Published:Updated:

ஆனந்த விகடன் விருதுகள் 2015

ஆனந்த விகடன் விருதுகள் 2015
ஆனந்த விகடன் விருதுகள் 2015

சிறந்த படம் 

காக்கா முட்டை

உச்சா போய்விட்டு அதை நாசூக்காக மறைக்கிற சின்ன காக்கா முட்டையின் பிரமாதமான சேட்டையோடு தொடங்கும்போதே, `இது வேற படம் பாஸ்' என நிமிர்ந்து உட்காரவைத்த `காக்கா முட்டை', தமிழ் சினிமாவின் தங்க முட்டை. அழகான, அற்புதமான, அர்த்தமுள்ள படைப்பு. ஒரு மாநகரம், இரண்டு அழுக்குப் பையன்கள், 300 ரூபாய் பீட்சா... என சின்னப் படம்தான். ஆனால், படம் பார்த்த ஒவ்வொருவருக் குள்ளும் உண்டாக்கிய மனமலர்ச்சி, ரொம்பப் பெரிது. ஒரு சிறிய படம், எளிய கலைஞர்களுடன், தமிழ் சினிமா இலக்கணத்தில் அடங்கும் எதுவுமே இல்லாமலும்கூட, அத்தனை நிறைவான ஒரு திரைப்படமாக மலர்ந்திருந்தது. அன்றாடம் நாம் கடக்கிற ஆயிரமாயிரம் சிறுவர்களின் இயல்பான ஆசைகளை, புன்னகையோடு ஆவணப்படுத்திய `காக்கா முட்டை' தமிழ் சினிமாவுக்கான ராஜபாட்டை!

சிறந்த இயக்குநர்

எம்.மணிகண்டன் 

`காக்கா முட்டை’

மூன்று காக்கா முட்டைகளை எடுக்கும் பெரியவன், ஒன்றை அவனுக்கும் ஒன்றை தம்பிக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவதை கூட்டிலேயே அம்மா காக்கைக்கு விட்டுவிடுவான். தாராளமாகச் சொல்லலாம்... தமிழ் சினிமாவின் கவித்துவக் காட்சிகளில் இது அரிதான தரிசனம். ஒரு கிராமத்து இளைஞன் தன் முதல் படத்திலேயே விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலைப் படமாக்க முடிவெடுத்ததும், அதை நிகழ்த்திக்காட்டியதும் மணிகண்டனின் தைரியத்துக்கு சாட்சி. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவ்வளவு அக்கறை. எங்குமே ஏழைகளின் சோகங்களை வியாபாரமாக்கும் தந்திரங்கள் இல்லை. பாலித்தீன் பையில் தண்ணீர் பிடித்துவந்து பாத்திரங்களில் நிரப்புகிற சின்ன காக்கா முட்டையைப் போலவேதான் மணிகண்டனும். தனக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பின் மூலம், நம் மனதில் அவர் நிரப்பியது நெகிழ்ச்சிக் கடல்!

சிறந்த நடிகர்

ஜெயம் ரவி 

`பூலோகம்’

ஜெயம் ரவிக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். சாஃப்ட் வாய்ஸ் சாக்லேட் ஹீரோ இமேஜை உடைத்து, ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தார்.  உடம்பை முறுக்கேற்றி, முரட்டு பாக்ஸர் பூலோகமாக புத்திமதி சொல்லி நாக்அவுட் செய்தது மரண மாஸ். `தனி ஒருவன்' முழுக்க கோபக்கார இளைஞனாகப் புருவம் சுருக்கி மிரட்டியெடுத்து 100 டிகிரியில் கொதித்தார்.  `ரோமியோ ஜூலியட்'டில் `தூவானம் தூவத் தூவ...' மயங்கி மயங்கிப் பண்ணிய ரொமான்ஸுக்கு பெண்கள் பக்கம் புயலடித்தது. கதைத் தேர்வில் கவனம் காட்டுகிற அதே நேரம், தன் உடல்மொழியில் ரவி காட்டும் அக்கறை, அபாரம். 2015-ம் ஆண்டில்  தான் நடித்த நான்கில் மூன்று படங்களை ஹிட் லிஸ்ட்டில் ஏற்றிய ஜெயம் ரவிக்கு இது சக்சஸ் ஆண்டு. `அண்ணன் மேல் சவாரி செய்கிறார்' என்ற இமேஜையும் தள்ளி, தனி ஒருவனாக தலை நிமிர்ந்திருக்கும் ஜெயம் ரவிக்கு தம்ஸ்அப்!

