சூரியவம்சம் முதல் தமிழ்ப்படம் வரை - ஒரே பாட்டு ஓஹோ வாழ்க்கை கொடுத்த பாடல்கள்! #YearEndBoostup

ஒரே பாட்டில் உலக ஃபேமஸ் ஆவது நம் தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். அப்படி ஒரே பாட்டு ஓஹோனு வாழ்க்கையே மாறிய சில தமிழ்த் திரைப்பட பாடல்கள்!

பாட்டு

வெற்றி நிச்சயம் : 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையில் வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'. அதில் சரத்பாபுவிடம் சவால்விட்டு வாழ்க்கையில் முன்னேறும் சீனில் வரும் இந்தப் பாட்டு. அந்த ஒரு பாடலில் அசுர வளர்ச்சி அடைந்துவிடுவார் ரஜினி. பால்காரனாக இருந்த அண்ணாமலை பணக்காரனாக ஆவது அந்த ஒரே பாட்டில்தான். 

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது :

சரத்குமார், தேவயானி நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் வெளியான திரைப்படம் 'சூரியவம்சம்'. இதில் சரத் டபுள் ரோலில் கலக்கியிருப்பார். இந்தப் படத்தில் இவர் தேவயானியைத் தன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்வார். பின் ஒரு பஸ்ஸை விலைக்கு வாங்கி அந்த ஒரு பஸ்ஸை வைத்தே பல்லாயிரக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக மாறிவிடுவார். அப்போது இடம்பெறும் பாடல்தான் 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது'.

வெற்றிக் கொடிகட்டு :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் வெளியான திரைப்படம் 'படையப்பா'. ரஜினிகாந்தின் அப்பாவான சிவாஜி அவரது தம்பியான மணிவண்ணனிடம் சண்டையிட்டு சொத்துகள் அனைத்தையும் இழந்து விடுவார். அதில் மன உளைச்சலாகி இறந்து விடுவார் சிவாஜி. பின் ரஜினிக்கு சொந்தமான ஒரு இடத்தில் விலை உயர்ந்த க்ரானைட்டுகள் இருப்பது தெரிந்து 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா' என்று பாடியே ரஜினியின் வாழ்க்கை மாறிவிடும். 

எங்கள் மூச்சுக்குள்ளே உண்டு பாட்டு சத்தம் :

கே. ஷாஜகான் இயக்த்தில் எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வெளியான திரைப்படம் 'புன்னகை தேசம்'. தன் நண்பர்களை எப்படியாவது பெரியாளாக மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார் ஹீரோ தருண் குமார். அந்தச் சமயத்தில் நண்பர்களான குணாலுக்கும் தாமுவிற்கும் மேடையில் பாட சந்தர்ப்பம் கிடைக்கும். நண்பர்கள் குரூப்பே சேர்ந்து இந்தப் பாட்டைப் பாடி எங்கேயோ போய்விடுவார்கள்.

சிங்கமொன்று புறப்பட்டதே :

ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தேவா இசையில் வெளியான திரைப்படம் 'அருணாசலம்'. அதில் தனது தந்தை யாரென்று தெரியாமலே வளர்ந்து வருவார் ரஜினி. பின் சில சந்தர்ப்ப சூழ்நிலையினால் உண்மை தெரியவரும். தனது தந்தையான இன்னொரு ரஜினியின் சொல்லின்படி 30 கோடியை 30 நாட்களில் செலவிட வேண்டும் என்ற சவாலில் இந்தப் பாடல் வரும். அந்த ஒரே பாடலில் படத்தின் வேகம் தாறுமாறாக உயரும். 

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம் :

கார்த்திக், அஜித்குமார், ரோஜா நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வெளியான திரைப்படம் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. அதில் கதாநாயகி ரோஜா, சினிமாவில் பாடல் பாடுவதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பார். அதற்கு கார்த்திக் உதவி செய்யும் வகையில் ரோஜாவிற்கு கங்கை அமரனிடம் வாய்ப்பு வாங்கித் தருவார். அப்போது பாடும் 'வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்' பாடலில் அவரது லைஃப் ஸ்டைலே மாறிவிடும். மிகப்பெரிய ஸ்டாராக மாறிவிடுவார் ரோஜா.

ஒரு சூறாவளி கிளம்பியதே :

சிவா நடிப்பில் சி. எஸ். அமுதன் இயக்கத்தில் கண்ணன் இசையில் வெளியான திரைப்படம் 'தமிழ்ப் படம்'. தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த கமர்சியல் படத்தையும் கலாய்த்து எடுக்கப்பட்ட படம்தான் தமிழ்ப்படம். அதில் ஹீரோயினைத் திருமணம் செய்துகொள்வதற்காக அவரது தந்தையிடம் சென்று பெண் கேட்பார். ஆனால் இவரை ஏழை என்று அவமானப்படுத்தி உதாசீனப்படுத்தி விடுவார். பின் தலைக்கு சூடேறி 'ஒரு சூறாவளி கிளம்பியதே' என்ற ஒரு பாடலைப் பின்னணியில் பாடவிட்டு ஒரே பாட்டில் பணக்காரனாகி விடுவார் சிவா. இவ்வளவும் அவரது தந்தை காபி குடிக்கக் கேட்டு வருவதுக்குள் நடந்துவிடும்.

-தார்மிக் லீ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!