Published:Updated:

2016-ல் திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள்!

Vikatan Correspondent
2016-ல் திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள்!
2016-ல் திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள்!

சென்சிட்டிவ் படங்கள் முதல் சென்டிமென்ட் படங்கள் வரை, திரைப்படங்களில் புதிய முயற்சிகளில் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டார்கள் பெண் இயக்குநர்கள். 2016-ம் ஆண்டு, திரையரங்குகளை தங்கள் படைப்புகளால் அழகாக்கிய பெண் படைப்பாளிகளில் சிலர் இவர்கள்! 

அஷ்வினி ஐயர்

'அம்மா கணக்கு' சொன்னவர், அஷ்வினி ஐயர். அமலா பால் கதாபாத்திரத்தின் மூலம், சிங்கிள் பேரன்டின் அன்பையும், ஆதங்கத்தையும், போராட்டத்தையும் அழகாகச் செதுக்கியிருப்பார். தன் மகள் மீதான கனவுகள் சுமந்து, கலெக்டரிடம், 'நீங்க எந்த காலேஜ்ல படிச்சீங்க, எவ்வளவு பணம் செலவாகும் இந்தப் படிப்புக்கு?' எனக் கேட்பதில் இருந்து, இடைவேளையின்போது அறிவுரை வழங்குவது வரை, பாராட்ட நிறைய விஷயங்களை தன் படத்துக்குள் வைத்துத் தந்தார் அஷ்வினி!

சுதா கொங்கரா

இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த 'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் இயக்குநர். மீனவக் குப்பத்துப் பெண்ணான ரித்திகா சிங்கின் குத்துச்சண்டை கனவை, பயிற்சியாளராக வரும் மாதவன் எப்படி நிறைவேற்றி வைக்கிறார் என்பது கதை. இந்திய விளையாட்டுத்துறையில் பெண்கள் சந்திக்கும் அரசியலை வெட்டவெளிச்சம் போட்டு விளாசுகிறது திரைக்கதை. இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநரான சுதா, தான் இயக்கிய 'துரோகி' திரைப்படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் கொடுத்த படமான 'இறுதிச்சுற்று', தயாரிப்பாளர்களை கதை மீது நம்பிக்கை வைக்கச் சொல்லி, கௌரவ வெற்றி பெற்றுத் தந்தது!  

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்:

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் தொலைக்காட்சி  நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, இடையில் சத்தமே இல்லாமல் அவர் இயக்கிய படம், ‘அம்மணி’. அடித்தட்டு பெண்கள் சந்திக்கும் தினசரி வாழ்க்கைதான் கதைக்களம். தான் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வாழ்க்கைக் கதைகளைப் பிடித்தவர், அவற்றை திரைக்கதையில் கச்சிதமாகப் பொருத்திய படைப்பு. பணம் என்ன பாடுபடுத்தும் என்பதை 'அம்மணி' சொன்னாள் அழுத்தமாக!

கீதாஞ்சலி செல்வராகவன்

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'மாலை நேரத்து மயக்கம்', இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் திரைக்கு வந்தது. திருமண உறவுக்குள் வேண்டா வெறுப்பாகச் சிக்கிக்கொள்ளும் கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் உணர்வுப் போராட்டங்கள்தான் கதைக்களம். களம் பழையது என்றாலும்கூட, அந்த உறவினுள் எப்படிப்பட்ட சிக்கல்கள் எல்லாம் வரும் என்பதை யோசித்த விதம், 'யார் இந்த இயக்குநர்?' எனக் கேட்க வைத்தது. ஸ்கோர் செய்தார் கீதாஞ்சலி!

உஷா கிருஷ்ணன்

சென்ஸாருடன் சண்டை போடும் சினிமாக்களுக்கு மத்தியில், குடும்பத்துடன் படம் பார்க்க வைத்த இயக்குநர், உஷா கிருஷ்ணன். கலையரசன், காளி வெங்கட்டின் நடிப்பில் வெளிவந்த இவரின் 'ராஜா மந்திரி' திரைப்படம், பலரின் பாராட்டைப் பெற்றது. பாண்டியராஜனின்  'ஆண்பாவம்' படத்தைப் போல அண்ணன் - தம்பி கதாபாத்திரங்கள் ஆளும் இந்தத் திரைப்படம், ரசிக்க, சிரிக்க வைத்தது. முதல் படத்திலேயே கைகுலுக்கல் பெற்றார் உஷா கிருஷ்ணன்.

லீனா யாதவ்

கனடாவில் நடந்த TIFF (Toronto International Film Festival) திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தி திரைப்படம் 'பார்ச்டு (Parched)', தொடர்ந்து இதுவரை 24 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 18 விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது. ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கைதான் கதை. குழந்தைத் திருமணம், பொருளாதாரச் சிக்கல், குடும்ப வன்முறை என பெண்களை சூழ்ந்துகிடக்கும் பிரச்னைகளை மிக மிக கவனமாக பேசி, தன்னைப் பற்றி உலகமே பேசவைத்துவிட்டார் லீனா!

