Published:Updated:

மறக்க முடியாத அந்த 3 டி.வி தொகுப்பாளர்களும், இப்போ என்ன பண்றாங்கனு தெரியுமா?

மறக்க முடியாத அந்த 3 டி.வி தொகுப்பாளர்களும்,  இப்போ என்ன பண்றாங்கனு தெரியுமா?
மறக்க முடியாத அந்த 3 டி.வி தொகுப்பாளர்களும், இப்போ என்ன பண்றாங்கனு தெரியுமா?

வாழ்க்கையில் எதுவுமே  நிலை கிடையாது. எல்லா மாற்றங்களுக்கும் நாம் பழக்கப்பட்டுவிடுவோம். ஆனால் கடந்த கால நினைவுகள் நம்மை விட்டு அவ்வளவு எளிதில் மறையாது. ஒருகாலத்தில் காம்பியரிங்கில் கலக்கி, இப்போது அத்துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் விஜேக்கள் இப்போது என்ன பண்ணுகிறார்கள், எப்படி ஃபீல் செய்கிறார்கள் என்று சில பழைய விஜேக்களிடம் பேசினோம். 

​​​​​விஜே லைஃப் எப்படி ஸ்டார்ட் ஆனது? 

விஜய்சாரதி: கல்லூரி படிக்கும் போதே லொடலொடனு பேசிட்டே இருப்பேன். படிச்சி முடிச்சிட்டு மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். எதேர்ச்சையா ஆங்கரிங் ஆடிஷன் கலந்துக்கிட்டேன். அப்படியே வாழ்க்கையும் மாறிப்போச்சு. வணக்கம்.. ‘வெல்கம் டூ’னு ஊர் ஊரா சுத்தி, உங்களுக்குப் பிடிச்ச பாடலை உங்க ஏரியாவுக்கே வந்து கேட்டு, சன் டிவியில் ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சி பண்ணினேன். அதுவே எனக்கான அடையாளமாக மாறிடுச்சி. 

விஜய்ஆதிராஜ்:   ஆங்கரிங் என்னுடைய திட்டமே இல்லை. நடிக்கணும், மிகப்பெரிய நடிகன் ஆகணும்கிறது மட்டும்தான் கனவு. அதற்கான அச்சாரம்தான் காம்பியரிங் வேலை. ஜெஜெ டிவியில் தான் என்னோட நிகழ்ச்சி. விஜய் சாரதி பின்னாடி நடந்து பேசுவார். நான் முன்னாடி நடந்து பேசுவேன் அவ்வளவுதான் வித்தியாசம். 

காயத்ரி:  ‘லேடீஸ் சாய்ஸ்’, ’மசாலா மெயில்’னு சன்மியூஸிக்கில் நிறைய நிகழ்ச்சிகள், சன் டிவி பொங்கல் ஸ்பெஷல் பேட்டிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியா என்னை நீங்க பார்த்திருக்கலாம். செம பிஸியா... செம ஜாலியா லைஃப் எப்போதுமே சிரிச்சிட்டே இருக்குற பொண்ணுதான் நான். விஸ்காம் படிக்கும்போது சன் டிவியில் இன்டர்ன்ஷிப் பண்ணினேன். அப்போ சும்மா விளையாட்டா முயற்சி செய்ததுதான் ஆர்ஜே வேலை.  

விஜே - லைஃபை மிஸ் பண்ணுறீங்களா? 

விஜய் சாரதி: ரொம்பவே மிஸ் பண்றேன். இப்பவும் கூட பின்னாடி நடந்து பேசுறதுனா ரொம்ப பிடிக்கும். வெளியூர் போகும்போது, ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சி பற்றி யாராவது பேசினாலே செம ஃபீலாகிடும்.   மீடியாவில் இருக்குறவங்களுக்கு ஆடியன்ஸ் மூலமா கிடைக்கிற பாராட்டு தான் எனெர்ஜி டானிக். அந்த சந்தோஷத்தையும் டிராவலையும் மிஸ் பண்றேன். 

விஜய் ஆதிராஜ்: வாழ்க்கைங்குறது ரோலர் கோஸ்டர்  மாதிரிதான். ஏற்றமும், சரிவும் இருக்கும். ஏறும்போது இருக்குற மகிழ்ச்சியை விட இறங்கும்போது அதிகமான பயம் இருக்கும். வெற்றி, தோல்வினு இரண்டையுமே ஏத்துக்குற பக்குவம் வேணும். விஜேவா இல்லாட்டாலும் இதே சினிமாவில் தான் இருக்கேன். ஆனா வேற வேற பரிமாணங்களில் இருக்கேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு.

