Published:Updated:

விகடன் விருதுகள்

விகடன் விருதுகள்
விகடன் விருதுகள்

சிறந்த படத்தொகுப்பு 

கிஷோர் - `காக்கா முட்டை’

கொஞ்சம் பிசகினாலும் உடைந்து விடக்கூடிய இத்தனை மெல்லியக் காட்சிகளையும், துல்லியமாக வெட்டி ஒட்டி ஓட்டியது கிஷோரின் திறமை. சேரிகளின் இண்டு இடுக்கிலும், சந்துபொந்துகளிலும் திரிந்த கேமராவை, இழுத்துக் கோத்து மாலை ஆக்கிய எக்ஸலென்ட் எடிட்டிங். விறுவிறு வேகக் காட்சிகள் கிடையாது. தாவிப் பறந்து, தவழ்ந்து மறையும் கோணங்கள் கிடையாது. ஆக்‌ஷன் அதிரடியோ ரொமான்டிக் தெறிப்புகளோ எதுவுமே இல்லாமல் ஏழை மக்களின் எளிமையான வாழ்க்கைச் சித்திரத்தை அதன் கவித்துவத்துடன் பரிமாறிய படையலில் அத்தனை ருசி. உன்னதமான சினிமாவில் எங்குமே பிசிறடிக்காத அந்த எடிட்டிங்கில் இருந்தது அத்தனை ஜீவன். மிஸ் யூ கிஷோர்!

சிறந்த கதை

மணிகண்டன்.எம் 

`காக்கா முட்டை’

சென்னை நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களை, சென்னைக்காக உழைக்கும் மண்ணின் மைந்தர்களை அக்கறையுடன் அணுகிய படம் `காக்கா முட்டை'. நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி வலிக்கவைத்த படைப்பு. ஒரு நல்ல கதை, ஒரு நல்ல சினிமாவை தானே உருவாக்கிக்கொள்ளும் என்பதற்கு இன்னொரு சான்று. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சினிமா அழுத்தமாகப் பதிவுசெய்வது அவசியம். அந்த வகையில்  `காக்கா முட்டை'யும் சினிமா வரலாற்றின் இன்னொரு சிகரம். எளிய மக்களின் வாழ்வியலை பொறுப்புடன் கதையாக்கிய மணிகண்டனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!

சிறந்த திரைக்கதை 

ஜீத்து ஜோசப் - `பாபநாசம்’

சினிமா பார்த்து வாழக் கற்றுக்கொண்ட ஒருவன், அதே சினிமாவைப் பயன்படுத்தி தன் குடும்பத்தை கொலைவழக்கில் இருந்து காப்பாற்றும் வித்தைதான் `பாபநாசம்’. சட்டத்துக்கு எதிரானது என்றாலும் அறத்துக்குப் புறம்பானது அல்ல என்பதை நம்பவைக்கும் மேஜிக் திரைக்கதை படத்தின் ப்ளஸ். மலையாளத்தில் ஹிட்டடித்த கதையை நேட்டிவிட்டி மாற்றங்களோடு தந்தது ஜீத்துவின் ஸ்பெஷல். கதை போகும் போக்கில் சில கண்ணிகளைப் புதைப்பது, அதன் மேல் ஹீரோவின் குடும்பம் கால் வைப்பது, அது வெடிக்காமல் ஹீரோவைக் காப்பது என திரைக்கதை காட்டியது எதிர்புதிர் அதிர்வுகள். ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பான சுவாரஸ்யத்தை அள்ளி வழங்கியது அபாரமான திரைக்கதை உத்தி!

சிறந்த வசனம் 

ஆனந்த் அண்ணாமலை,

ஆனந்த் குமரேசன்  `காக்கா முட்டை’

இயல்பான, எளிமையான வசனங்களால் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தி கவனம் ஈர்த்தார்கள் ஆனந்த் அண்ணா மலையும் ஆனந்த் குமரேசனும். ‘சத்தியமா நம்மள உள்ளே விட மாட்டாங்கடா' என, சின்ன காக்கா முட்டை  சிட்டி சென்டர் வாசலில் நின்று சொன்னபோது கலகலப்பானது அரங்கம். `எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தல்ல' என்ற யோகிபாபு பன்ச், வைரல் மீம் மெட்டீரியல் ஆனது. `இல்லாதவங்க இருக்கிற இடத்துல கடைபோட்டு ஏன் உசுப்பேத்தணும்?’ என சிறு வசனங்களில் பெருங்கதை சொல்லிய இருவருக்கும் லைக்ஸ்... லைக்ஸ்!