Published:Updated:

தமிழ் சினிமாவில் 'கார்த்திக்' என்ற பெயர் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? #Karthik

Vikatan Correspondent
தமிழ் சினிமாவில் 'கார்த்திக்' என்ற பெயர் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? #Karthik
தமிழ் சினிமாவில் 'கார்த்திக்' என்ற பெயர் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? #Karthik

தமிழ்சினிமா சரித்திரத்தைக் கொஞ்சம் திருப்பிப்பார்த்தால் 'கார்த்திக்' எனும் பெயரில் நிறைய ஹீரோ கதாபாத்திரங்களை பார்க்கலாம். அதிலும் காதல் ரசம் சொட்டும் ரொமாண்டிக் படங்களில் பெரும்பாலும் ஹீரோவின் பெயர் இதுவாகத் தான் இருக்கும். அவற்றையெல்லாம் பார்க்கும்போது ''கார்த்திக்'ன்ற பெயர் மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்?' என உங்கள் மனதில் உதிக்கும் அதே கேள்வி எங்கள் மனதிலேயும் உதித்தது. இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க டைம் மிஷினில் போய் அலசி ஆராய்ந்தோம்.  

சில ஸ்பெஷல் கார்த்திக்-களைப் பார்ப்போம்!

'ஊர்ல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும், நான் ஏன் ஜெஸ்ஸி உன்ன லவ் பண்ணேன்' என ஜெஸ்ஸியை உருகி உருகி காதலித்த  'விண்ணைத் தாண்டி வருவாயா' கார்த்திக்.

'பூ முதல் பெண் வரை எனக்குத்தான் வேணும் பெஸ்ட்' என தனக்கான பெஸ்ட் காதலியை தேர்ந்தெடுக்க மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய 'தீராத விளையாட்டு பிள்ளை' கார்த்திக்.

தான் ஒரு ஜிம் ட்ரெய்னர் என தெரிந்ததும் ப்ரேக் - அப் செய்து விட்டு போன காதலிக்கிட்ட, ’எனக்கு இன்னொரு பொண்ண கல்யாணம் செஞ்சு வச்சுட்டு போ ,ஏன்னா நான்தான் உனக்கு வேணாம்ல' என டார்ச்சர் கொடுத்தே, காதலின் அர்த்தம் புரிய வைத்த 'ரோமியோ ஜூலியட்' கார்த்திக்.

இசையைக் காதுகளால் கேட்க முடியாத தன் காதலிக்கு மனதால் உணரவைத்த 'மொழி' கார்த்திக்.

'அவளை நினைக்குறப்பலாம் எனக்குள்ள இளையராஜா பி.ஜி.எம் கேட்குது' என தன் காதலியை காதலிப்பதையே முழுநேராக வேலையாக செய்த 'சர்வம்' கார்த்திக்.

தன் நண்பனுக்காகவும், தனது அணிக்காகவும் தனது காதலையே தியாகம் செய்ய துணிந்த 'சென்னை-28' கார்த்திக்.

தனது உயிருக்கு உயிரான மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் 'நேபாளி' கார்த்திக்.

'நான் பிச்சைக்காரனாவே இருந்துட்டு போறேன். ஆனால், பிச்சைக்கார போட்டோகிராஃபரா இருக்கேன்' என தான் செய்யும் வேலை அவ்வளவு ரசித்த 'மயக்கம் என்ன' ஜீனியஸ் கார்த்திக் என வெறும் ரொமாண்டிக் ஹீரோவாக மட்டுமல்லாமல் நம் மனதில் இடம் பிடித்த வேறு சில கார்த்திக்குகளும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.

எதனால் இந்தப் பெயரை அதிகம் வைக்கிறார்கள்? 

இது, தமிழ்க்கடவுள் முருகனின் பெயர். அதனாலேயே, நம் ஊர் ஹீரோ கதாபாத்திரங்களுக்கு பெரும்பாலும் இந்த பெயரையே சூட்டுகிறார்கள் என தோன்றுகிறது. இதேபோல், முருகனின் வேறு பெயர்களான செந்தில், சரவணன், வேல், குமரன் ஆகிய பெயர்களையும் தமிழ் சினிமாக்களில் அதிகம் காணலாம். நாம் படித்த பள்ளி, கல்லூரி, பணிபுரியும் அலுவலகங்களில், நண்பர்கள், உறவினர்கள் மத்தியிலும் கார்த்திக் எனும் பெயர் கொண்டவர்கள் கண்டிப்பாக ஒருவராவது இருப்பார்கள். பல நேரங்களில் ஒரே வகுப்பறையில் / அலுவலகங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்த்திக்-குகள் கூட இருப்பர். இப்படி, இந்தப் பெயரானது பிரபலமானதாகவும் பரிச்சயமானதாகவும் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். முருகன் போர்க்கடவுளாக கருதப்பட்டாலும், ஆக்‌ஷன் ஹீரோ கதாபாத்திரங்களை விட ரொமாண்டிக் ஹீரோ கதாபாத்திரங்களுக்கே 'கார்த்திக்' எனும் பெயர் அதிகம் வைக்கப்படுகிறது.  ஹீரோ கதாபாத்திரத்தை எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் நெருக்கமாக்கச் செய்யவே 'பக்கத்து வீட்டு பையன்' இமேஜ் தரும் இந்தப் பெயரை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என கொள்ளலாம்.  

- கோ.கீதாப்பிரியா
மாணவப் பத்திரிகையாளர்