Published:Updated:

2016-ல் அசால்ட் செய்த 5 பிறமொழிப் படங்கள்! #2016Rewind

2016-ல் அசால்ட் செய்த  5 பிறமொழிப் படங்கள்!  #2016Rewind
2016-ல் அசால்ட் செய்த 5 பிறமொழிப் படங்கள்! #2016Rewind

பெரும்பாலான இந்திய மக்களின் உச்சகட்ட பொழுதுபோக்கு சினிமா மட்டும் தான். இதில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களே ரசிகர்களின் சாய்ஸாக இருக்கும். ஆனால் நாம் பார்த்திடாத, இந்திய பிறமொழிப் படங்கள் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில் பஞ்சாபி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட பிற இந்தியமொழிப்படங்களில் இந்த வருடம் ரிலீஸாகி ஹிட்டடித்த பெஸ்ட் படங்களின் லிஸ்ட் இது. 

சினிமாவாலா (பெங்காலி) ( Cinemawala : Bengali)

இந்த வருட மே 13ல் ரிலீஸான பெங்காலி படம். சினிமா பற்றிய சினிமா படம். 2012ல் ஷப்டூ என்ற தேசியவிருதுபெற்ற படத்தை இயக்கிய கெளஷிக் கங்குலியின் இயக்கத்தில் மற்றுமொரு சிறந்த படைப்பு. கொல்கத்தாவிலுள்ள கிராமத்தில் வசிக்கும் பிரனாபோந்த் தாஸ் தான் கதை நாயகன். 

திரையரங்கின் மீது மையல் கொண்டுள்ள பிரனா, ஃபிலீம் ரீல் திரையரங்கின் மீதான காதலும், பழங்கால சினிமா பற்றியுமான நினைவுகளுடன் வாழ்பவர். அதற்கு மாறாக, இவரது மகன்  நிகழ்கால சுகபோகங்களில் வாழ நினைப்பவர். தடைசெய்யப்பட்ட டிவிடி விற்கும் மகன் பிரகாஷூக்கும், தந்தை பிரனாபோந்திற்குமான உரசல் தான் திரைக்கதை. தலைமுறைகளுக்கிடையேயான இடைவெளியை அழகாக பதிவு செய்திருக்கும் படம் தான் சினிமாவாலா. 

டிரெய்லர்:

செளதி கூட் (பஞ்சாபி) (Chauthi Koot : Punjabi) 

கடந்த 2015லேயே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டாலும், இந்தியாவில் இந்தவருடம் ஆகஸ்ட் 5ல் தான் ரிலீஸானது. வர்யம் சிங் சந்து என்ற எழுத்தாளரின் இரண்டு சிறுகதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். 1980களில் “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்” சம்பவத்திற்குப் பிறகான பஞ்சாபி கிராமத்தின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதே கதைக்களம். கிராமமெங்கும் குவிக்கப்படும் காவலர்கள், சம்பந்தமே இல்லாமல் நடத்தப்படும் அநீதிகள் என்று அப்பகுதி மக்களின் உணர்வுகளையும், பதட்டத்தையும் அப்படியே பிரதிபலித்திருக்கும் படம் தான் செளதி கூட். செளதி கூட் என்றால் நான்காவது திசை என்பது அர்த்தம்.  குர்விந்தர் சிங் இயக்கிய இப்படம் நிச்சயம் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. உலக திரையரங்குகளில் பல விருதுகளைப் பெற்ற மிகமுக்கியமான படம். 

டிரெய்லர்:

திதி (கன்னடம்) (Thithi : kannada)

உலக சினிமாவையே திரும்பிபார்க்கவைத்த கன்னட மொழி படம் தான் திதி. லூசியாவிற்குப் பிறகு கன்னடத்தில் அதிகம் பேசப்பட்டது இப்படம். மாண்டியா மாவட்டத்தில் உள்ள நொடெகொப்பளு என்ற கிராமத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. 101 வயதுகொண்ட பெரியவரான செஞ்சூரி தாத்தா இறந்துவிடுகிறார். மகன் கட்டப்பா, பேரன் தமான்னா மற்றும் கொள்ளுப்பேரன் அபி என்று மூன்று தலைமுறை குடும்பமும் கலந்துகொள்ளும் 10வது நாள் காரியத்தில் நடக்கும் பிரச்னைகளும் அக்கப்போரும் தான் கதை. தாத்தாவின் சொத்திற்காக நடக்கும் அட்டகாசத்தை காமெடியாக சொல்லியிருப்பது அசத்தல் ரகம். இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே மாண்டியா பகுதி மக்கள் தான் என்பது ஸ்பெஷல். பல விருதுகள், கன்னடத்தின் சிறந்தப் படம் என்று அழிக்கமுடியாத பொக்கிஷமாகிவிட்டது திதி. இந்த முறை மட்டும் “திதி” வரவேற்கப்படுகிறது. 

