வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (21/01/2017)

கடைசி தொடர்பு:19:56 (21/01/2017)

’டக்கரு டக்கரு’ முதல் ’யாருடா நீங்க’ வரை... ஜல்லிக்கட்டு கீதங்கள்! #SupportJallikattu

'இசை இந்த உலகத்தையே மாற்றக் கூடிய சக்தி படைத்தது. ஏனெனில், அது மனிதர்களை மாற்றக்கூடியது' என்பார்கள். அப்படி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் நம் இளைஞர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டங்களையும், தமிழனின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டையும் ஆதரிக்கும் விதமாக வெளியாகியிருக்கும் பாடல்களின் தொகுப்பு இது.

டக்கரு டக்கரு முதல் கொம்பு வெச்ச சிங்கம்டா வரை ஜல்லிக்கட்டு பாடல்கள்

டக்கரு டக்கரு :

கிட்டதட்ட ஜல்லிக்கட்டு ஆன்தமாக மாறிப்போன பாடல். 'இது மாட்டை பத்தின பிரச்னை இல்ல, நாட்டை பத்தின பிரச்னை. ஏ இங்க பாரு, இது தான் என் ஊரு' என இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் இன்று போராட்டக் களத்தில் கோஷமாய் ஒலிக்கின்றன. தாறுமாறு வரிகள் கொண்ட பாடலும், பாடலை தொடர்ந்து வரும் மாடு வளர்ப்பவர்களின் கூற்றுகளுமே இன்று போராடும் இளைஞர்கள் பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம். ஹிப்ஹாப் தமிழா டக்கரு டோய்...

கொம்பு வெச்ச சிங்கம்டா :

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் துள்ளலான இசையில் அவரும் 'நெருப்புடா' அருண் ராஜா பாடிய பாடல். 'வீரம்னா ஏன் மாட்டை அடக்கனும், சிங்கத்தை அடக்கவேண்டியது தானே?' என கேள்வி கேட்டவர்களுக்கு ' கொம்பு வெச்ச சிங்கம்டா... இது ஜல்லிக்கட்டு காளைடா...' என்ற வரிகளால் இந்தப் பாடலில் பதில் சொல்லியிருப்பார் அருண் ராஜா. 'ஏறு தழுவுறது ஊரு... தடுக்க நினைக்க நீ யாரு?'


ஜல்லிக்கட்டு ( சந்தனத்தேவன் ) :

நடிகர் ஆர்யா, சத்யா நடிப்பில் இயக்குநர் அமீர் இயக்கும் திரைப்படம் சந்தனத்தேவன். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்த படத்தின் போஸ்டரும், 'ஜல்லிக்கட்டு' என்ற பாடலும் வெளியானது. கார்த்திக், செந்தில் தாஸ் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை எழுதியது வைரமுத்து. 'ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு முரட்டு காளை, துள்ளி துள்ளிகிட்டு விரட்டும் ஆளை... , அது காளை இல்லை, அது இன்னொரு புள்ளை...' என வரிகள் ஒவ்வொன்றும் நச்.

எடு எடு :

மகேந்திரன், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'திட்டிவாசல்' என்ற படத்திலிருந்து இந்த பாடல் மட்டும் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. 'எடு எடு வாளை, நீ எழுதிடு புதுவித ஓலை' என நா.முத்துக்குமாரின் எழுச்சி வரிகள் நிறைந்த இந்தப் பாடலில், ஜல்லிக்கட்டு போராட்ட காட்சிகளை சேர்த்துவிட்டு ஜல்லிக்கட்டு ஆதரவு பாடலாக மாற்றிவிட்டார்கள். ஜெர்மன் விஜய் என்பவர் இசையமைத்த இந்தப் பாடலை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

யாருடா நீங்க :

இந்தப் பாடலை தாஜ்நூர் இசையைமத்திருக்கிறார். 'ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் பண்டிகையின் ஓர் அங்கம். ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் கொண்டாட்டம் முழுமை பெறாது. நாங்கள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம்' என வீடியோவின் கீழ் கூறப்பட்டுள்ளது.' யாருடா இந்த பீட்டா, இனி உடைப்போம் தடைகளை கேட்டா...' என வரிகள் அமைத்தது பாடலாசிரியர் சிநேகன்.

 

நடத்துவோம்டா ஜல்லிக்கட்டு :

'மாலை பொழுதின் மயக்கத்திலே' படத்தின் இசையமைப்பாளர் அச்சு இசையமைத்திருக்கும் பாடல். 'தமிழனோட மீசை என்ன உங்களுக்கு மிதியடியா?  நடத்துவோம் ஜல்லிக்கட்டை நாங்களும் பதிலடியா...' என வரிகளில் கோப உணர்வைத் தூக்கலாகவே போட்டு எழுதியிருக்கிறார் பா.விஜய்.

இதேபோல பல இண்டிபெண்டன்ட் இசைக்கலைஞர்களும், இளைஞர்களும் தங்களது இசையால் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

-ப.சூரியராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்