Published:Updated:

"ரமேஷ் திலக் எனக்கு அவ்வ்வ்வளவு ஸ்பெஷல்!’’ - காதல் கதை சொல்லும் ஆர்.ஜே.நவலட்சுமி #VikatanExclusive

"ரமேஷ் திலக் எனக்கு அவ்வ்வ்வளவு ஸ்பெஷல்!’’ - காதல் கதை சொல்லும் ஆர்.ஜே.நவலட்சுமி  #VikatanExclusive
"ரமேஷ் திலக் எனக்கு அவ்வ்வ்வளவு ஸ்பெஷல்!’’ - காதல் கதை சொல்லும் ஆர்.ஜே.நவலட்சுமி #VikatanExclusive

சூரியன் எஃப்.எம். பண்பலையில் ‘மகளிர் மட்டும்’, ‘கிசுகிசு கீதா’ நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கும் செம ஆக்டிவ் ஆர்.ஜே. நவலட்சுமி. நிகழ்ச்சி தயாரிப்பாளர், வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட், டான்ஸர் என  பல திறமைகளை வெளிப்படுத்தி வருபவர். தற்பொழுது சிலம்பமும் கற்றுவருகிறார். ஏன் என்று விசாரித்தால், “எங்க குடும்பத்துல எல்லோருக்குமே சிலம்பம் தெரியும். நாம் மட்டும் தான் கத்துக்காம இருந்தேன்” என்கிறார். ‘‘என்னது எல்லாருக்கும் சிலம்பம் தெரியுமா?” என்று ஆச்சர்யப்படும்போதுதான், தான் யார் மகள் என்று சொல்கிறார். ஆம்... இவர் பிரபல சண்டைப்பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமாரின் மகள்.

புத்தாண்டின் முதல் நாளில் தனக்கும் ரமேஷ் திலக்-கிற்குமான காதல் செய்தியை அறிவித்துவிட்டு, அமைதியாக இருந்தவரைப் பிடித்து என்ன விஷயம் என்று கேட்டோம்.  என்னதான் ஆச்சு.... எப்படித்தான் ஆச்சு.....? ஆர்.ஜே. நவலட்சுமியே சொல்கிறார். 

மீடியாவை ஏன் தேர்ந்தெடுத்தீங்க? 

“என்னோட ஒட்டுமொத்த குடும்பமுமே சினிமாவில் தான் இருக்காங்க. நானும் சினிமாவுக்கு நெருக்கமான வேலையைப் பார்ப்பேன்னு மட்டும்தான் முதலில் தெரியும், ஆனா என்னவாகப்போறேனு தெரியாது. படிச்சி முடிச்சிட்டு வெளிநாட்டுக்குப் போய் படிக்கலாம்னு ப்ளான். ஆனா, கல்லூரி இறுதி வருடத்தில் சூரியன் எஃப்.எமில் ஆடிஷன் கலந்துக்கிட்டேன். வேலை ஓகே ஆனதும் சென்னையிலேயே செட்டில் ஆகிட்டேன். என்னென்னே தெரியாம மீடியாவுக்குள்ள நுழைஞ்சிட்டேன். ஆனா இப்போ ஆர்.ஜே.வாக இருக்குறது ஒர் ஆசீர்வாதமாதான் நினைக்கிறேன். பேசுறது ரொம்ப ஈஸியான விஷயம் தான். ஆனா மைக் முன்னாடி பேசுறது அவ்வளவு சுலபம் கிடையாது. மீடியா உலகத்தில் ஐந்து வருசமா இருந்தாலும் தினமும் புதுசா ஒண்ணு கத்துக்கிட்டு இருக்கேன். முக்கியமான இன்னொரு விஷயம் என்னென்னா... டிவிகளில் ‘திரைப்படத்தின் இப்பகுதியை வழங்குபோர்...’னு ஒரு வாய்ஸ் கேட்கும்ல அது நான் தான்” என்று ஜாலியாக சிரிக்கிறார் நவலட்சுமி. 

இந்தப் புதுவருஷம் எப்படி இருக்கு?

