Published:Updated:

“என் அண்ணன்களைப் போல் நானும் இயக்குநராவேன்..!” - நாகேந்திர பிரசாத்

Vikatan Correspondent
“என் அண்ணன்களைப் போல் நானும் இயக்குநராவேன்..!” - நாகேந்திர பிரசாத்
“என் அண்ணன்களைப் போல் நானும் இயக்குநராவேன்..!” - நாகேந்திர பிரசாத்

‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்மா ஹம்மா’ பாடலின் மூலம் டான்ஸராகவும், ‘123’ படத்தில் நடிகராகவும் தமிழ் சினிமாவில் இரண்டு முறை என்ட்ரி கொடுத்தவர் நாகேந்திர பிரசாத். ராஜூ சுந்தரம், பிரபு தேவா இவர்களின் தம்பியான நாகேந்திர பிரசாத் MSM டான்ஸ் ஸ்கூல் என்னும் ஒரு நடன பள்ளியை நடத்தி வருகிறார். இவர், தற்போது ஐந்து மாநிலங்களில் இருக்கும் டான்ஸர்களுக்காக  'MJ'S  ஹேட் பேட்டில்' என்கிற ஒரு நடன யுத்தத்தை நடத்தவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் குடியரசு தினத்தன்று வெளிவரயிருக்கும் ‘போகன்’ திரைப்படத்தில் தன்னுடைய ரீ-என்ட்ரியை கொடுக்கவிருக்கும் சந்தோஷத்தில் இருந்தவரை சந்தித்தேன்.
 ​​​​​​​

'MJ'S  ஹேட் பேட்டில்'  பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
“இது எப்படி தொடங்குச்சுனா, பிரபு அண்ணனுக்காகவே மைக்கேல் ஜாக்சன் ஒரு ஹேட்டை(தொப்பியை) பரிசா கொடுத்தார். நான் டான்ஸ் கிளாஸ் நடத்துறனால, அண்ணா அந்த ஹேட்டை எனக்கு கொடுத்தாங்க. அதை வச்சு தான் ஹேட் பேட்டில்ன்னு ஒரு போட்டி நடத்தலாம்னு தோணுச்சு. அது மட்டுமல்லாம நம்ம இந்தியாவுல பல டான்ஸர்ஸ் திறமையோட இருக்காங்க. ஆனால் அவங்களுக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்கறதில்ல. அதனால அவங்களை ஊக்குவிக்கிறதுக்கும் அவர்களுடைய உண்மையான திறமையை வெளிக்கொண்டு வர்றதுக்கும் இந்த போட்டியை நடத்துறோம். பாம்பே, ஹைதராபாத், பெங்களூர், கொச்சின், சென்னையில இதோட முதல் கட்ட போட்டி நடைபெறும். அதன் பின்பு செமி பைனல்ஸ் மற்றும் பைனல்ஸ் சென்னையில நடைபெறும். முக்கியமா பைனல்ஸ், பிரபுதேவா அண்ணன் முன்னாடி நடக்கும்ங்றது தான் இதோட கூடுதல் சிறப்பு.”

இதுல வெற்றி பெறுபவர்களுக்கு சினிமாவுல வாய்ப்பு தருவீங்களா?
“இந்த போட்டியை பல பிரிவுகளில் நடத்துறோம். B-Boy ஸ்டைல், Free ஸ்டைல், தனி நபர் போட்டின்னு பல விதமா நடத்தி பரிசு கொடுக்க போறோம். மொத்தம் 11 லட்சம் பரிசு தொகை கொடுக்குறோம். இளம் டான்ஸர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா அமையும். அது மட்டுமல்லாம முதல் பரிசு வாங்குறவங்க 'MJ'S ஹேட்டோட ஒரு புகைப்படம் எடுத்து கொள்ளலாம். பல சினிமா பிரபலங்களும் இந்த போட்டியை பார்க்க வரதுனால, அவங்களுக்கு பிடிச்சிருந்தா போட்டியாளர்களை அவங்க படத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பிருக்கு.”

‘போகன்’ படத்துல ஒரு கதாப்பாத்திரம் பண்ணியிருக்கீங்க... நடிப்பை தொடருவீங்களா?
“கண்டிப்பா... எனக்கு நடிப்புனா ரொம்ப பிடிக்கும். நல்ல கதாப்பாத்திரத்தோட ஒரு கதை வந்தா கண்டிப்பா நடிப்பேன். சினிமாவை தவிர வேற என்னங்க நமக்கு தெரியும்...”

உங்களுடைய இரண்டு அண்ணனும் நடனத்திலிருந்து இயக்குநராக அவதாரம் எடுத்துவிட்டார்கள். உங்களுக்கும் படம் இயக்குற ஆசை இருக்குதா?
“ஆமா. எனக்கும் இயக்குநராக வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்காக தான் வெளிநாடு சென்று இரண்டு வருடம் பயிற்சி எடுத்து கொண்டேன். அதன் பின் இங்கு வந்து ‘வெடி’ படத்திலும் ‘ரௌடி ரதோர்’ படத்திலும் இணை இயக்குநராக வேலை செய்திருக்கேன். சரியான கதை அமைஞ்சா கண்டிப்பா இயக்குநரா என்னுடைய அடுத்த அவதாரம் இருக்கும்.”

உங்களோட அண்ணன்கள் இதை பண்ணு, இதை பண்ணாதனு அட்வைஸ் பண்ணுவாங்களா?
“நீ இதை தான் பண்ணணும்னு அவங்க என்கிட்ட சொன்னது இல்லை. ஆனா நான் என்ன பண்ணாலும் அதற்காக என்னை பாராட்டு வாங்க. இப்போகூட நான் டான்ஸ் ஸ்கூல் வச்சு நடத்துறதுக்காக பாராட்டுவாங்க.”

‘123’ படத்துல நீங்க மூணு பேரும் ஒண்ணா நடிச்சிருப்பீங்க, அதே போல் மறுபடியும் நீங்க இணைந்து நடிப்பீங்களா..?
“கண்டிப்பா நடிப்போம். மூணு பேரும் ஒன்று சேர்ந்து படம் பண்ற சமயம் அமையும் போது நாங்க அதை கண்டிப்பா பண்ணுவோம். எல்லோருமே அவங்க வேலைகள்ல இருக்கறனால எப்போ அதற்கான சூழ்நிலை அமையுதோ அப்போ நாங்க ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம்.”

-அ.அருணசுபா
(மாணவ பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக்காரர்)