Published:Updated:

‘வெற்றிமாறனைக் கட்டித்தழுவி அழுதேன்!’ - ‘லாக்கப்’ நாவலாசிரியர் சந்திரகுமார்

‘வெற்றிமாறனைக் கட்டித்தழுவி அழுதேன்!’ - ‘லாக்கப்’ நாவலாசிரியர் சந்திரகுமார்
‘வெற்றிமாறனைக் கட்டித்தழுவி அழுதேன்!’ - ‘லாக்கப்’ நாவலாசிரியர் சந்திரகுமார்

‘வெற்றிமாறனைக் கட்டித்தழுவி அழுதேன்!’ - ‘லாக்கப்’ நாவலாசிரியர் சந்திரகுமார்

னித உரிமை மீறல்களும், சாதியக் கொள்கைகளும் அன்று தொட்டு இன்று வரை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், மனித உரிமைக்காக பல வகையில் போராட்டங்கள் மூலமும், புத்தகங்கள் மூலமும் பொது வெளிக்கு எடுத்து வந்து தகர்த்தெறிந்து வருகிறார் எழுத்தாளர் சந்திரகுமார். விசாரணை படம் மூலம் அங்கீகாரம் கிடைத்து, இவரது போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து கொண்டே இருக்கிறது. 2016ஆம் ஆண்டின் கவனிக்கத்தக்க படைப்பான விசாரணையின் மூலமான 'லாக்கப்' நாவலைப் படைத்த ஆட்டோ சந்திரனுடன் சிறு கலந்துரையாடல்.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நீங்கள் என்னென்ன தளங்களில் செயல்பட்டு வருகிறீர்கள்?

உழைப்புக்கான ஊதியத்தைக் கேட்டு போராடுவதே அடிப்படையான தேவை. உழைப்பாளர்களின் ஊதியத்தை சந்தை அல்லது மக்கள் நலச் சங்கமே தீர்மானிக்கும். அப்படி தீர்மானிப்பதில் சமநிலை இல்லாத பட்சத்தில் அதைக் கோரிக்கையாய் வைத்துப் போராடுவதே அடிப்படைத் தளம். சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, சமமான வாய்ப்புகள் குறைவு, நிலமற்ற, மூலதனமற்ற எளிய மக்களின் வாழ்வாதரங்களைச் சுரண்டுவது ஆகிய செயல்களை எதிர்த்தும் போராடி வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இதற்காகத்தான் செலவழித்து வருகிறேன்.

லாக்கப் கதையை,  புத்தகம் படித்த பிறகும், அதையே ‘விசாரணை’ என்ற படமாய்ப் பார்த்துவிட்டும் உங்களைச் சந்தித்த வாசகர்கள் / ரசிகர்களால் நீங்கள் நெகிழந்த தருணம்?

புத்தகம் படித்தே கண்ணீர் விட்டதாய் பலர் சொன்னதுண்டு. அது படமாய் வரும்போது இன்னும் அசாதாரண அனுபவத்தைத் தருகிறது. இந்த ஆண்டில் அதிக ஆண்களால் கட்டிப்பிடிக்கபட்ட, முத்தமிடப்பட்ட ஆண் நானாகத் தான் இருக்க வேண்டும். கதை சொல்லிருக்கும் நேர்த்தியை அவர்களால் உணர முடிந்தது. நெகிழ்வான தருணம் என்றால் வெனிஸ் திரைப்பட விழாதான். எட்டு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தனர். 'இந்தத் தவறுகளையெல்லாம் தட்டிக் கேட்காமல் இருந்துவிட்டோம். எங்களை மன்னியுங்கள்' என்று பொதுமக்கள் மன்னிப்பு கேட்டார்கள். எனக்கு அவர்கள் ஆறுதல் சொல்வதை விட்டுவிட்டு நான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் விசாரணை படம் இடம்பெறாதது பற்றி உங்கள் கருத்து?

