Published:Updated:

மைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி! #HBDVijaySethupathi

மைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி! #HBDVijaySethupathi
மைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி! #HBDVijaySethupathi

அந்தக் கண்கள் யாரையும் ஈர்க்கும். அந்த சிரிப்பு யாரையும் மயக்கும். அந்த நடிப்பு எவருக்கும் பிடிக்கும். இன்றைய தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவராக உருவாகியிருக்கிறார்... விஜய் சேதுபதி. 

எந்த ஒரு சினிமாப் பின்னணியுமின்றி, பல காலம் போராடி திரைத்துறையில் கால்பதித்தவர்களில் விஜய் சேதுபதி மிக முக்கியமானவர். உண்மையில் கடந்த சில ஆண்டுகளில் இவரது வளர்ச்சியையும் , தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் பிரித்துப் பார்த்திட முடியாது. 2004ல் ஆரம்பித்தது இவர் திரைப் பயணம். எம்.குமரன்,புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, டிஷ்யூம்,வெண்ணிலா கபடிக் குழு போன்ற பல படங்களில் நாம் பார்க்கத் தவறிய - சில நொடிகள் வந்து போகும் -  கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமியின் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் முதல்முறையாக முன்னணி வேடத்தில் நடித்தார். அது சிறந்த தமிழ் படத்திற்கான தேசியவிருதைப் பெற்றது. மக்களால் கவனிக்கப்பட்டவர் ஏனோ, சினிமா துறையினரால் கவனிக்கப்படாமலே இருந்தார். தேசிய விருது வென்ற படத்தின் நாயகனாக இருந்தும் கூட,  பெரிய படவாய்ப்புகள் அமையாமல் குறும்படங்களில் நடித்து வந்தார்.    

குறும்பட காலங்களில் ஏற்பட்ட நட்பு... கார்த்திக் சுப்புராஜின் மூலம் "பீட்சா" படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. முழுப் படத்தை ஒற்றை ஆளாக தன் தோளில் சுமந்து, அனைவராலும் பாரட்டப்பெற்றார். "விஜய் சேதுபதி... செம்ம..." என்ற பேச்சு அடங்குவதற்குள், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படம் வந்தது. தொடர்ந்து "சூது கவ்வும்" படமும் வெளியானது. "விஜய் சேதுபதி சூப்பர்..." என்று பேசத் தொடங்கிய ரசிகர்கள், இன்று வரை அவர் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தன் பெயர் சொல்லும் வகையிலான படங்களை அவரும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்தார். 

தமிழ் சினிமா நடிகருக்கான இலக்கணங்கள் எதுவும் இவருக்கு பொருந்தாது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வரை எந்தப் படத்திலும் இவர் நடனம் ஆடியதில்லை,பெரிய சண்டை காட்சிகளிலும் நடித்தது கிடையாது. ஹீரோவாக இல்லாமல் யதார்த்த கதைகளின் நாயகனாகவே திகழ்ந்தார் இவர். எந்த ஒரு பாத்திரத்திலும் நடிக்க மறுக்கவில்லை. இவரது இயல்பான தோற்றமே இவரது பெரிய பலமானது. தர்மதுரையில் அசால்ட்டாக இவர் ஆடும் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது டிவியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது ஸ்டைலில் ஆடியிருப்பார்.

இவர் படம் வெற்றியடைய கதையும், திரைக்கதையும் தான் முக்கியம் என நினைத்தார், அதில் வெற்றியும் கண்டார். ஒரு பள்ளியிலோ,கல்லூரியிலோ இந்த செட் சூப்பரான செட் எனக் கூறுவதுண்டு. அதே போல் தான், இவரது செட்டும் சூப்பரான, புதுமையான செட். அதில் தயாரிப்பாளர் சி.வி.குமார்,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, சு.அருண் குமார் ஆகியோரும் அடங்குவர். மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்களும் இவருடனே அறிமுகமானார்கள். ’ஆரஞ்சு மிட்டாய்’ போன்ற கவனிக்கத் தக்க கதைகளை தயாரிக்கவும் செய்து ஆச்சர்யப்படுத்தினார்.

ஒரே மாதிரி 4 பாட்டு, 4 ஃபைட் என்று வந்து கொண்டிருந்த வழக்கமான படங்களுக்கு நடுவே இவர் படங்கள் வெற்றிபெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில், இவரது முதல் பட இயக்குனரான சீனு ராமசாமி, இவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற தலைப்பை சூட்டினார். அந்நியமான ஹீரோயிச கதைகளில் நடிக்காமல் மக்களில் ஒருவராக இருந்ததாலே இப்பட்டம் இவருக்கு மிகப்பொருத்தம். திரையில் மட்டுமில்லை, திரைக்குப் பின்னரும் கூட மிக எளிமையான மனிதர்.

முருகன் (தென் மேற்குப் பருவக்காற்று), மைக்கேல் கார்த்திகேயன் (பீட்சா), கைலாசம் (ஆரஞ்சு மிட்டாய்), பாண்டி (நானும் ரௌடி தான்) காந்தி (ஆண்டவன் கட்டளை)  என்று எந்த கதாபாத்திரலும் சட்டெனப் பொருந்துகிற நாயகர்களில் இவர் டாப்! இதே போன்று எப்போதும் யதார்த்த கதைகளின் நாயகனாகவும், சிறந்த மனிதனாகவும் இருக்க ... மக்கள் செல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

                                                                                                                                 - ம.காசி விஸ்வநாதன்
 (மாணவப் பத்திரிகையாளர்)