“எப்பொழுதுமே புதுவருஷத்தை பாசிட்டிவான விஷயங்களோடு தான் தொடங்கணும். எனக்கான பாசிட்டிவான விஷயம் நடந்துடுச்சி. காத்திருப்புக்கு கிடைத்த பரிசுனு தான் சொல்லணும். இந்த வருடம் எனக்கு திருமணமும் நடக்கபோகிறது..... எனக்கான சரியான பாதை கிடைச்சிட்டதா தான் நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று மகிழ்ச்சியுடன் தன் காதலையும், திருமணத்தையும் காதலுடனும், கவித்துவத்துடனும் பகிர்ந்துகொள்ள தயாரானார் ஆர்.ஜே.நவலட்சுமி. 

“என் காதல் ஆரம்பித்த முதல் புள்ளி எதுன்னு இப்ப வரைக்கும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன். எப்போ.. எப்போனு பல நாள் யோசிப்பேன். ஏன்னா,  2016 தான் எங்களுக்கான திருப்புமுனை. அவர் எட்டு வருஷமாகவும், நான் ஐந்து வருஷமாகவும் சூரியன் எஃப்.எம்மில் வேலை பார்க்கிறோம். அப்போவெல்லாம் எங்களுக்குள்ள ஏதும் தோணலை. எங்க ரெண்டுபேர் வீட்டுலயும் திருமணப் பேச்சு எடுக்க தொடங்கியதும் தான், எங்களுக்கான லைஃபை தேடிக்கண்டுபிடிக்க முடிஞ்சது. திட்டமிட்டு ஏதுமே நடக்கலை. எதிர்பாராம நடந்துடுச்சி எங்க காதல். காதல்னு கூட சொல்ல முடியாது...அதையும் தாண்டிய உணர்வா தான் பார்க்குறேன்.  

முதல்முறையா ரமேஷ் திலக் என்னிடம் காதலைச் சொல்லும் போது, செம ஷாக்கிங்..உண்மையா, பொய்யா.... என்ன நடக்குனு தெரியாம சிலையாகிட்டேன். பதிலுக்கு நான் ஏதும் சொல்லலை. எங்க வீட்டில் பேசுங்கனு சொல்லிட்டேன். அம்மா, அண்ணானு வீட்டில் க்ரீன் சிக்னல் கொடுக்கவும்தான் எங்க காதல் தொடங்குச்சி. ரொம்ப ஜாலியான, என்னை முழுசா புரிஞ்சிக்கிறவர் ரமேஷ் திலக்..... நீங்க படங்களில் பார்க்குறதை விட செம ஜாலியா தான் இருப்பார். நான் எப்போதுமே சிரிச்சிட்டே இருக்கணும்னு நினைக்கிற ரொம்ப உண்மையான மனிதர். இப்போ வரைக்கும் என்ன ரொம்ப பத்திரமா பார்த்துக்குறார். என் வாழ்க்கை முழுவதும் என்னை பத்திரமா பார்த்துப்பார்னு தெரியும்” சிறு ஆனந்தகண்ணீருடன் தொடர்கிறார்.  

ரமேஷ் திலக் பற்றிச் சொல்லுங்க?  

“என்னமாதிரியே  வீடே உலகம்னு இருக்குறவர். எந்த டென்ஷனுமே இல்லாம எப்பொழுதுமே சிரிச்சிட்டே தான் இருப்பார். இதுதான் இலக்குனு வச்சிக்காம, நல்ல படங்கள் பண்ணணும்னு மட்டும் தான் நினைப்பார். ஓவரா இல்லாம, இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். எப்போதுமே நேர்மையா தான் இருக்கணும்னு நினைப்பவர். நிறைய படங்கள் அடுத்தடுத்து இந்தவருஷம் வெளியாக இருக்குது. எனக்கும் அவருக்கும் நிறைய ஒத்துப்போகும். அவரை எனக்காகவே கடவுள் அனுப்பிருக்கறதாகத்தான் நம்புறேன்.

’இந்த உலகத்திலேயே நீங்க தான் ரொம்ப அழகு... என் வாழ்க்கையிலேயே நீங்க மட்டும் தான் இருக்கீங்க’ இந்த மாதிரியான க்ளிஷேவான எந்த புரோபோஸலும் எங்களுக்கு நடக்கவில்லை. நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட லவ்யூனு சொல்லுறது ரொம்ப சகஜமான விஷயம் தானே.  அது மாதிரியே என்னிடம் சொல்லிட்டு, நான் ஃப்ரெண்ட்லியா தான் சொன்னேன்னு சொல்லிட்டு போய்ட்டார். அந்த ஒற்றை ‘லவ்யூ’க்குள்ள இருக்குற அந்த ஃபீலிங்கை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது. அந்த ஃபீலிங் ரொம்ப அழகானது. 

எப்போ திருமணம்? 

 “இந்தக் கேள்வியை பாஸ் பண்ணிடலாமே....” யோசனையோடு தொடர்கிறார்... “ரெண்டு பேர் வீட்டுலயும் சம்மதம் தான்.  வீட்டுல பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதற்கான ப்ளானிங் போய்கிட்டு இருக்கு. எப்படியும் சீக்கிரமாகவே நிச்சயதார்த்தமும், ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கும். கல்யாண வேலை நிறைய இருக்கு.  அந்த நாட்களைத் தான் எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்கேன்” 

குடும்பமே சினிமாவில் இருக்காங்க. இப்போ ரமேஷ் திலக்கும் கூட.. நீங்க சினிமாவுக்கு வருவீங்களா? 

“இந்த கேள்வியை எங்க வீட்டுல கேட்டாங்கனா... விழுந்து சிரிப்பாங்க. நடிகரை திருமணம் செய்யப்போறேனு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு நடிகராகவோ, பிரபலமாகவே இப்போ வரைக்கும் நான் அவரைப் பார்த்தது கிடையாது. என் கண்ணுக்கு அவர் ரமேஷா மட்டும் தான் தெரியுறார். கண்டிப்பாவே சினிமாவுக்கு வருவேன். சின்ன வயசுல இருந்தே படம் தயாரிக்கணும்னு ஆசை. நான் படம் தயாரிச்சா கம்பெனி ஹீரோ ரமேஷ் திலக் தான். வெளிச்சத்துக்கு வரமுடியாமல் இருக்கும் திறமையானவர்களை என் படத்தின் முலம் வெளிக்கொண்டுவரணும், அதான் என் கனவே.” 

உங்க இருவருக்குமான முதல் சந்திப்பு எப்போ நடந்தது?

 “வேலைக்கு சேர்ந்த முதல் நாள், சூரியன் எஃப்.எம்மில்... எனக்கு முதலில் அவரைத் தெரியாது. ஆனா என்னை அவருக்கு நல்லாவே தெரியும். ‘ஓய்’னு சத்தமா கூப்பிட்டார். யார்னு திரும்பி பார்த்தா... ‘நீ தானே நவலட்சுமி’னு கேட்டார். அதான் அவருடன் எனக்கான முதல் சந்திப்பு. என் அண்ணன், அப்பானு எல்லோர் பத்தியும் சொல்ல ஆரம்பிச்சிட்டார்.  எங்க அப்பாவோட நிறைய பேட்டிகள் அவர் படிச்சிருக்கார். என்னை விட, அவருக்கு தான் என் அப்பா பற்றி நிறைய தெரியும். அது என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சி. நான் மதிக்கற என் அப்பாவை, மரியாதையா பார்க்கற ரமேஷை நானும் மரியாதையா பார்க்க ஆரம்பிச்சேன். என் மனசுல இருந்து, இந்த விஷயங்களை இப்போ தான் பேசுறேன். அதுவும் விகடனுக்காக பேசுறேன்னு நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு நாளும் இந்த காதல் தானே நம்மை இயக்குது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, மெச்சூர்ட் நேரத்தில் வரும் இந்தக் காதல் தான் ரொம்ப உண்மையாகவும் ஆழகாகவும் இருக்கும். அது தான் எங்களுக்குள்ள நடந்திருக்குனு நினைக்கிறேன்” 

-பி.எஸ்.முத்து