Published:Updated:

பின்னணி இசைக்காகவே பிறந்தவர் இந்த மனுஷன்! - இளையராஜாவைப் பாராட்டுபவர் யார்?

பின்னணி இசைக்காகவே பிறந்தவர் இந்த மனுஷன்! - இளையராஜாவைப் பாராட்டுபவர் யார்?
பின்னணி இசைக்காகவே பிறந்தவர் இந்த மனுஷன்! - இளையராஜாவைப் பாராட்டுபவர் யார்?

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றை சொல்லும் விதமாக புகைப்படக் கண்காட்சியின் துவக்க விழாவும், ஆவணப்பட வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர்கள் நாசர், பொன்வண்ணன் ஆகியோரும் இயக்குனர்கள் ஜனநாதன், மிஷ்கின், வசந்த். எடிட்டர் லெனின் என பல்வேறு திரை ஆளுமைகள் கலந்து கொண்டனர். விழாவை நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார். 

விழாவின் ஒரு பகுதியாக இயக்குனர் அஜயன் பாலா இயக்கியிருந்த நூறாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றை சொல்லும் விதமாக ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. கடந்த நூறு ஆண்டு காலங்களில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்களையம் தமிழ் சினிமாவின் பல்வேறு பரிமாணங்களையும் பதிவு செய்வதாக அந்த ஆவணப்படம் இருந்தது. புகைப்படக் கண்காட்சியை நடிகர் நாசர் துவக்கி வைத்தார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின் " இந்த ஆவணப்படத்தை பார்க்கும் பொழுது இதுவரைக்கும் என்ன படம் பண்ணியிருக்கேன்னு அசிங்கமா இருக்கு. ஒரு படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை, திரைத்துறை மாணவர்களான நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்னோட அஞ்சு வயசுல நான் பார்த்த முதல் படம் 'என்டர் தி டிராகன்'. எங்கப்பா அரை நாள் வேலைக்கு லீவ் போட்டுட்டு என்னை அழைச்சுட்டு போனாரு. அப்போ எனக்கு அந்தப் படத்துல ஒண்ணுமே புரியல. படம் முடிஞ்சு வெளியே வந்ததும் 'படம் எப்படிடா இருந்தது'ன்னு கேட்டாரு. நான் சூப்பரா இருக்குப்பான்னு சொன்னேன். சாப்பிடாம, அடுத்த ஷோவுக்கு டிக்கெட் வாங்கிக் கூட்டிகிட்டு போய்ட்டாரு.

அதே போல ஒரு பொருட்காட்சியில 'அன்னக்கிளி உன்னை தேடுதே' பாடல் போட்டிருந்தாங்க.  இந்தப் படங்கள்ல இருந்து தான் என்னோட சினிமா பயணம் ஆரம்பிச்சதுன்னு சொல்லுவேன். இளையராஜா ரீ ரெக்கார்டிங் பண்றதுக்காகவே பிறந்து இருக்கார். எம் ஜி ஆரும், சிவாஜியும் தமிழ்சினிமாவோட பொக்கிஷங்கள். ஒரு பெரிய டாக்குமெண்ட் தான் சினிமா. எல்லாத்தையும் பதிவு செய்து வைக்க வேண்டிய ஒரு முக்கியமான தருணத்துல இருக்கோம். நம்ம முன்னோர்கள் வாழ்க்கையை ரொம்ப உத்து பார்த்திருக்காங்க. நாம அப்படி பாக்குறது கிடையாது. 'ரெவெனென்ட்' கிரேட் ஃபிலிம் கிடையாது 'பசி' தான் கிரேட் ஃபிலிம். 'டைட்டானிக்' சிறந்த படம் கிடையாது 'தண்ணீர் தண்ணீர்' தான் சிறந்த படம்." என்றார்.

தமிழ் சினிமா நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியில் தமிழ் சினிமாவின் தோற்றம், பல்வேறு திரை ஆளுமைகளின் அரிய படங்கள் அவர்கள் குறித்த தகவலோடு வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது பல்வேறு திரைப்படங்கள் கிரவுட் ஃபண்டிங் மூலமாக பணம் சேர்த்து படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், தமிழில் முதல் முதலாக கிரவுட் ஃபண்டிங் மூலமாக தயாரிக்கப்பட்ட படம் 'பாதை தெரியுது பார்'. 1960 ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தை 45 கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து தயாரித்தனர். நிமாய் கோஷ் இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படி பல அரிய தகவல்களோடு புகைப்படங்ளையும் சேர்த்து பார்ப்பது புதிய அனுபவத்தை தருகிறது. "ஜனவரி 6 ஆம் தேதி வரையில் ராமாபுரம் எஸ் ஆர் எம் கல்லூரி வளாகத்திலும் அதற்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் - குறிப்பாக நிறைய கிராமங்களிலும் - இந்தப் புகைப்பட கண்காட்சியை நடத்த இருக்கிறோம்" என்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.

- க. பாலாஜி

படங்கள் : கோகுல்ராஜ்