத்தப் பிறகுதான் ஜெயவீணா என்கிற பெயரை சூட்டினோம். அந்த அளவுக்கு விளையாட்டின் மீதும், உறவுகள் மீதும் பாசம் உள்ளவர்."

''நடிகருக்கு பெண் கொடுக்க, உங்கள் வீட்டில் தயக்கம் காட்டினார்களா?''

''ஆரம்பத்தில் யோசிக்கத்தான் செய்தார்கள். என்னுடைய, அப்பா, அம்மாவுக்கும் இவரை மிகவும் பிடித்திருந்தது. அதனால் திருமணத்துக்குச் சம்மதித்தார்கள். இந்தத் துறைக்கு வருவதற்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் மார்க்கெட்டிங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்குப் பிறகு அவரும் நானும் சேர்ந்து போன திரைப்படம் 'மாமியார் வீடு'. அவர் ஸ்கிரீனில் வந்ததும் 'அடப்பாவி, வந்துட்டான் பாரு' என திட்டினார்கள் அருகில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. தியேட்டரை விட்டு வெளிய வந்ததும், 'இனிமே இந்த மாதிரி கேரக்டர்ல நடிக்காதீங்க'னு சொன்னேன். அதற்கு அவர், 'இப்படி திட்டக்கூடிய அளவுக்கு என்னுடைய நடிப்பு இருக்கிறது. இது என் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்' எனப் புரிய வைத்தார். ஏனென்றால் எனக்கு சினிமாவைப் பற்றி அப்போது பெரிதாக தெரியாது. ஆனால் நிஜத்தில் அவரைப் போன்ற நல்ல குணம் உள்ளவரைப் பார்க்கவே முடியாது''.

- வே. கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு