Published:Updated:

காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind

காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind
காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind

காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind

இந்த உலகில் தோன்றிய எல்லா உயிரும் ஏதோ ஒரு நாள் அதன்  இறப்பை ருசிக்கத்தான் போகிறது. தான் வாழும் காலத்தில் அது ஆற்றும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும் உடலால் அது இறந்த பின்பும் முகமாய், குரலாய், சிரிப்பாய்... என ஏதோ ஒரு நிலையில் நினைவுகளாய் மற்றவர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டேயிருக்கும். அப்படி, இந்த  2016-ம் ஆண்டு உடலால் மறைந்து வெறும் நினைவுகளாய் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பிரபலங்கள் பற்றி...  

கலாபவன் மணி (45) : 

நடிப்பு, இசை, பாடல், பலகுரல் என பண்முகம் கொண்ட கலைஞன். 1971-ம் ஆண்டு கேரளாவிலுள்ள சாலக்குடியில் குன்னிஸேரி வீட்டில் ராமன் மணியாக பிறந்தவர் பின்னர், 'கலாபவன்' எனும் கலைக்குழுவில் பலகுரல் கலைஞனாக பணியாற்றி 'கலாபவன்' மணி ஆனார். சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் ' வசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே ஞானும்' எனும் மலையாள படத்துக்காக தேசிய விருது பெற்றார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்துவந்த கலாபவன் மணி திடீரென இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உயிரிழந்து சினிமாத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

'வியட்நாம் வீடு' சுந்தரம் (73) :

தமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியர். 1943-ம் ஆண்டு பிறந்த சுந்தரம் தனது 12-13 வயதிலேயே மெஷின் ஆப்பரேட்டராக பணியாற்றினார். மீத நேரங்களில் 'யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்' எனும் நாடகக்குழுவில் சர்வீஸ் பாயாக பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நாடகம் , சினிமாத்துறை மீது இவருக்கு ஆர்வம் பிறந்தது. கதைசொல்லலில் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்ட இவர் 'வியட்நாம் வீடு' படத்தில் காதாசிரியராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி இவர் பெயருக்கு முன் 'வியட்நாம் வீடு' என்ற அடைமொழியை பரிசாக கொடுத்தது. 1973-ம் ஆண்டு ' கௌரவம்' படத்தை இயக்கினார். பின்னர், 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாசிரியராக, இயக்குநராக, நடிகராக பணியாற்றியும் பல தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துவந்த இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணத்தை தழுவினார்.

ஜோதி லெட்சுமி (67) :

எம்.ஜி.ஆர் நடித்த ' பெரிய இடத்துப் பெண்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

நா. முத்துக்குமார்  (41) : 

காஞ்சிபுரத்து கவிஞர். சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இலக்கிய மாணவரான  நா.முத்துக்குமார் 'பட்டாம் பூச்சி விற்பவன்' என்ற கவிதை தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.'வீரநடை' என்ற திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நா.முத்துக்குமார் காதல் கொண்டேன், சிவாஜி, காக்காமுட்டை, மதராசப்பட்டிணம் என பல வெற்றி படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். தங்கமீன்கள் மற்றும் சைவம் படத்துக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்த இவர் திடீரென இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். தனது 41-வது வயதிலேயே நா.முத்துக்குமாருக்கு நிகழ்ந்த மரணம் தமிழ் திரையுலகத்தையும்,அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அண்ணாமலை (50) : 

இந்த ஆண்டு தமிழ் சினிமா இழந்த மற்றொரு பாடலாசிரியர். விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர் அண்ணாமலை. ‘சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டமும் பெற்றார். விகடன் குழுமத்தில் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அண்ணாமலை, ‘கவிஞர் காப்பிராயன்’ என்ற பெயரில் ஜூனியர் விகடனில் எழுதிய கவிதைகள் பிரபலம். 'புது வயல்' எனும் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அண்னாமலை ஸ்டூடண்ட் நம்பர் ஒன், வேட்டைக்காரன், வேலாயுதம், ஹரிதாஸ் என 50 படங்களுக்கு மேல் பாடலாசிரியாக பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமல்லாது, அரும்பு, தமிழோசை போன்ற இதழ்களில் 100க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ள அண்ணாமலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பில் காலமானார்.

எம். பாலமுரளி கிருஷ்ணா (86) :

கர்னாடக இசையுலகில் தனக்கென ஒரு இடம் கொண்டு சாம்ராஜ்ஜியம் நடத்தியவர். சிறந்த இசையமைப்பாளருக்கான, சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர். பல ராக, தாளங்களைப் படைத்தவர். 'ஒரு நாள் போதுமா...',  'சின்ன கண்ணன் அழைக்கிறான்...' என தனது குரலால் நம்மை சொர்க்கத்துக்கு அழைத்துச்சென்றவர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பு இசையுலகத்துக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.

கல்பனா (50) :

குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். கே.பாக்யராஜுடன் இவர் இணைந்து நடித்த 'சின்னவீடு' திரைப்படம் இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. 'தனிச்சல்ல ஞான்' என்ற மலையாள படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார். பின்னர், பல படங்களில் குனசித்திரவேடங்களில் நடித்து வந்த கல்பனா இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பஞ்சு அருணாசலம் (75) :

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர். சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் அவரது உறவினரான கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். இவர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது. 'ஆறிலிருந்து அறுபது வரை', 'கல்யாண ராமன்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'வீரா' என பல வெற்றிப் படங்களை தயாரித்த பஞ்சு அருணாசலம் அவர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.

சோ. ராமசாமி (82) :

வழக்கறிஞராக, நாடக - திரைப்பட நடிகராக, வசனகர்த்தாவாக, பத்திரிகையாளராக என பன்முகத்திறன் படைத்தவர்.  அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடத்திலும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராகவும் நலம் விரும்பியாகவும் இருந்தார். ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்களுக்கு வழிகாட்டவும் அவற்றைச் செயல்படுத்தவும் முக்கியப் பங்காற்றியவர். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார், நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். கிட்டதட்ட 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். அரசியல் நையாண்டி எழுத்துகளால் தனக்கென பத்திரிக்கை உலகில் தனி இடம் வகுத்துக்கொண்ட இவர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.

ஜெ. ஜெயலலிதா (68) :

சினிமா, அரசியல் இரண்டிலும் ஜெயித்து காட்டியவர். தமிழக மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்தவர். ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் எம்.ஜி.ஆருடன் மட்டுமே 26 படங்கள். மேலும், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற போன்ற முன்னனி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்துள்ளார். ஜெயலலிதாவின் இறப்பு, தமிழ் சினிமாத்துறைக்கும், அரசியல்துறைக்கும் பேரிழப்பு.

- ப.சூரியராஜ்

அடுத்த கட்டுரைக்கு