டிரெய்லர்:

சாய்ராட் (மராத்தி) (Sairat : marathi) 

ஓர் இயக்குநரின் படைப்பு, எந்த வித சமரசமும் இல்லாமல், சமகால அரசியலையும், சமூக அவலங்களையும், சாதியப் பிரச்னைகளையும் பேசவேண்டும். அப்படி பேசப்படும் திரைப்படங்கள் கொண்டாடப்படும் என்பதற்கு சான்று தான் சாய்ராட். ஃபாண்டரி திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் கரையோடிப்போய் இருக்கும் சாதிய அரசியலைப் பேசிய நாகராஜ் மஞ்சுளே, மீண்டும் ஒரு முறை ஆதிக்க சாதியின் முகத்திரையை கிழித்திருக்கும் படம் தான் சாய்ராட். ஏப்ரல் 29ல் வெளியான இப்படம், 4 கோடியில் உருவாகி 100 கோடிவரையிலும் வசூலித்தது. படத்தின் பாடல்களும் எல்லைகள் தாண்டி பிரபலமானது.

இந்திய சினிமாவிற்கு பழக்கப்பட்ட ஆதிக்க சாதிப் பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட பையனுக்குமான காதல் கதை தான் என்றாலும், ஆண்ட பரம்பரையின் சாதிய தாக்கம் எந்த ஆழம் வரைப் பாயும் என்பதை சொல்கிறது சாய்ராட். காதல், காமெடி, கலாட்டா என்று முதல் பாகம் கொண்டாட்டங்களுடன் நகர்ந்தாலும், இரண்டாம் பாகம் வெளிப்படையான அரசியலை நறுக்கென பேசுகிறது. ஃபாண்டரி படத்தின் இரண்டாம் பாகம் என்றே இப்படத்தைச் சொல்லலாம். இரண்டு படங்களுமே தவிர்க்கமுடியாத இந்திய சினிமாக்கள். 

டிரெய்லர்:

லொக்டக் லைரெம்பீ (மணிப்பூரி) (Loktak Lairembee : Manipuri)

71 நிமிடம் ஓடக்கூடிய இந்த மணிப்பூரி திரைப்படம் டம்பா என்பவரின் கதையைச் சொல்கிறது. லொக்டக் ஏரியில் ஏற்படும் மாசுபாட்டால், டம்பாவின் சமூகத்தினரின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்தப் பிரச்னையின் போது டம்பாவின் குடிசை எரிந்து நாசமாகிவிடுகிறது. இந்த சம்பவத்தால் அவர் மனதளவில் பாதிக்கப்படுகிறார். அந்த நேரத்தில் எதேச்சையாக துப்பாக்கி ஒன்றையும் கண்டெடுக்கிறார். புதிதாக கிடைத்த பொம்மை போல வைத்து விளையாடும் டம்பா, அதை பயன்படுத்துவதற்கான நேரத்திற்குக் காத்திருக்கிறார்.  ஒருநாள் இரவில் வயதான பெண் டம்பாவின் வீட்டு கதவை தட்டுகிறார். அப்பொழுது...... ஒரிஜினல் டிவிடி தேடி வாங்கிப் பாருங்களேன்!  

“லொக்டக் லைரெம்பீ” என்றால் லேடி ஆஃப் லேக் (Lady Of Lade) என்று அர்த்தம். இப்படத்தை ஹோபம் பபன் குமார் (Haobam paban kumar) இயக்கியிருக்கிறார்.  மணிப்பூரி மீன் பிடித்தொழிலாளர்களின் வாழ்வியலையும், சமூக அரசியலையும் பேசும் இப்படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நம்ம சென்னைத் திரைப்பட விழாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.  

டிரெய்லர்:

பி.எஸ்.முத்து