Published:Updated:

எப்படி இருக்கிறது பாட்ஷா 2.0...? ப்ரிமியர் ஷோ அனுபவம்

எப்படி இருக்கிறது பாட்ஷா 2.0...? ப்ரிமியர் ஷோ அனுபவம்
எப்படி இருக்கிறது பாட்ஷா 2.0...? ப்ரிமியர் ஷோ அனுபவம்

பாட்ஷா, 1995-ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே மிரட்டி எடுத்த மெகா மாஸ் படம். அண்ணாமலை, வீரா வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரும், சுரேஷ் கிருஷ்ணாவும் இணைந்து கொடுத்த பிளாக் பஸ்டர் ஹிட். எத்தனை முறை பார்த்தாலும் முதல்முறை பார்ப்பது போன்ற அதே உற்சாகத்தை தருவதுதான் ' பாட்ஷா'வின் மேஜிக்.

90 களில் பிறந்த பலருக்கு ' 'பாட்ஷா'வை தியேட்டரில் மிஸ் செய்துவிட்டோம்' என்ற ஏக்கம் கண்டிப்பாக இருக்கும். 'ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் தியேட்டரில் எப்படி கொண்டாடியிருப்பார்கள்' என நினைத்து பெருமூச்சு விட்டிருப்பார்கள். இந்தக் குறையைப் போக்கவே 'பாட்ஷா' மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தைத் தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனத்தின் ‛பொன்விழா’ ஆண்டை முன்னிட்டு, இப்படத்தை 5.1 ஒலி வடிவத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். அதன் டீசர் சில நாட்களுக்கு முன்பு சமூகவலைதளங்கில் வைரல் ஆனது. இந்நிலையில், மெருகூட்டப்பட்ட 'பாட்ஷா' படத்தின் ப்ரிமியர் ஷோ சத்யம் திரையரங்கில் நேற்று மாலை திரையிடப்பட்டது.  

எப்படி இருக்கு பாட்ஷா 2.0...

ப்ரிமியர் ஷோவே முதல்நாள் முதல் காட்சி போல களைகட்டியது. ஸ்க்ரீனில் ஓடும் டைட்டில் கார்டு டைம்-மெஷினில் ஏற்றி 90களுக்கே கூட்டிச் சென்றுவிட்டது. படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு வசனத்திற்கும் கை தட்டலும், விசிலும் எகிறியது. ரஜினி திரையில் தோன்றும்போதெல்லாம் ' தலைவா...' என இருபது வயது இளைஞர் முதல் ஐம்பது வயதுக்காரர் வரை ஆர்ப்பரித்தனர்.  'நான் ஆட்டோக்காரன்...' பாடலுக்கெல்லாம் அரங்கில் இருந்த பாதி கூட்டம் ஸ்க்ரீன் முன்னால் தான் ஆடிக்கொண்டிருந்தது.

எல்லா பாடல்களுமே 5.1 ஒலிவடிவத்தில் கேட்கும்போது  சுக்ஹானுபவம். அதிலும் ' நீ நடந்தால் நடை அழகு' பாடல் ஒன்ஸ்மோர் ரகம். டிவியில் மட்டுமே பார்த்தவர்களுக்கு திரையில் பி.எஸ்.பிரகாஷின் ஒளிப்பதிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தான் 5.1 ஒலிவடிவம் மிரட்டுகிறது. குறிப்பாக இடைவேளைக் காட்சியில் யுவராணியை ஆனந்தராஜ் தள்ளி விட, அந்த சமயத்தில் அவரை ரஜினி பிடித்துகொண்டு திரும்பும் போது பின்னணியில் ஒரு ரயில் சத்தம் கேட்குமே... அதைக் கேட்கவே கண்டிப்பா படத்துக்கு போகலாம் பாஸ்.

நீர் சொட்டுவது, கடிகார ஓசை என நுணுக்கமான ஒலிகள் முழு திருப்தியைத் தருகிறது. யுவராணிக்குக் கல்லூரியில் இடம் வாங்கச்செல்லும் காட்சி, கிட்டியை காவல்துறை அலுவலகத்தில் சந்திக்கும் காட்சி, இடைவேளையில் அடிகுழாயைப் பிடுங்கி ஆனந்தராஜையும், அவரது அடியாட்களையும் வெளுக்கும் காட்சி, ரகுவரன் அறிமுகக் காட்சி, ரஜினி - ரகுவரன் சந்திக்கும் காட்சி என படத்தின் அத்தனை மாஸ் சீன்களும் 5.1 ஒலிவடிவத்தில் கேட்கும் போது வேற லெவல். குறிப்பாக, பாட்ஷா தீம் மியூசிக்கை விட ரகுவரன் தீம் மியூசிக் உங்கள் ஃபேவரைட்டாக மாறி, ரிங்டோனாய் வைக்க கூகுளில் தேடினாலும் தேடுவீர்கள். மொத்ததில், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு பாட்ஷா படத்தின் 5.1 வெர்ஷன் ரகளையான விருந்து.

இந்த ப்ரிமியர் ஷோவிற்கு தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் தளபதி தினேஷ், அசோக் செல்வன், இயக்குநர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் தரண், பாடகர்கள் ஹரிச்சரண், நரேஷ் ஐயர் என பல திரைப்பிரபலங்களும் வந்திருந்தனர்.

-ப.சூரியராஜ்,

படங்கள் : ப்ரியங்கா.

அடுத்த கட்டுரைக்கு