Published:Updated:

இவங்க எல்லாம் இல்லைனா பேய்ப்படம் பயமாவே இருக்காது!

இவங்க எல்லாம் இல்லைனா பேய்ப்படம் பயமாவே இருக்காது!
இவங்க எல்லாம் இல்லைனா பேய்ப்படம் பயமாவே இருக்காது!

இவங்க எல்லாம் இல்லைனா பேய்ப்படம் பயமாவே இருக்காது!

வாரத்துக்கு ஒரு தடவை மோடி ஃபாரீன் டூர் கிளம்புவது போல வாரத்திற்கு இரண்டு பேய்ப்படங்கள் தமிழில் வெளியாகின்றன. ஒருகாலத்தில் உருட்டி மிரட்டி அடிவயிற்றை கலக்கிய பேய்களை எல்லாம் 'போய் சைட் டிஷ் எடுத்துட்டு வா' ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள் தமிழ்ப் படைப்பாளிகள். விதிவிலக்காய் தப்பிப் பிழைத்திருப்பது அந்தப் படங்களில் நம்மை பயமுறுத்துவதற்கென்றே திரியும் கேரக்டர்கள்தான். திடீர் திடீரென கேமரா முன் வெறித்த பார்வையோடு தோன்றும் இந்த ஆயாக்கள்தான் (சில சமயங்களில் ஆயன்கள்) இது பேய்ப்படம்தான்யா என நம்மை நம்பவைக்கும் புண்ணியவான்கள். ஆனால் கதைக்கும் இவர்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருக்காது. அப்படி, 'என் பணி பயமுறுத்திக் கிடப்பதே' என சில்வர் ஸ்க்ரீனில் வந்து போன சில கேரக்டர்கள் இவை.

'ஜென்ம நட்சத்திரம்' இந்திரா தேவி :

திகில் கேரக்டர்களில் சூப்பர் சீனியர் இவர். ஹாலிவுட்டில் இருந்து சுடச்சுட சுட்ட ஜென்ம நட்சத்திரத்தில் தீய சக்தி குழந்தையின் ஆயாவாக வந்து மெர்சலாக்கினார். படத்தில் பேய்க்குழந்தையைப் பார்த்துப் பயந்தவர்களை விட இவரைப் பார்த்து பயந்தவர்கள்தான் அதிகம். வெள்ளை சேலை, பெரிய்ய்ய்ய கண்கள், 'உன்கூடவே இருப்பேன்' எனப் பேயோடு டீலிங் பேசும் கணீர் குரல் என 90-களின் ஹாரர் விரும்பிகளை அலற வைத்தார்.

'ஷாக்' கலைராணி :

சாதா படங்களிலேயே கலைராணி கொஞ்சம் 'எக்ஸ்ட்ராவாக' நடிப்பார். பேய்ப்படம் என்றால் சொல்லவா வேண்டும்? 'நான் ஹிட் கொடுத்தே ஆவேன்' என பிரசாந்த் கங்கணம் கட்டி நடித்த 'ஷாக்' படத்தில் எல்லாவற்றையும் விட வித்தியாசமாக இருந்தது கலைராணிதான். ஆவிகளுக்கே உரிய குரலில் இழுத்து இழுத்துப் பேசுவது, பேசும்போதே வித்தியாச வித்தியாசமாய் நெளிவது என அவரின் மேனரிசம் முழுக்கவே அடடே! ரகம். 

'முனி' ஆயா :

ராகவா லாரன்ஸை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய படம். ஹாரர் காமெடியின் செகண்ட் இன்னிங்க்ஸைத் தொடங்கிய பெருமை இவருக்குதான். இதில் பயமுறுத்துவதற்கென்றே வீட்டு வாசலில் ஒரு கருப்பு உருவத்தை நிற்க வைத்திருப்பார். கட்டைக் குரலில் ஆஜானுபாகுவாய் குறுக்கே குறுக்கே வரும்போது லைட்டாக பயம் எட்டிப் பார்த்தது உண்மைதான். 'முனி'யில் பயமுறுத்திய இரண்டே ஆட்கள் ராஜ்கிரணும் இந்த லேடி ராஜ்கிரணும்தான்.

'யாவரும் நலம்' தாத்தா :

'யாவரும் நலம்'. ஹாரரை அடுத்த லெவலுக்குக் கொண்டு போன சினிமா. பங்களாவில் இருந்து டி.வி-க்கு பால் காய்ச்சிக் குடிமாறியது பேய். இந்தப் படத்தில் பேயை கடைசிக் காட்சியில்தான் காட்டுவார்கள். அதற்கு முன்னால் அடிக்கடி வந்து திகில் கூட்டுவது அந்த மாற்றுத் திறனாளி தாத்தாதான். சதா குரைத்துக்கொண்டே இருக்கும் கறுப்பு நாய் சகிதம் வாக்கிங் போகும் அந்த தாத்தாவின் பெயர் த்ரிட்டிமன் சாட்டர்ஜி. சத்யஜித்ரேயின் பட்டறையில் உதித்த வைரம்.

'காஞ்சனா' சுப்புக்கண்ணு :

முதல் படத்தில் பிடித்த ஹிட் ஃபார்முலாவை அப்படியே இதில் இறக்கினார் லாரன்ஸ். அதனாலேயே முந்தையப் படத்தின் ஆயா கேரக்டரை அப்படியே வைத்துக்கொண்டார். ஆள்தான் வேறு. கும்மிருட்டில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு வெறிக்க வெறிக்க வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கும் அந்த கேரக்டர் படத்தில் ஒரு சீன்தான் வரும். 'அழுகுற சத்தம் கேக்குது' என ஒரே ஒரு டயலாக்தான். ஆனாலும் குட் ஒர்க்!

'பீட்சா' பொண்ணு :

நியூ ஏஜ் சினிமா சென்சேஷன் இந்தப் படம். ஆனாலும் அந்த திகில் கேரக்டர் க்ளிஷேவை விடவில்லை. தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பேப்பரில் மல்ட்டி கலரில் கிறுக்கித் தள்ளும் அந்தப் பெண்ணை பார்க்கும்போது லைட்டாய் டர்ரடித்தது உண்மைதான். போதாக்குறைக்கு அப்ராணி விஜய் சேதுபதியைப் பார்த்து முறைத்துக்கொண்டே இருக்கும். 'நித்யா' என கொடூர வாய்ஸில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரே டயலாக்தான். ஆனாலும் பயமாதான் இருந்தது பாஸ்!

'யாமிருக்க பயமே' நளினிகாந்த் :

நளினிகாந்த் - 80-களில் சூப்பர்ஸ்டாரின் ஜெராக்ஸாய் தமிழகத்தில் வலம் வந்தவர். மேனரிசம், ஸ்டைல் எல்லாம் அப்படியே ரஜினி போல இருக்கும். நிறைய வில்லன் ரோல்களில் நடித்தவர், பின் காணாமல் போனார். அவரை திரும்பக் கொண்டு வந்தார்கள் 'யாமிருக்க பயமே' படத்தில். மறைந்து மறைந்து வந்து டின்னரைத் திருடிக்கொண்டு செல்லும் தாடிக்கார தாத்தாவாய் நடித்தவர்.

- நித்திஷ்   

அடுத்த கட்டுரைக்கு