Election bannerElection banner
Published:Updated:

''உள்ளுர் சினிமாக்களும் உலக சினிமாக்கள்தான்!

''உள்ளுர் சினிமாக்களும் உலக சினிமாக்கள்தான்!

##~##

ப்போதும் இல்லாத அளவுக்கு தேசிய விருதுகளை வாங்கிக் குவித்து திருவிழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறது தமிழ்த் திரையுலகம். மக்கள் நேசிக்கும் சினிமாவுக்கு மகத்தான பங்களிப்புகளை வழங்கும் கலைஞர்களைப் பாராட்டுவதற்கு, விழாக்கோலம் பூண்டு இருந்தது திருவண்ணாமலை எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரி.

இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, 'ஆடுகளம்’ படத்தின் எடிட்டர் கிஷோர், 'திரைச்சீலை’ என்ற சினிமா குறித்த நூலுக்காக தேசிய விருது பெற்ற ஓவியர் ஜீவானந்தம், ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மற்றும் 'ஷ்யாம் ராத் ஷிகர்’ எனும் குறும்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்காக விருது வென்ற முரளி ஆகியோருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தது 'டயலாக்’ அமைப்பு. எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எஸ்.கே.பி கல்லூரியின் தாளாளர் கருணாநிதி இருவரின் கூட்டு முயற்சியால் உருவான அமைப்புதான் 'டயலாக்’.

''உள்ளுர் சினிமாக்களும் உலக சினிமாக்கள்தான்!

மாலை நேரம் இதமான மெல்லிய காற்று வீச... பச்சைப் புல்வெளிகள் நிறைந்த அழகான திறந்த வெளி அரங்கத்தில் ஆரம்பமானது  உரையாடல் நிகழ்ச்சி.

பவா.செல்லத்துரை வரவேற்புரை முடிந்ததும் மைக்கைப் பிடித்தார் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. ''வெற்றிமாறனோட முந்தைய படமான 'பொல்லாதவன்’ பார்த்தேன். படம் பிடிச்சிருந்தாலும், அதில் இருந்த வன்முறை எனக்குப் பிடிக்கலை. ஆனா, 'ஆடுகளம்’ படத்தின் உருவாக்கத்தில் ஒரு நேர்த்தி இருந்தது. சேவல் சண்டையைப் பற்றி ரொம்ப ஆழமாகச் சொல்லி இருந்தார். 'தென்மேற்கு பருவக்காற்று’ ரொம்ப அருமையான படம்னு பவாகூட சொன்னார். ஆனா, அதைப் பார்க்கணும்னு நினைக்கிறதுக்கு முன்னாடியே எல்லா தியேட்டர்லயும் அந்தப் படத்தைத் தூக்கிட்டாங்க. இதுதான் நல்ல சினிமாக்களுக்கு இன்னிக்கு இருக்கிற நிலைமை'' என்று நடப்புத் துயரத்தைப் பதிவு செய்தார் பாஸ்கர்சக்தி.

அடுத்து 'தென்மேற்கு பருவக்காற்று’ படம் பற்றிப் பேசிய இசை விமர்சகர் ஷாஜி, ''நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் மிக நேர்மையான படம்  இதுதான்'' என்றவர், அருகில் அமர்ந்து இருந்த இயக்குநர் சீனுராமசாமியைப் பார்த்து, ''கிளைமாக்ஸ் கொஞ்சம் நீளம். சில குறைகள் இருந்தாலும் நிறைவான படம்'' என்றார்.

''உள்ளுர் சினிமாக்களும் உலக சினிமாக்கள்தான்!

ஆடுகளத்தில் பேட்டைக்காரனாக அசத்திய கவிஞர் ஜெயபாலன் பேச்சு முழுக்க  உருக்கம். ''இந்தப் படத்தைப் பொறுத்தவரை வெற்றிமாறன் என் தந்தை. அவர்தான் படத்தில் வரும் ஒவ்வொரு அசைவுக்கும் காரணம். அவர் முதன்முதலில் 'ஆடுகளம்’ படம் தொடர்பாகச் சந்தித்துப் பேச வந்தபோது, ஈழத்தில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஈழ மக்களைக் கொத்துக் கொத்தாக அழித்துக்கொண்டு இருந்தது, இனவாத சிங்களப் பேரின அரசு. அதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். ஷூட்டிங்கில் வெற்றிமாறன் 'ஷாட் ரெடி’னு சொல்ற வரைக்கும் நான் போர் பற்றிய மனநிலையில்தான் இருந்தேன். ஷாட் முடிந்ததும் மீண்டும் ஈழ மக்கள் குறித்த துக்கம் பரவத் தொடங்கும்'' என்று தழுதழுத்த குரலில் ஜெயபாலன் பேசியபோது, அரங்கம் முழுவதும் அடர்த்தியான நிசப்தம்.

