சினிமாவுக்கும் வாழைப் பழத்துக்கும் நெருங்குன சம்பந்தம் இருக்கு மக்களே!

ஆன்மிகப் பழம் முதல் வாழைப்பழக் கத்தி வரை கோலிவுட் சினிமாவில் வாழைப்பழத்தை வைத்து என்ன என்ன கலாட்டா செய்ய முடியுமோ அத்தனையும் செய்து குபீர் சிரிப்பு உண்டாக்கிய சில காமெடிகள்! 

சினிமா

ஒண்ணு இந்தா இருக்கு இன்னொன்னு எங்க :

ராமராஜன், கவுண்டமணி, செந்தில் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம் 'கரகாட்டக்காரன்'. அதில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி சாகாவரம் பெற்றது. கவுண்டமணி செந்திலிடம் இரண்டு ரூபாய் கொடுத்து இரண்டு பழம் வாங்கிவரச் சொல்வார். ஆனால் செந்தில் ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு ஒரு பழத்தை மட்டுமே கொண்டு வருவார். இன்னொரு பழம் எங்கே என்று கேட்பதற்கு அந்த ஒன்றுதான் இது என்று கவுண்டமணியைக் கலாய்ப்பார் செந்தில். காண்டான கவுண்டமணி செந்திலை அடித்துத் துவைப்பார். அந்த இன்னொன்னு இது என்பதில் உள்ள அரசியல் நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

ஆன்மிகம் என்னும் இந்தப் பழம் கிடைக்கும் :

உதயநிதி, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் ராஜேஸ் இயக்கத்தில் வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில்தான் இந்த கலாட்டா. அதில் ஆன்மிகத்தில் ஆழத்தை அறிய உளுந்தூர்பேட்டை உலகநாதனைச் சந்திக்க சந்தானம் செல்வார். அதில் வாழைப்பழத்தை வைத்து ஆன்மிகத்தைச் சொல்லிவிடுவார் உலகநாதன். 'இந்த லெளகீக வாழ்க்கையிலிருந்து நட்பு, காதல், குடும்பம், சமுதாயம் இந்த நான்கையும் திறக்கும்போதுதான் ஆன்மிகம் என்னும் இந்தப் பழம் கிடைக்கும்'. இத்துனூண்டு பழத்துக்குள்ள இம்மாம் பெரிய தத்துவமா?

பெருமாளுக்கு மகளே இல்லய்யா :

விஜயகாந்த், சௌந்தர்யா, வடிவேலு நடிப்பில் உதய் சங்கர் இயக்கத்தில் வெளியானது 'தவசி'. அதில் பெருமாளின் மகளைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக விஜயகாந்திடம் வருவார் வடிவேலு. அப்போது விஜயகாந்த் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அதைச் சொல்லவிடாமல் விஜயகாந்த் வாழைப்பழத் தோலை அங்கும் இங்கும் துக்கிப் போடுவது போல் பாவலா காட்டிக்கொண்டிருப்பார். அதைப் பார்த்து வடிவேலு டென்ஷனாகி பெருமாளிற்கு மகளே இல்லையென்று கிளம்பிவிடுவார். 'சரி பாக்கெட்டில் இருக்கும் தோலைத் தூக்கிப்போட்டுட்டுப் போ' என்று ட்விஸ்ட் வைப்பார் விஜயகாந்த். 

என்னடா இது வாழப்பழத்திற்கு வந்த சோதனை :

சிவகார்த்திகேயன், கீர்த்தி, சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில்  வெளியானது 'ரஜினிமுருகன்'. அதில் சிவா வைத்திருக்கும் டீக்கடைக்கு வாழைப்பழம் வாங்க வருவார் மதுரைக்காரர் ஒருவர். வாழைப்பழத்தைத் தாரிலிருந்து பிடுங்குவதற்குப் பதிலாக 'என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை' என்று கூறி தாரையே பிடுங்கி விடுவார்.  ஒட்டுமொத்தக் கடையையே காலிசெய்து விடுவார் அந்தக் கடைக்கு வாழைப்பழம் வாங்க வரும் மதுரைக்காரன்.

சுத்தமான சூரி வாழைப்பழம் :

விஷால், சுருதி, சூரி நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியானது 'பூஜை'. இதில் பசிக்கு வாழைப்பழம் சாப்பிடலாம் என்று நினைத்து பாண்டியிடம் வாழைப்பழம் கொண்டுவரச் சொல்வார். அவரோ வாழைப்பழம் மட்டும்தான் கேட்கிறார் என்று தோலை எடுத்துவிட்டு வெறும் பழத்தை மட்டும் கொண்டு வந்து கொடுப்பார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சூரி அவருடன் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவார். நடுவில் அண்ணாச்சி புகுந்து எரியும் கொள்ளியில் எண்ணையை வார்ப்பார்.

வாழைப்பழக் கிறுக்கன் :

பார்த்திபன், வடிவேலு இணைந்து கலக்கிய திரைப்படம் 'காதல் கிறுக்கன்'. இதில் வடிவேலு ஒரு கடைக்குச் சென்று வாழைப்பழம் வாங்கிச் சாப்பிடுவார். அதைச் சாப்பிட சாப்பிட பின்னால் நின்றுகொண்டு பார்த்திபன் கவுன்ட்டர் கொடுத்துக்கொண்டே இருப்பார். சாப்பிட்டு முடித்துவிட்டு 'இந்தத் தோலை எங்குப் போடுவது' என்று வடிவேலு கேட்க 'பேங்கில் போடு' என்று கவுன்ட்டர் கொடுப்பார் பார்த்திபன். அதே இடக்கு அதே மடக்கு.

வாழைப்பழக் கத்தி :

சம்பூர்னேஷ் பாபு நடித்து ஸ்டீவன் சங்கர் இயக்கத்தில் கலக்கிய ஆக்சன் ஸ்பூஃப் தெலுங்கு திரைப்படம் 'ஹ்ருதய கலெயம்'.  இந்தப் படத்தில் சண்டைக்காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். அதில் வாழைப்பழத்தை வைத்தே எதிரிகளை வெட்டிச் சாய்த்துவிடுவார் சம்பு. முக்கியமாக 18 வயது கீழ் உள்ளவர்கள் இந்த சண்டைக்காட்சியை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

தனி ஒரு வாழைப்பழம் :

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமைய்யா நடித்து ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தனி ஒருவன்'. இதில் அர்விந்த் சுவாமி தம்பி ராமைய்யாவிடம் ஒரு விஷயத்தை உணர்த்துவதற்காகக் கொசுக்கதை ஒன்று சொல்வார். அதை வாழைப்பழத்தை சாப்பிட்டுக்கொண்டே ஆர்வமாகக் கேட்பார் தம்பி ராமைய்யா. அனைத்துக் கதையும் முடிந்தவுடன் கொசு செத்துருக்கணுமே என்று கேட்கும் சீன் அல்டிமேட்.

-தார்மிக் லீ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!