Published:Updated:

தற்காப்பு.. ஃபிட்னஸ், ஓவியம்... அனைத்திலும் அசத்தும் ‘அடியே அழகே’ நிவேதா பெத்துராஜ்!

தற்காப்பு.. ஃபிட்னஸ், ஓவியம்... அனைத்திலும் அசத்தும்  ‘அடியே அழகே’ நிவேதா பெத்துராஜ்!
தற்காப்பு.. ஃபிட்னஸ், ஓவியம்... அனைத்திலும் அசத்தும் ‘அடியே அழகே’ நிவேதா பெத்துராஜ்!

‘அடியே, அழகே..’ என கோடம்பாக்கத்தில் கொண்டாடப்படுகிற நிவேதா பெத்துராஜ், உதயநிதி ஸ்டாலினுடன் 'பொதுவாக என் மனசு தங்கம்', ஜெயம் ரவியுடன் 'டிக் டிக் டிக்' என கோலிவுட்டில் இப்போது பிஸி நடிகை! அழகிப்போட்டியில் வெற்றியடைந்த பிறகுதான் மாடலிங் தொழில் சூடுபிடிக்கும். இவர் உல்டா. ''மிஸ். இந்தியாவுல ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே நான் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். ஆனால், மிஸ் இந்தியாவுக்குப் பிறகு எனக்கு மாடலிங் ஆர்வம் போயிடுச்சு. ஒரே மாதிரி டிரெஸ் பண்றதும் போஸ் கொடுக்கிறதும் அலுத்துப் போச்சு. பலருக்கும் தெரியாத தகவல்..நிவேதா பிரமாதமான ஓவியர்.

''வரையறது ரொம்பப் பிடிக்கும். விண்வெளி, விண்மீன்கள், வேற்றுகிரகங்கள் இதெல்லாம் எனக்கு கனவுல வரும். என்னோட கனவுகள் பெரும்பாலும் ஆறு மாசத்துலயோ, ஒரு வருஷத்துலயோ நிஜத்துல நடக்கும். அப்படியில்லைனா அதையெல்லாம் படத்துல பார்ப்பேன். அதையெல்லாம் எழுதி வச்சுக்கிட்டு வரைவேன்.'' என்கிற  நிவேதா டுகாட்டியில வேலை பார்த்தவர்.

அந்த அனுபவம்?

'டுகாட்டிக்காக வேலை பார்த்த ஒரே இந்தியப் பெண் நான்தான். பார்ட் ஆஃப் கேர்ள்ஸ்னு சொல்வாங்க. பைக் பக்கத்துல குடை பிடிச்சுக்கிட்டு நிக்கணும். அதையெல்லாம் மறக்கவே முடியாது.”

கொஞ்சம் சுமாராக இருந்தாலே காதல் விண்ணப்பங்கள் குவியும். நிவேதா பெத்துராஜ் அழகிப்போட்டியில் ஜெயித்த அழகிய லைலா.

''அய்யோ.. அதை ஏன் கேட்கறீங்க? எட்டாவது படிக்கும்போதே எனக்கு முதல் பிரபோசல் வந்தது. ரோஜாப் பூக்கள் வச்சு, இங்கிலீஷ்ல ஏதேதோ எழுதின கார்டு கொடுத்தான் ஒரு பையன். செம கியூட்டா இருந்தது. அப்பல்லாம் பசங்கன்னாலே பயம். ஓடியே போயிட்டேன். அப்போ, எனக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியாது. என்ன எழுதியிருந்ததுனு கூடத் தெரியலை. இப்ப நினைச்சாகூட காமெடியா இருக்கு.

அதுக்கப்புறம் வெவ்வேறு காலகட்டங்கள்ல எக்கச்சக்கமான பிரபோசல். கடைசியா பிரபோசல் வந்து ரெண்டு வருஷமாச்சு. துபாய் பசங்க இந்த விஷயத்துல ரொம்ப மோசம். வெளில போறபோது,  நம்மளைப் பார்ப்பாங்க. பிடிச்சிட்டா உடனே நம்பர் கேட்டு வாங்கிடுவாங்க அல்லது அவங்க நம்பர் கொடுத்துடுவாங்க. என்கிட்டயும் அப்படி நிறைய பசங்க நம்பர் கேட்டிருக்காங்க. ஆனா பார்த்த உடனேயே இப்படிக் கேட்டா ஒரு ஃபீலிங்கும் வராதே... யாருக்கும் நம்பர் கொடுத்ததில்லை. ஆனால் எனக்கு அப்படி ஒருத்தன்கிட்ட நம்பர் வாங்கணும்னு தோணியது, வாங்கியிருக்கேன். ஆனா வாங்கினதோட சரி... தூக்கிப் போட்டுட்டேன்.''

