Published:Updated:

2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்! #2016Rewind

2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்! #2016Rewind
2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்! #2016Rewind

இந்த ஆண்டின் மிக முக்கிய லிஸ்ட்களில் இதுவும் ஒன்று. இது இல்லாமல் ஆண்டுக்கடைசி  டாப் 10 பட்டியல்கள் முழுமை பெறாது. ஆம் இந்த ஆண்டில் தமிழில் அறிமுகமான கதாநாயகிகளின் பட்டியல் இது. ஆனால் மற்ற டாப் 10 பட்டியல் போல சிறப்பான நடிகை 1 வது இடம் என்றெல்லாம் கிடையாது. பத்து நடிகைகளின் வரிசை அவ்வளவே. இனி லிஸ்டுக்கு போவோம். 

மஞ்சிமா மோகன் - நிறைய மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மஞ்சிமாவுக்கு 'ஒரு வடக்கன் செல்ஃபி' மூலமாக ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. படம் பட்டாசு கிளப்பவே அடுத்த சில வாரங்களில் கௌதம் மேனன் படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுடன் தமிழில் அறிமுகமானார். தற்போது விக்ரம் பிரபுவின் படம் உட்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். "மஞ்சிமாவின் இப்போதைய ஒரே கவலை கொஞ்சம் வெயிட் போட்டதுதானாம்"

நிவேதா பெத்துராஜ் - அக்மார்க் மதுரைப்பொண்ணு கூடவே இன்னோரு தகவல் மிஸ்.துபாய் பட்டம் வாங்கிய பொண்ணும் கூட. இவரின் புகைப்படம் 'ஒரு நாள் கூத்து' படத்தின் இயக்குநர் நெல்சனின் கண்ணில் படவே ஆடிசனுக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் இவர் தான் அந்த படத்தின் பாத்திரத்துக்கு பொருந்துவார் என முடிவு செய்யப்பட்டு தேர்வானார். இன்று கையில் இரண்டுபடங்களுடன் நடித்துக்கொண்டுள்ளார். "இந்த பொங்கல் மதுரையிலதான் கொண்டாடணும்ன்னு ஆசைப்படுறாராம்" 

தன்யா - மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா இந்த ஆண்டு இயக்குநர் சசிக்குமார் தயாரிப்பில் வெளியான " பலே வெள்ளையத்தேவா" படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். படம் தற்போதுதான் வெளியாகியுள்ளது என்ற போதிலும் தன்யா நடிப்பில் ஓகே ஆகிதான் உள்ளார். விரைவில் புதிய படவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது. "பத்திரிக்கையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்ட போது அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாக  பார்த்தாராம்" 

நிகிலா விமல் - ஒரே வருடத்தில் இரண்டு படத்தில் ஒரே நாயகனுடன் நடித்துள்ளார் நிகிலா. சசிக்குமாருடன் 'வெற்றிவேல்' மற்றும் 'கிடாரி' ஆகிய படத்தில் நடித்து அறிமுகமான நிகிலா பிரபல மலையாள நடனக்கலைஞர் 'கலாமண்டபம்' விமலா தேவியின் மகள். தற்போது கையில் மேலும் இரண்டு படங்கள் வைத்துள்ளார் நிகிலா. "மேடம் தாவரவியல் இளங்கலை முடித்துள்ளார்"

ஷாலின் ஷோயா - தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஹீரோயின் சப்ளை பேக்டரியான மல்லுவுட்டிலிருந்து வந்துள்ள மற்றொரு நடிகை ஷாலின். 'ராஜா மந்திரி' படத்தில் நாயகியாக அறிமுகமானார். 19 வயதே ஆகும் ஷாலின் டிவி தொகுப்பாளராக இருந்தார். கையில் மூன்று மலையாளப்படம் இருக்கிறது. அதை முடித்த பின் தான் தமிழுக்கு கால்ஷீட் என்கிறார் ஷாலின். "ஸீடா என்கிற குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்" 

ஷனயா - நிறைய டிவி கமர்சியல்களில் தலைகாட்டியுள்ள ஷனயா சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து 'தில்லுக்கு துட்டு' படத்தில் தமிழில் அறிமுகமானார். சந்தானத்தின் அடுத்த படம் ஒன்றில் இவர் நடிக்க இருந்ததாக வெளியான தகவல்கள் தற்போது இல்லை என்றாகியுள்ளது. இருந்தாலும் தற்போது இவரிடமும் இரண்டு தமிழ்ப்படங்கள் கையில் உள்ளன.

ஷாம்லி - நமக்கு நல்லா தெரிஞ்ச பேபி ஷாம்லிதான் இருந்தாலும் ஹீரோயினா கொடுத்த எண்ட்ரி இல்லையா. 'வீர சிவாஜி' படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஏற்கனவே தெலுங்கிலும், மலையாளத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தாலும் தமிழில் இதுதான் எண்ட்ரி.  

மடோனா செபாஸ்டின் - கடந்த வருடத்தில் 'பிரேமம்' படம் கொடுத்த 'வெல்வெட் கேக்' நாஸ்டாலஜியை தமிழுக்கு நலன் குமாரசாமி அள்ளி வந்தார். 'காதலும் கடந்து போகும்' படத்தில் விஜய் சேதுபதியுடன் அறிமுகமான மடோனாவின் கையில் தற்போது இரண்டு தமிழ்ப்படங்கள் அதில் ஒன்று விஜய் சேதுபதியின் 'கவண்' மற்றொன்று தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' ரைட்டு!

அனுபமா - 'பிரேமம்' தமிழ் ரீமேக் தனுஷ் நடிக்கிறார் என்கிற பேச்சு இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியானது. அதன் காரணம் பின்னர் தான் தெரிய வந்தது. 'பிரேமம்' படத்தில் நடித்த அனுபமா 'கொடி' படத்தில் தனுஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனதுதான் அப்படி ஒரு வதந்திக்கு காரணம் ஆனது. தமிழ் யூத்துக்களுக்கு கூந்தலை விரித்துப்போட்டு நிவின் சைட் அடித்த அனுபமாவைத்தான் தெரியும். கொடியின் மூலம் தமிழ் நேட்டிவிட்டியுடன் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார் சோ கால்ட் மோஸ்ட் லவ்வபிள் 'மேரி'.  


அருந்ததி நாயர்: சைத்தானில் நடித்த தேவதை. முதலில் பாந்தமான மனைவியாகவும், பிறகு கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனமான நடிப்பிலும் பெயர் சொல்லும்படி செய்திருப்பார். வில்லன்கள் கூடாரத்தில் மிரட்டப்படும்போது கண்களில் கலவரமும், விஜய் ஆண்டனியைப் பார்க்கும்போது அதே கண்களில் காதலுமாய்.. கண்ணாலேயே பேசியிருப்பார். 

-வரவனை செந்தில்