Published:Updated:

அரசியலில் ஈடுபட இது சரியான நேரமல்ல: நடிகர் விஜய்

சென்னை, ஜன.21,2011

அரசியலில் ஈடுபட இது சரியான நேரமல்ல: நடிகர் விஜய்

தேர்தல் வரவுள்ள சூழலில், அரசியலில் ஈடுபடுவதற்கு இது சரியான நேரமல்ல என்றார் நடிகர் விஜய். ##~~##

சென்னையில் 'வேலாயுதம்' படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய் வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசுகையில், " 'காவலன்' படத்தை வெளியிடுவதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்னையே அல்ல.

காவலனைப் பொறுத்தவரையில், சில மோசமான பிரச்னைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்னைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை.

பல்வேறு பிரச்னைகள் காரணமாக, 'காவலன்' படத்தை ஜனவரி 14 ஆம் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆயினும், எல்லா பிரச்னைகளையும் படத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இக்கட்டான சூழ்நிலையில், என்னுடன் இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி," என்றார் விஜய்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்புக்கு பிந்தைய பேச்சுகள் குறித்து கேட்டதற்கு, "ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல் காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது," என்றார்.

எதிர்வரும் தேர்தலில் நீங்கள் அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்டதற்கு, "அதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை," என்றார்.

காவலன் பிரச்னையும் அரசியல் ஈடுபட தூண்டுவதாக கேட்டதற்கு, "அந்த பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம்," என்று கூறினார்.

அதிமுக ஆதவராக பிரசாரம் மேற்கொள்வீர்களா என்றதற்கு, "அதுபற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை," என்றார்.

மேலும், தமிழ் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்காததற்கான காரணத்தை அவர் விளக்குகையில், "ஒரே நேரத்தில் 'வேலாயுதம்,' '3 இடியட்ஸ்' ஆகிய இரண்டு படங்களிலும் நடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. வெளியே பல காரணங்களை பேசிக்கொள்கிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. எனக்கு யாருடனும் எந்த பிரச்னையும் கிடையாது.

தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், டைரக்டர் ஜெயம் ராஜா ஆகியோரின் ஒத்துழைப்புடன் வேலாயுதம் படம் 50 சதவீதம் வளர்ந்து இருக்கிறது. இனிமேல் வருடத்துக்கு ஒரு சண்டை படத்திலும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன்," என்றார் நடிகர் விஜய்.