அட்டகத்தி தினேஷ், உதயநிதி ஸ்டாலின் , ஜெயம் ரவி?

“தினேஷ் என்னோட முதல் ஹீரோ. புதுப் படம்னு எனக்கு பயம் வராதபடி நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். 

உதய் சார்கூட முதல் ஷெட்யூல் முடிஞ்சிருச்சு. அவர் ஒரு ஜென்டில்மேன். இவ்வளவு பெரிய இடத்துல இருக்கிற ஒருத்தரால இப்படியும் தன்னடக்கத்தோட இருக்க முடியுமானு பிரமிக்க வச்சவர். அவர் ரொம்பப் பெரிய உயரத்துக்குப் போகப் போறார்னு என் உள்மனசு சொல்லுது. போலித்தனம் கிடையாது. கோபமே வராது. அசிஸ்டென்ட்ஸை அவ்வளவு மரியாதையா நடத்துவார். அதையெல்லாம் அவர்கிட்டருந்துதான் கத்துக்கிட்டேன்.

ஜெயம் ரவிகூட பத்து நாள்தான் ஷூட்டிங் நடந்திருக்கு. ஒருநாள்தான் ரெண்டு பேரும் சந்திச்சோம். அப்போ அவர் மனைவியும் குழந்தையும் இருந்தாங்க. ஒரு குடும்பமா அவங்களைப் பார்க்கவே சந்தோஷமா இருந்தது.”

சினிமா துறையில நண்பர்கள் இருக்காங்களா?

''மூணு பேர் இருக்காங்க. நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே மூணு பேரையும் தெரியும். ரம்யா ஆனந்தி, 'காதலில் சொதப்புவது எப்படி' படத்துல ஒர்க் பண்ணிட்டு, இப்போ ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட்டா இருக்காங்க. அடுத்து சத்யலட்சுமி. கண்ணதாசன் வீட்டு வாரிசு. பல் டாக்டர், கோ புரடியூசர். அப்புறம் மித்ரன் சரவணன். 'பொன்னியின் செல்வன்' பண்ணினபோதே அவரைத் தெரியும். இவங்க மூணு பேரும்தான் எனக்கு க்ளோஸ்.”

* குடும்பம்?

''அப்பா பெத்துராஜ், இன்ஜினியர். அம்மா பவானி, ஹோம் மேக்கர். தம்பி நிஷாந்த், காலேஜ் முடிச்சிட்டு சி.எஃப்.ஏ பண்ணிட்டிருக்கான்.

நீங்க ஃபிட்னஸ் டிரெயினராமே? 

''ஃபிட்னஸ்ல லெவல் ஒன் முடிச்சிருக்கேன். லெவல் 2 பண்ண விருப்பமில்லை. தற்காப்புக் கலையும் கத்துக்கிட்டிருக்கேன். வருஷத்துல ரெண்டு மாசம் தாய்லாந்து போய் கத்துக்கிட்டு வருவேன். ஜுஜிட்ஸு, கிக் பாக்சிங், ரெஸ்ட்லிங்னு எல்லாம் தெரியும். போன வருஷம் பிராக்டிஸ் பண்ணிட்டிருந்தபோது ரெண்டு கைகள்லயும் தசைநார் நகர்ந்திடுச்சு. அதனால ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன். ஜுஜிட்ஸுவை 'ஆன்ட்டிரேப்'புக்கான ஆயுதம்னே சொல்லலாம். அதைக் கத்துக்கிற பெண்ணை யாரும் பாலியல் பலாத்காரம் பண்ண முடியாது. என்னைப் பத்தி தெரிஞ்ச பசங்க, 'இவங்க கிட்ட தள்ளியே இருக்கணும்'னு சொல்வாங்க.”

அபுதாபியில் கடந்த வருடம் நடந்த அழகிப்போட்டியில் 'மிஸ் இந்தியா யு.எ.இ' வின்னர் கிரீடம்.. மனிதவளப் பிரிவில் பட்டதாரி... தற்காப்புக் கலைஞர்... ஃபிட்னஸ் பயிற்சியாளர்.. ஓவியர்... இப்போது நடிகை... 'ஒருநாள்கூத்து’ நிவேதா பெத்துராஜின் புரொஃபைல் நிஜம்மாகவே செம்மையாக இருக்கிறது. 2016ன் சக்ஸஸ் கொடுத்த ஹீரோயின்கள் பட்டியலில் உள்ள மதுரைப் பெண்ணான நிவேதாவுக்கு வாழ்த்துகள்...

-வைதேகி

அடுத்த கட்டுரைக்கு