காயத்ரி: ஜாலிக்காக விஜேவா இருந்தேன். அப்போதான் எனக்குள்ள இருக்குற திறமைகள் புரிஞ்சுது. நிறைய கத்துக்கொடுத்ததும் இந்த விஜே லைஃப் தான். யாராவது நீங்க க்யூட்டா இருக்கீங்கனு சொல்லும்போது கிடைக்கும் அற்ப சந்தோஷத்தை நிறையவே மிஸ் பண்றேன். நிறைய மனிதர்கள், நிறைய புதுசா கிடைத்த அனுபவங்கள் எல்லாமே திருமணத்தோடு முடிஞ்சிடுச்சி. திரும்பக் கிடைக்காத அந்த விஜே லைஃப் ஐ மிஸ்டு! 

இப்போ என்ன பண்றீங்க? 

விஜய் சாரதி:  சன் டிவி நெட்வொர்க்ல சேனல் ஹெட்டா வேலை செய்கிறேன். பொறுப்பு அதிகமானதால் விஜேவாகத் தொடரமுடியலை. ஆனா சமீபத்தில் ‘சைத்தான்’ படத்தில் கூட என்னை நீங்க ஆட்டோக்காரரா பார்த்திருக்கலாம். எப்பவாச்சும் நடிப்பு, சீரியல், மற்ற நேரங்களில் அலுவலக வேலைனு பின்னாடி திரும்பிப் பார்க்காம ஓடிக்கிட்டு இருக்கேன். 

விஜய் ஆதிராஜ்: அன்று தொடங்கிய ஆர்ஜே லைஃப் தான் இப்போ என்னுடைய இந்த நிலைக்கு காரணம். ‘புத்தகம்’னு ஒரு படம் இயக்கினேன். இரண்டாவது படமும் ஆரம்பிக்கப்போறேன்.  இதற்கு நடுவில் பட விநியோகம், சீரியல்னு மீடியாவில்தான் இருக்கேன். 

காயத்ரி : திருமணமாகி இரண்டு பசங்க இருக்காங்க. காலையில் குழந்தைங்க ஸ்கூலுக்கு கிளப்புறதுல தொடங்குற வேலை, எல்லோருக்கும் சாப்பாடு செஞ்சு வச்சிட்டு, வீட்டுவேலைகள் முடிச்சிட்டு, என்னோட வேலையையும் பார்த்துட்டு, சாயங்காலம் பசங்க வீட்டுக்கு வரும்வரைக்கும் செம பிஸி பாஸ் நான்.  இதுக்கு நடுவில்  வீட்டிலேயே இயற்கையான முறையில் காஸ்மெடிக்ஸ் தயார் செய்து, ஆன்லைனில் விற்பனையும் செய்துட்டு இருக்கேன்.  

விஜேவா நீங்க எடுத்த பேட்டியில் மறக்கமுடியாதவர்?விஜய்சாரதி: திடீர்னு போன் பண்ணி, அடுத்த அரை மணிநேரத்தில் பிரபலங்களுடன் பேட்டினு சொல்லிடுவாங்க. யார்னு கூட தெரியாம போய்ப் பேசியிருக்கேன். நிறைய ஆச்சரியமாத்தான் இருக்கும்.  நான் எடுத்த பேட்டியிலேயே மறக்கமுடியாத நபர் ரஜினி சார் தான்.  

விஜய் ஆதிராஜ்: உண்மை என்னன்னா, ஆர்ஜேக்கள் நிஜமாகவே நிறைய பேட்டிகள் எடுத்திருப்பாங்க. ஆனா நான் இதுவரைக்கும் யாரையுமே சந்திச்சுப் பேட்டி எடுத்தது கிடையாது. அதுக்கான வாய்ப்பு வரலைனுதான் சொல்லணும். ஆனா எனக்கும் ஆசை இருந்தது.  ஆனா நடக்கலையே ஜி! 

