'இளம் இயக்குநர்களுக்கு நிறைய கடமை உள்ளது!' - பாரதிராஜா

பாரதிராஜா

சினிமா பிரியர்களுக்கு விருந்து வைக்கும் 14வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நேற்று துவங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் துவங்கும் இந்த விழா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், 'வர்தா' புயல் காரணமாக ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டது. சத்யம் திரையரங்கில் நடந்த துவக்க விழாவில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, இயக்குநர்கள் சார்பில் பாரதிராஜா, பாக்யராஜ், மனோபாலா மற்றும் நடிகைகள் ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். 

பாரதிராஜா பேசுகையில், "இப்போதெல்லாம் பொது இடங்களில் பேசுவதை குறைத்துக் கொண்டு வருகிறேன். முன்பு எல்லாம் இப்போது போல, திரைப்பட விழாவுக்கு சென்று சினிமா பார்க்க முடியாது. ஆனால் அந்த சினிமா ஆசை விடவே இல்லை. கிராமத்துல பிறந்து வளர்ந்த நான், சினிமாவை சொர்க்க பூமியாக நினைத்து மாயமானைப் போல இந்த துறைக்கு வந்தேன். இங்கே வந்து பார்த்தால் சினிமா சொர்க்க பூமி இல்லை. அது மக்களின் உரிமைகளைப் பற்றி, அவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய ஒரு வலிமையான ஊடகம் என்பது புரிந்தது. தற்போதைய சூழலில், நேற்று வெளியான படங்களைக் கூட உடனே பார்த்து விட முடிகிறது. தொழில்நுட்பம் எல்லா தளங்களிலுமே வளர்ந்து இருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, மக்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தக் கூடிய திரைப்படங்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். அது உங்கள் கடமை. சினிமாவின் கலாசார பரிவர்த்தனை மூலம் உலகமே சுருங்கி விட்டது. சென்னையில் 14 ஆண்டுகள் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது பெரிய விஷயம்" என்றார்.

பாரதிராஜா பாரதிராஜா

மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில், 50 நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. கேசினோ, பலாஸோ, ஐனாக்ஸ், ஆர்கேவி ஸ்டூடியோ, ரஷ்யன் கலாசார மையம் என 5 இடங்களில், காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை  திரைப்படங்கள் திரையிடப்படும். கல்லூரி மாணவர்களுக்கு 500 ரூபாயும், மற்றவர்களுக்கு 800 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளை விழாவை ஒருங்கிணைக்கிறது.

இந்த முறை தமிழ்சினிமா வரிசையில் அம்மா கணக்கு, 24, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரவுடி தான், பசங்க - 2, ரூபாய், சில சமயங்களில், உறியடி முதலான படங்கள் போட்டியில் உள்ளன. பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி திரைப்படமும், ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை படமும் திரையிடல் பட்டியலில் உள்ளது. மேலும் இறுதிச்சுற்று, மெட்ரோ ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செய்யும் வகையில் ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண்  ஆகிய இரு படங்கள் திரையிடப்பட உள்ளன.

சினிமா காதலர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!! 

சென்னை சர்வதேசத் திரைப்பட தொடக்க விழா ஆல்பம் இங்கே

 

- க. பாலாஜி 

படங்கள் : ப. பிரியங்கா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!