சிறந்த நடிகை 

நயன்தாரா 

`நானும் ரௌடிதான்’

`நானும் ரௌடிதான்' காதும்மாவைக் காதலிக்காத ஆளே இங்கு இல்லை. `தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே...' என விஜய் சேதுபதியோடு சேர்ந்து ரசிகர்களும் நயனைத் தேடினார்கள். `எனக்கு காது கேக்காது. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்' என்ற நயன்தாராவின் உதட்டுச் சுழிப்புக்கு ஏழு கோடி லைக்ஸ். தந்தை இறந்ததை ராதிகா சொல்லிவிட, காவல் நிலையத்தில் இருந்து இறங்கி, தடதடவென அழுதுகொண்டே நடக்கிற அந்த ஒற்றை ஷாட்டில் கொடுத்தது ஓராயிரம் எக்ஸ்பிரஷன்ஸ். காதும்மா... தமிழன் லவ்ஸ் யூ பேபி!

 சிறந்த வில்லன்

அர்விந்த் சுவாமி

 `தனி ஒருவன்’

அழகன்... அபாரன்... இனியன்... இப்போ மிரட்டல் வில்லன். இருட்டிலேயே வாழ்ந்த ஆண்ட்ராய்டு காலத்து அதிசயன். டெக்கி கொடூரன். தொழிலதிபன், கொலையும் செய்யும் குரூர மனம்கொண்டவன் என்ற வித்தியாச காக்டெயிலுக்கு அர்விந்த் சுவாமி அபார செலக்‌ஷன். கடைசி வரை முகம் சுளிக்காமல் மர்டர்கள் செய்யும் ஜென்டில்மேன் வில்லனாக, பிரமாத ஸ்மைலில் விஷம் கக்கியது விர்ச்சுவல் வில்லத்தனம். கோட்-சூட்டோடு கச்சிதமான உடற்கட்டில் ஜீனியஸ் சித்தார்த் அபிமன்யூ கொடுத்த ஒவ்வோர் அசைவும் வாவ்... வாவ்! இது அர்விந்த் சுவாமி 2.0!

 சிறந்த வில்லி 

ஆஷா சரத் 

`பாபநாசம்’

`பாபநாசம்’ வேட்டைக்காரி. இப்படி ஒரு முரட்டுப் பெண்ணை தமிழ் சினிமா கண்டது இல்லை. கண்பார்வையில், உடல்மொழியில் ஆஷா சரத்தின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் ஆல் ஷோஸ் அப்ளாஸ் கேட்டன. `ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரத்தனமா எல்லாத்தையும் இணைச்சு கதை ரெடி பண்ணியிருக்காங்க' என்ற அவருடைய ஆண்மை கலந்த மலையாளத் தமிழ் மாடுலேஷனுக்கு எக்கச்சக்க ஃபேன்ஸ். நிமிர்ந்து நின்று, புருவம் குவித்து, கூர்மையாக முறைத்துப் பார்க்கும் முகத்தில் அத்தனை ஆணவம். கருணை இல்லாத காவல் துறை அதிகாரியாகவும் தன் மகனை இழந்த பரிதாபத் தாயாகவும், இரட்டை முகங்கள் காட்டி மிரளவைத்தார் இந்த அழகு சேச்சி!

சிறந்த குணச்சித்திர நடிகர்

சத்யராஜ் 

`பாகுபலி’

`பாகுபலி’யின் சிங்க கர்ஜனை கட்டப்பாவுடையது. எம்.ஜி.ஆர் ரசிகனுக்கு கிடைத்த பிரமாண்ட கதாபாத்திரம். கிடைத்த கேப்பில் எல்லாம் செம ஸ்கோர் செய்த சிம்பிள் ஸ்கிரீன் ப்ரசென்ஸ். சிவாஜிக்குப் பிறகு தன் குரலாலும் உடலாலும் மிரளவைக்கிறார் சத்யராஜ். பல்வாள் தேவனுக்கு அடங்கிப் போகும் அடிமை, அஸ்லம் கானை தன் வாள் வீச்சால் மிரளவைக்கும் வீரன், பாகுபலி உருவத்தில் இன்னொருவனைக் கண்டதும் மிரண்டு வணங்கும் விசுவாசி... என சத்யராஜ் செய்தது தன் வாழ்நாளுக்குமான பாத்திரம்... வெளிப்படுத்திய நடிப்பில் அத்தனை காத்திரம்!

சிறந்த குணச்சித்திர நடிகை 

ரம்யாகிருஷ்ணன் 

`பாகுபலி’

மரகதவள்ளி அலைஸ் மேகியின் இன்னொரு விஸ்வரூபம் `பாகுபலி’யின் `சிவகாமி'. கையில் வாளுடன் ஒட்டுமொத்த அரசவையையும் தன் ஒற்றைக்குரலால் அடக்கும் துணிவு, ஆளுமையின் கம்பீரம். இரண்டு மார்புகளிலும் இரண்டு குழந்தைகளுக்கு பால்கொடுக்கும் தாய்மை, கருணையின் கம்பீரம். `வயசானாலும் ஸ்டைலும் அழகும் மாறவே இல்லை' என தைரியமாக ஸ்டேட்டஸ் போடலாம். ரம்யாகிருஷ்ணனின் ஒவ்வோர் அசைவிலும்... அவ்வளவு மிடுக்கு, அவ்வளவு நேர்த்தி!

அடுத்த கட்டுரைக்கு