ரொம்ப எதிர்பார்த்தோம். 21ம் நூற்றாண்டில் மனிதனின் வளம் குறித்த பார்வை அதிகரித்திருக்கிறது. அதனால் மனித உரிமைப் பிரச்சனைகளை முக்கியமாக எடுத்துச் சென்ற எங்கள் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கும் என்று நினைத்தோம்.119 படங்கள் வரை விசாரணை பட்டியலில் இருந்தது. இதுபற்றி வெற்றிமாறனிடம் பேசியபோது,"சந்திரன் விருது பெறுவதென்பது நமக்கு விருப்பமாக இருக்கலாம். அதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது கிடைக்குமென்று உத்திரவாதம் கிடையாது. எதிர்பார்ப்பு வேறு, நடுவர்களின் மனநிலை வேறு. ஆஸ்கர் விருதிற்குள் நுழைய எத்தனை வேலை செய்ய வேண்டும் என்பதை இப்படம் கற்றுத் தந்தது. அந்த வகையில் இது ஒரு சிறந்த அனுபவம்" என்றார். இந்தப் பதிலில் எனக்குப் பரிபூரண திருப்தி இருந்தது. ஏற்றுக்கொள்வோம். ஒரு நல்ல பாடத்தையே இது கற்றுத் தந்துள்ளது.

விசாரணை மாதிரி தமிழில் குறிப்பிடத்தக்க படங்கள் வருகிறது. ஆனால் விசாரணை அளவிற்கு மற்ற படங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதைப் பற்றி உங்கள் கருத்து..?

தமிழில் மிகை எதார்த்த படங்கள் அதிகம் வருகிறது. பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் நூற்றுக் கணக்கான நபர்கள் கொல்லப்படுவதாக காட்சி வைக்கப்படுகிறது. மக்கள் அதை பார்த்து பழக்கப்பட்டு விட்டார்கள். எல்லாமே கொண்டாட்ட மன நிலையில் படம் பார்க்க வருகிறார்கள். அதைத்தான் திரையில் எதிர்பார்கிறார்கள். பெரும்பாலான படங்களில் காவல் துறையினர் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள். இப்படி எதார்த்தத்திற்கு மாறாக காட்சிகள் இடம் பெறுகின்றன. இந்நிலையில், யதார்த்தமான நிகழ்வுகளைப் படமாக்கும்போது, ரசிகர்கள் அதைப் புரிந்து ஏற்றுக் கொள்வது குறைவாய் இருக்கிறது. ஆனால், எந்த நிலையிலும் சரியான கருத்தை, நேர்த்தியாகச் சொன்னால் ரசிகன் ஏற்றுக் கொள்வான் என்பதற்கு உதாரணமாய் விசாரணை உள்ளது. இது தொடரும் என எதிர்பார்ப்போம்!

லாக்கப் நாவலை எந்த அளவிற்கு விசாரணை படம் உள்வாங்கியிருப்பதாய் நினைக்கிறீர்கள்?

படம் முடிந்தவுடன் வெற்றிமாறனை நான் கட்டித்தழுவி அழுதேன். லாக்கப் கதையை முடிந்த அளவுக்கு செழுமைப்படுத்தி, பல கோடி பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது விசாரணை. உண்மையின் வழி நின்ற ஒருவனின் ஆன்மாவை அழுத்தமான காட்சிகளால் 30 நிமிடத்தில் மிகத் துல்லியமாக வைத்திருந்தார் இயக்குனர். உடல் சிதைந்தாலும் ஆன்மா சிதையாமல் பாதுகாப்பது மூலம்தான் உரிமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியும். என் கதை எந்த இடத்திலும் சிதையாமல் வந்ததற்கு வெற்றிமாறனைப் பாராட்டத்தான் வேண்டும்.

புதிதாக எழுத வரும் இளைஞர்களுக்கு தங்களின் அறிவுரை?

ஒரு சில விஷயங்களைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதலாவதாய் மொழி அறிவு, பிறகு தீவிரமான அரசியல், மற்றும் வாழ்க்கை ஆகியன பற்றி தெளிவான பார்வை வேண்டும். அரசியல் பார்வை இல்லாத படைப்புகள் வெற்றி பெறாது. இவற்றைக் கலந்து உன்னதமாய் எழுதுபவனே சிறந்த எழுத்தாளனாய் வர முடியும்..!

- செ. சங்கீதா, மாணவப் பத்திரிகையாளர்

படங்கள்: க. மணிவண்ணன், மாணவப் பத்திரிகையாளர்

அடுத்த கட்டுரைக்கு