காயத்ரி: மாதவன் சாரோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இப்பவும் எனக்கு நினைவில் இருக்கு. அவர் வீட்டுக்கே போய்ப் பேட்டி எடுத்தோம். “நடிப்புனா அவ்ளோ ஈஸி கிடையாது. நம்மைச் சுத்தி என்ன நடக்குதுனு கவனிக்கணும்’னு அவர் சொன்னது இப்பவும் எனக்கு வேதவாக்கு.

சாய், சபர்ணா தற்கொலை மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம், சின்னத்திரையில் அப்படி என்ன சிக்கல்? 

விஜய்சாரதி: நமக்குனு ஒரு குடும்பம் இருக்குங்குறதை நாம எப்போதுமே மனசுல வச்சிக்கணும். உங்களை நேசிக்கிறவங்க நிறையபேர் இருக்காங்க. ஆனா உங்களையே நம்பி சிலபேர்தான் இருக்காங்க. அவங்களுக்காக கண்டிப்பா நாம வாழணும். இருவரின் மரணங்களும் நிச்சயமாகவே ரொம்ப வருத்தமான விஷயம்தான். எந்தப் பிரச்னைனாலும் பொறுமையா யோசிச்சா தெளிவான முடிவு கிடைக்கும். 

விஜய்ஆதிராஜ்:  ‘காற்று இருக்கும்போதே தூற்றிக்கொள்’னு சொல்லுவாங்க. சின்னத்திரையில் ஃபேமஸா இருக்கும்போதே, அதற்கு சமமா இன்னொரு வேலையையும் ஏற்பாடு செய்துக்கணும். சின்னத்திரையில் நமக்கான வாய்ப்பு இல்லாத நேரத்தில், இன்னொரு வேலையோ, நீங்க செய்யும் வேறொரு தொழிலோ உங்களுக்குக் கைகொடுக்கும். சின்னத்திரையால் நீங்க பயன்பெறலாம். வேற வேலையினால உங்க பொருளாதாரம் பயன்பெறும். Sucide is not the  Answer. 

காயத்ரி:   சபர்ணா ரொம்பத் தைரியமான பொண்ணு. சின்ன டவுன்ல இருந்து சென்னைக்கு வந்த அவளோட கடின உழைப்புதான் அவளோட வளர்ச்சிக்குக் காரணம். எப்போ பார்த்தாலும் சிரிச்சிட்டேதான் இருப்பா. அவளோட உண்மையான பெயரு சுகுணா. எல்லோரும் சுகுணா சிக்கன்னு கலாய்கிறாங்கனுதான் பெயரை மாத்தி வெச்சுக்கிட்டா. அவளோட பெரிய பிரச்னையே மனக்கஷ்டம்தான். எந்த கஷ்டம்னாலும் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கணும். அவ அதைச்செய்யலை. நல்ல நண்பர்கள் இருந்தாலே எல்லாம் சரியாகிடும். 

இப்போ ஹேப்பியா இருக்கீங்களா? 

விஜய் சாரதி: நல்ல குடும்பம், செமையான வேலைனு ரஜினி ஸ்டைலில் கெத்தா இருக்கேன்.  நாம சம்பாதிச்சி எதுவும் எடுத்துட்டுப்போகலை. நமக்கு கிடைச்ச இந்த உலகத்தை அப்படியே நம்மோட அடுத்த தலைமுறைக்கும் கொடுத்துட்டுப்போகணும்.. அதனால் பிளாஸ்டிக் குப்பைகளைத் தெருவில் போடாதீங்க.. என்ன விட்டுட்டுப்போனோம்ங்குறதை விட, எதையும் விடாம போனாலே இப்போ ரொம்ப பெரிய விஷயம் தான். 

விஜய்ஆதிராஜ்: இதோ அடுத்தப் பட வேலையில் பிஸியா இருக்கேன். நம்ம மனசுக்குப் பிடிச்ச எந்த வேலை செஞ்சாலும் செம ஹேப்பி தான். வீட்டுக்குப் போன பசங்களோடு விளையாட்டு, வேலைனு குமுதா ஹேப்பி தான் அண்ணாச்சி!

காயத்ரி: விஜேவாக  இருந்தது, பசங்களுக்கு அம்மாவா இருக்குறது ரெண்டுமே சந்தோஷமான காலங்கள் தான். வாழ்க்கையில் சலிப்போ, கடுப்போ கிடையாது.  

மகிழ்ச்சி!

முழுமையான வீடியோ பேட்டிக்கு: 

பி.எஸ்.முத்து