Published:Updated:

தமிழ் சினிமாவை களைகட்டச் செய்த ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு!

Vikatan Correspondent
தமிழ் சினிமாவை களைகட்டச் செய்த ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு!
தமிழ் சினிமாவை களைகட்டச் செய்த ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு!

தமிழ்நாட்டின் வீர விளையாட்டுகளுள் ஒன்று ஜல்லிக்கட்டு. அந்த  விளையாட்டு இடம்பெற்ற படங்கள் இதோ! 

தமிழ் சினிமாவை களைகட்டச் செய்த ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு!

முரட்டுக்காளை :

இந்தப் படத்தைச் சொன்னவுடன் முதலில் நினைவிற்கு வருவது ரஜினிகாந்தும் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாட்டும்தான். காளையை அடக்க ரஜினி என்ட்ரி ஆகும்போது அங்குள்ள மக்கள் கைதட்டி உற்சாகத்தோடு வரவேற்பார்கள். ஜெய்சங்கரின் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்ததோடு தனது சகோதரியையும் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக அறிவிப்பார். பல நபர்கள் முயன்றும் ஒருவராலும் அடக்க முடியாமல் போய்விடும். பின் ரஜினியைப் பார்த்து கேலி பேசுவார் ஜெய்சங்கர். அதைப் பொறுக்க முடியாத ரஜினி காளையை அடக்கக் கிளம்பிவிடுவார். பல நிமிட போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாகக் காளையை அடக்கிவிடுவார். ஆனால் பரிசுக்காகவும் உங்கள் தங்கையைத் திருமணம் செய்வதற்காகவும் நான் இந்த மாட்டை அடக்கவில்லை' என்று ஸ்டைலாகக் கூறி நகர அப்போது ஆரம்பிக்கும் இந்த 'அண்ணணுக்கு ஜே' பாட்டு. 

விருமாண்டி : 

 கமல்ஹாசன் நடித்து வெளிவந்த படம்தான் 'விருமாண்டி'. கிட்டிவாசலில் இருந்து வெளிவரும் மாட்டை அடக்குவது  வழக்கம். கமல் சற்று வித்தியாசமாக போஸ்ட் கம்பத்தின் மேல் ஏறி நின்று மாட்டை அடக்கக் காத்துக் கொண்டிருப்பார். காளைமாடு வரவிருக்கும் நேரத்தில் கூட்டமே 'விருவிருமாண்டி விருமாண்டி' என்று கோரஸாக பாட மாட்டை அவிழ்த்துவிட்டதும் அதன் திமிலைப் பிடித்துக்கொண்டே சற்று தூரம் சென்று கீழே விழுந்து பல இடையூறுகளைச் சந்தித்து முடிவில் காளையை அடக்கிவிடுவார் கமல். அந்த மாடு ஹீரோயின் அபிராமிக்குச் சொந்தமான மாடு. அப்புறம்தான் எல்லாமே ஆரம்பம்.

சேரன் பாண்டியன் :

சரத்குமாரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சேரன் பாண்டியன்'. அதில் ஊரிலுள்ள அனைத்துத் தலைக்கட்டுகளின் காளைமாடுகளும் வரிசையாக அவிழ்த்துவிடப்படும். எல்லா மாடுகளும் பிடிபட்டபின் ஊர்த் தலைவர் பெரிய கவுண்டரின் காளை வரத் தயாராக இருக்கும். இதுவரை ஊரில் யாரும் அந்தக் காளையை யாரும் அடக்கியிருக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் கே.எஸ். ரவிக்குமார் அருகிலிருக்கும் ஆனந்த்பாபுவைக் கோர்த்துவிடுவார். ஆனால் சரத்குமார் அந்த மாட்டை அடக்குவதற்காக வாடிவாசலுக்குள் வருவார்.  மாட்டை அடக்கியும் விடுவார். அதைப் பார்க்கப் பொறுக்காமல் துப்பாக்கியை எடுத்து மாட்டைச் சுட்டுவிடுவார் பெரிய கவுண்டர்.

ராஜகுமாரன் :

இந்தப் படத்தின் ஹீரோ பிரபு. ஜல்லிக்கட்டுக்குத் தயார் நிலையில் அனைத்து மாடுகளும் வாடிவாசலில் நின்று கொண்டிருக்கும். எல்லா மாடுகளையும் வீரர்கள் அடககிவிட ஒரு மாடு மட்டும் வீரர்கள் அனைவரையும் பந்தாடும். இந்த மாட்டை அடக்கும் தைரியம் ஊரில் யாருக்கும் இல்லையென்று ஊரை இழிவுப்படுத்தி பேசிவிடுவார் வில்லன். பின் அந்தக் காளையை நான் அடக்குகிறேன் என பிரபு களமிறங்குவார். முதலில் ஒரு சில அடிகளை வாங்கினாலும் முடிவில் மாட்டை அடக்கிவிடுவார் பிரபு.

நெஞ்ச தொட்டு சொல்லு :

மாட்டை அடக்க யாரும் முன் வராத காரணத்தினால் 'பூங்காவனத்துக் கிராமத்தில் அந்த மாட்டை அடக்கும் தைரியம் யாருக்கும் இல்லையா' என்று கூறி  ஊரை மிகவும் இழிவுப் படுத்தும்படி பேசுவார் ஒருவர். அதைக் கேட்ட ஹீரோ ஊர் மானத்தை நான் காப்பாற்றப் போகிறேன் என்று அவரே அந்த மாட்டை அடக்க முன் வருவார். சீறிவரும் மாட்டைக் குறுக்கே புகுந்து அடக்க வருவார். பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக மாட்டை அடக்கி ஊர் மானத்தைக் காப்பாற்றி விடுவார் ஹீரோ. வெற்றி பெற்ற வீரனுக்கு பரிசுப் பணத்தை கொடுக்க வருவார்கள். 'கேவலம் இந்தப் பணத்திற்காக நான் அந்த மாட்டை அடக்கவில்லை இன்னொரு முறை எங்கள் ஊரைப் பற்றி இழிவாகப் பேசினால் நடக்கிறதே வேற' என்று பன்ச் பேசிவிட்டுச் செல்வார்.

அரவான் :

அசம்பாவிதமாக மாட்டை அடக்கச் சென்ற பசுபதியை மாடு குத்திவிடும் அதைப்பார்த்து பொறுக்க முடியாமல் ஹீரோ ஆதி அந்த மாட்டை அடக்க முன் வருவார். 'நீ போகாதே ஏனென்றால் நீ வெளியூர்க்காரன்' என்று தடுப்பார் பசுபதி. 'யாருடா வெளியூர்க்காரன். நானும் இந்த ஊரில் பிறந்த வேறு ஊரில் வளர்ந்தவன்' என்று பன்ச் பேசுவார் ஹீரோ ஆதி. பின் தன் திடமான சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் மாட்டை அடக்க வீரத்துடன் செல்வார். மாட்டின் அருகே சென்று மாட்டின் திமிலைப் பிடித்து அடக்க முயற்சிப்பார். பல முறை போராட்டத்திற்குப் பின் மாட்டை அடக்கி வென்றுவிடுவார். 

-தார்மிக் லீ