''இன்னும் கொஞ்ச நேரம் விட்டா நான் தூங்கிடுவேன். அந்த அளவுக்குச் சிலுசிலுனு காத்து வீசுது!'' என்று கலகலப்பாகத் தொடங்கினார் இயக்குநர் சீனுராமசாமி. ''சில தொலைக்காட்சிகள் பண்ற தாறுமாறான விளம்பரத்தால், 'தென்மேற்கு பருவக்காற்று’ மாதிரியான நல்ல படங்கள் மக்களைச் சென்றடைய ரொம்ப மெனக்கெட வேண்டி இருக்கு. மக்களை சொல்லித் தப்பில்லை. ஒவ்வொரு படத்துக்கும் அவங்க மக்களைத் திசை திருப்ப, 'அண்ணேஏஏஎ’னு சத்தமாக் கூவுறதால மக்கள் அலறி அடிச்சுப் போய் தியேட்டர்ல உட்கார்றாங்க. அவங்ககிட்ட நாம மெதுவா 'அண்ணே’னு கூப்பிடுறது கேட்கவா போவுது? அதனாலதான் 35 நாள்ல படத்தை முடிச்சும்கூட, வெளியிட 100 நாளைக்கு மேல் ஆச்சு. யாருமே இந்தப் படத்தைப் பார்க்க வரலேங்கிற கோவத்துல 'நாமளே திருட்டு வி.சி.டி. போட்டு வீடு வீடாக் கொடுக்கலாமா?’னு கூட யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த மாதிரி பல காரணங்களால் துவண்டுபோன எங்களுக்கு, இந்த விருது ஒரு மிக பெரிய ஊக்கமா இருக்கு'' என்றார் நெகிழ்ச்சியும் ஆவேசமுமாக!

'மைனா’ மற்றும் 'ஆடுகளம்’ பற்றிப் பேச வந்த திரை விமர்சகர் சுபகுணராஜன், ''வெகு மக்கள் ரசிக்கிற அனைத்து உள்ளூர் சினிமாக்களுமே என்னைப் பொறுத்தவரை உலக சினிமாக்கள்தான். அந்த வகையில் 'மைனா’, 'ஆடுகளம்’ இரண்டுமே உலகப் பட வரிசையில் சேரும்'' என்றார். கிஷோரும் முரளியும் மிகச் சுருக்கமாக நன்றி மட்டும் சொல்லி அமர்ந்தனர். இறுதியாகப் பேச வந்த இயக்குநர் வெற்றிமாறன், ''பொதுவா விருதுகள் கொடுக்கப்படுவதால் அது நல்ல படம்னும், விருதுகளுக்கு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டால் அது மோசமான படம்னும் சொல்ல முடியாது. விருது என்பது பத்துப் பேர்கொண்ட குழு எடுக்கிற முடிவுதானே தவிர, கோடிக்கணக்கான சினிமா ரசிகர்களின் முடிவு அல்ல. எனவே ஒரு படம் சிறந்த படமா இல்லையா என்பதை விருதுகள் தீர்மானிப்பது இல்லை'' என்று வெற்றிமாறன் சொன்னபோது, அதை ஆமோதிப்பதுபோல அரங்கு முழுக்கக் கைதட்டல்கள்.

கலைஞர்களும் விமர்சகர்களும் கலந்து நிறைத்த அவையில்... கலகலப்பு, உருக்கம், அறிவார்ந்த உரையாடல்கள் என்று அன்றைய பொழுது அழகானது!

- கோ.செந்தில்குமார், மு.தமிழரசு, படங்கள்: பா.கந்தகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு