Published:Updated:

ஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! #RIPOmpuri

Vikatan Correspondent
ஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! #RIPOmpuri
ஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! #RIPOmpuri
ஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! #RIPOmpuri

முதுமை வந்தாலே மரணமும் கைகோர்த்துவிடுவது இயற்கை.  இந்திய சினிமாவிற்கு சொந்தமான கலைஞரும், நடிப்பில் உச்சம் தொட்டவருமான நடிகர் ஓம்பூரி இன்று மரணித்திருப்பது நிச்சயம் உணர்வுகளின் வலி. நேற்று வரை படப்பிடிப்பில் இருந்தவர், இன்று நம்முடன் இல்லை. சினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட ஓம்பூரியை மாரடைப்பு அமைதியாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தி திரையுலகில் ஜாம்பவனாக இருந்த இவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே கண்ணீரில் அஞ்சலியை சமர்ப்பித்துவருகிறது.

தமிழுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாவிட்டாலும் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய நடிகர்களில் ஒருவர். ஓம் பிரகாஷ் பூரி என்னும் கலைஞர் பாலிவுட், மராத்தி, இந்திய பிறமொழிகள், பிரிட்டன் மற்றும் ஹாலிவுட் படங்கள் வரையிலும் பரிச்சயமானவர். இந்திய திரையுலகில் வைரங்களாக மிளிரும் சிறந்த நடிகர்களில் மிகமுக்கியமானவர். கலை, பாரம்பரியம், கலாச்சாரம் சார்ந்த படங்களில் உச்ச  நடிப்பில் மிரளவைக்கும் வகையில் கலையின் மீது அர்பணிப்பு கொண்டவர். 

அக்டோபர் 18ல் 1950-ல் ஹரியானா மாநிலத்தில் அம்பாலா என்னும் இடத்தில் பிறந்தவர் ஓம் பிரகாஷ் பூரி. சாதனையாளர்களின் கடந்த காலங்கள் நிச்சயம் வலியால் நிறைந்திருக்கும் என்பதற்கு இவரும் ஒரு சான்று. வீட்டில் ஏழ்மை. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லாமல் உணவுகளை பரிமாறும் தாபாவில் வேலை செய்யவேண்டிய கட்டாயம். பெரும்பாலும் ரயில் பாதைகளில் கொட்டிக்கிடக்கும் நிலக்கரிகளை அள்ளிச்சென்று வீட்டில் கிடக்கும் ஏழ்மையை சரிபடுத்தியவர். தட்டுத்தடுமாறி பள்ளிப்படிப்பையும் முடித்து, ‘பிலிம் & டெலிவிஷன் இன்ஸ்டிடியூட்டில்’ பட்டப்படிப்பையும் முடித்தார்.

22வது வயதில் மராத்தி மொழியில் தன்னுடைய முதல்  படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். மராத்திய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் கதையை மையமாக வைத்து வெளியான Ghashiram Kotwal என்ற படம் தான் ஓம் பூரியின் முதல் சினிமா விலாசம்​​​​​​. 

ஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! #RIPOmpuri

ஒரு பக்கம் படங்களில் நடித்து வந்தாலும், இதற்கு நடுவே தேசிய நாடகப்பள்ளியில் சேர்ந்து நடிப்பை முழுமையாக கற்றுத்தேர்ந்தார். அந்த நேரத்தில் இவருக்கும் நஸ்ருதீன் ஷாவுக்குமான நட்பும் தொடங்கியது. நடிகர் அனு கபூரின் சகோதரியான சீமா கபூரை 1991ல் திருமணம் செய்துகொண்டார். அந்த இல்வாழ்க்கை எட்டு மாதங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. அதன்பிறகு 1993ல் நந்திதாவை திருமணம் செய்துகொண்டார். அவருடனும் 2013ல் விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. அவை எதுவும் சினிமாவை எந்த அளவிலும் பாதிக்கவில்லை.

இவர் நாயகனாக, குணச்சித்திர வேடங்கள் என்று தொட்ட இடமெல்லாம் நடிப்பில் வெற்றியை மட்டுமே பரிசாக பெற்றார். 1982ல் இவர் நடித்த ஆரோகன் (Arohan) படத்திற்காக, சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து அடுத்த வருடமும் Ardh Satya படத்திற்காக இரண்டாவது தேசிய விருதை சொந்தமாக்கினார்.  மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் என்று இவர் நடித்த படங்களில் லிஸ்ட் எகிறும்.

ஆக்ரோஷ் ( Aakrosh) ஆர்த்சத்யா ( Ardh Satya) தமஸ் (Tamas) அஸ்தா ( Aastha), மிர்ச் மசாலா ( Mirch Masala) உள்ளிட்ட படங்களில் இவரின் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக பெரிதும் பேசப்பட்டார். விமர்சனரீதியிலும் பெரும் பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி சாச்சி 420 (Chachi 420), ஹிரபெத்ரி ( Hera Pheri), மலமால் வீக்லி ( Malamaal Weekly) உள்ளிட்ட படங்களில் காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குணச்சித்த கதாபாத்திரமோ, காமெடியோ எந்த ரோலுக்கும் கச்சிதமாக பொருந்துவார். அதுமட்டுமின்றி வயதிற்கு ஏற்ற ரோல்களை தேர்ந்தெடுத்து நடிப்பது இவரின் ஸ்பெஷல். 

1982ல் வெளியான காந்தி பயோபிக் படத்தில் இவரின் கேமியோ, பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை இவரை பிரபலப்படுத்தியது. அதற்கடுத்து பல ஹாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் படங்களிலும் தோன்ற ஆரம்பித்தார்.சிட்டி ஆஃப் ஜாய் (1992), வுல்ஃப் (1994), தி கோஸ்ட் அண்ட் தி டார்க்னஸ் (1996) என்று இவர் நடித்த படங்கள் அனைத்துமே சக்ஸஸ் பார்முளா தான். 

ஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! #RIPOmpuri

நல்ல நடிகன் மட்டுமில்லாமல் மனதில் பட்டதைப் பேசி அவ்வப்பொழுது சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார். ஆனால் இவரின் கேள்விகளும் பதிலும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், மக்கள் சர்ச்சையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். எடுத்துக்காட்டாக, யூரி தாக்குதல் நேரத்தில் நடந்த டிவி விவாத நிகழ்ச்சியில், “வீரர்களை யார் ராணுவத்தில் சேரச் சொன்னது, ஆயுதங்களை அவர் கையில் யார் கொடுத்தது?” என்று கேட்க மக்களும் கொந்தளித்தனர். அதுபோல அன்னா ஹசாரே உண்ணாவர போராட்ட சமயத்தில், “அரசியல் தலைவர் என்ற ஒரே காரணத்திற்காக ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் சல்யூட் செய்வது வெட்கக்கேடு” என்று பொரிந்து தள்ளியவர். இதுபோல எந்தப் பிரச்னையென்றாலும் முதல் குரல் இவரிடமிருந்து நிச்சயம் ஒலிக்கும். 

தற்பொழுது இரண்டு கன்னடப்படங்கள், ஒரு பாகிஸ்தானி படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் இவரது மரணம் நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சி. 66 வயதிலேயே நம்மை விட்டு பிரிந்தாலும், நமக்கான நிறைய பொக்கிஷங்களையும் படிப்பினைகளையும் ஆரோக்கியமான நடிப்பினையும் விட்டுச்சென்றிருக்கிறார்.  “ஓம்பூரி மறையவில்லை... அவரது நடிப்பினால் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்” என்ற கமல்ஹாசனின் ட்விட்டர் வரிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

-முத்து பகவத்-