கௌரி ஷிண்டே

பிரேக் அப்களை சந்திக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில்  ஏற்படும் மனக்குழப்பங்களைப் பற்றிப் பேசும் படமான 'டியர் ஜிந்தகி (Dear Zindagi)' யின் இயக்குநர், கௌரி ஷிண்டே. தன் கனவுகளிலும், தன்னை முழுமைப்படுத்திக் கொள்ளாமல் காதலிலும் வெற்றி பெற முடியாதவளாக தெளிவற்ற பாதையில் பயணிக்கும் அலியாபட், அவருக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவர் ஷாருக்கான் கேரக்டர்கள் மூலம் படம் நெடுக சுவாரஸ்யமான வாழ்க்கைப் பாடம் நடத்தியிருக்கிறார் கௌரி. ஸ்ரீதேவி நடிப்பில் 'இங்லீஷ் விங்லீஷ்' எடுத்தவர், தனது இரண்டாவது படத்திலும் அடித்துவிட்டார் சூப்பர் ஹிட் ஷாட்!

மீரா நாயர்

உகாண்டா செஸ் வீராங்கனை பியோனா முடேசி பற்றி, டிம் கிராதர்ஸ் எழுதிய புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் ‘குயின் ஆஃப் காட்வீ (Queen of Katwe)’. உகாண்டாவின் காட்வீ சேரிப்பகுதியில் பள்ளிப்படிப்பு கிடைக்காமல் வாழ்ந்து வரும் சிறுமியின் வாழ்க்கைக்குள் சதுரங்கம் கொண்டு வரும் மாற்றமும், அதனால் ஏற்படும் வெளிச்சம் அவள் மனதுக்குள் விளையாடும் சதுரங்கமும்தான் படத்தின் கரு. இங்கு வணிகப் பொருளாய் மாறியிருக்கும் கல்வி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு எட்டாக்கனியாக இருப்பதை அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். செஸ் போட்டிக்கு முன்பாக ஆப்பிரிக்க சிறுமியிடம் சம்பிரதாயம் காரணமாகக் கைகுலுக்கும் சிறுவன், மேசைத் துணியில் தன் கைகளைத் துடைக்கும் காட்சியில், நம் மனதில் இனவெறியின் கோரத்தைப் பதியவைக்கிறார் மீரா நாயர்.

தீபா மேதா

நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவத்தை, 'Anatomy of Violence' என்ற பெயரில் 90 நிமிட திரைப்படமாக படைத்துள்ளார் தீபா மேதா.  அச்சம்பவத்தின் குற்றவாளிகளுடைய பின்னணியை அலசுகிறது படம். இச்சமூகம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் பேசியுள்ளார் தீபா. இந்தியாவின் வறுமை, சாதிப் பிரச்சனை, அரசியலமைப்பு ஆகிய அனைத்தையும் தொட்டுப் பேசியுள்ள தீபா, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு இவையும் காரணமாக அமைவதாகக் கதையை அமைத்திருக்கிறார். இப்படம் டொரோன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


திவ்யா கோஸ்ல குமார்

முழுக்க முழுக்க காதலை மட்டும் மையமாக வைத்து திவ்யா கோஸ்ல குமார் இயக்கியுள்ள படம், ‘சனம் ரே (Sanam Re)'. தன் பேரனின் காதல் கைகூடாது என்று கணிக்கிறார் தாத்தா. அதேபோல, பேரனின் காதல் அவ்வப்போது கைவிட்டுப் போனாலும், காதலுக்காக விடாமல் ஓடுகிறான் அவன்.  நிராகரிப்பின் காரணம் அறிந்து அவன் எடுக்கும் முடிவு, காதலர்களின் கண்களில் நீர்த்திரையிட வைக்கும். ‘கனவெல்லாம் நீதானே’ ஆல்பத்தின் ‘இதய’ வெர்ஷன்தான் படத்தின் க்ளைமாக்ஸ் என்றாலும், காதலோடு ஊடுருவிப் பார்க்கையில் நம் இதயத்தையும் உடைக்கிறது. காஸ்டிங்கில் இருந்து திரைக்கதை வரை, நேர்த்தி திவ்யாவின் பலம்.

கேமரா களத்தில் நின்று வென்றவர்கள் இவர்கள். இவர்களைப் போலவே  பெண் படைப்பாளிகள் பலரை இனிவரும் ஆண்டுகளிலும் எதிர்நோக்குவோம்!


- பொன்.விமலா,
ஜெ.நிவேதா 
(மாணவப் பத்திரிகையாளர்)