Published:Updated:

இது அந்தப்படம்ல?? துல்கர் நடிப்பில் ‘ ஜோமோன்டே சுவிஷேசங்கள்’ படம் எப்படி?

பா.ஜான்ஸன்
இது அந்தப்படம்ல?? துல்கர் நடிப்பில் ‘ ஜோமோன்டே சுவிஷேசங்கள்’ படம் எப்படி?
இது அந்தப்படம்ல?? துல்கர் நடிப்பில் ‘ ஜோமோன்டே சுவிஷேசங்கள்’ படம் எப்படி?

ஜோமோன்டே சுவிஷேசங்கள் இந்த வார மலையாள சினிமா. அவர் ஒரு தொழிலதிபர், ரசனையாக தன் குடும்பத்துடன் வாழ்க்கை செல்லும் போது, ஒருவரின் துரோகத்தால் தொழிலில் கடன் நெருக்கடி ஏற்படுகிறது. மொத்த குடும்பமும் ஆரம்பித்த இடத்திற்கே போகும் நிலை. அப்போது அவர் இதைப்பற்றி குடும்பத்துடன் எதுவும் பகிர்ந்து கொள்ளாமல் தலைமறைவாகிறார். இந்த நிலையை அவரது மகன் எப்படி சரி செய்கிறான் என்பது தான் ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம் படத்தின் கதை. நிவின் பாலி, ரெஞ்சி பணிக்கர் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த சூத்திரத்தை கொஞ்சம் மாற்றி, துபாயை திருச்சூராக, அப்பாவுடன் மகனும் தலைமறைவு, அந்தக் குடும்பத்துக்குள்ளேயே சில பிரச்சனைகள், மகனுக்கு சின்ன காதல் என செய்து கொள்வோம். வின்சென்ட் (முகேஷ்) திருச்சூரில் பெரிய தொழிலதிபர். அவரது கடைசி மகன் ஜோமோன் (துல்கர்). முதல் இருவர் தங்களுக்கான தொழிலைத் தேர்தெடுத்து சிறப்பாக இருக்க, வீட்டில் இருக்கும் நாய் கூட, ‘லொள் உனக்கு பொறுப்பே இல்லையா லொள்’ எனக் குரைக்கும் அளவுக்கு ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் துல்கர். இதே சமயத்தில் முகேஷ் கட்டிவரும் அப்பார்ட்மென்ட் இடத்தில் சட்ட சிக்கல் வர, வாங்கிய கடன்களால் சொத்தை எல்லாம் இழக்க நேரிடுகிறது. இதிலிருந்து எப்படி ஜோமோனுடைய குடும்பம் மீள்கிறது என்பது ஜோமோன்டே சுவிஷேசங்கள் படத்தின் கதை.

ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்ஜியம் பார்த்து சிலிர்த்த சிலருக்கு ஜோமோன்டே சுவிஷேசங்கள் பெரிய ஈர்ப்பை கொடுக்காமல் போக வாய்ப்பு உண்டு. சரி ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்ஜியம் என ஒரு படம் வந்ததை மறந்துவிட்டுப் பார்த்தால் ஜோமோன் என்ன தருகிறான்?

ஒரே பாட்டில் பணக்காரனாகும் கண்கட்டிவித்தை எதுவும் காட்டவில்லை. ஒரே சீனில் வாழ்க்கை சூன்யமாகி ஏழ்மையை சந்திக்கும் எதார்த்தமும், மீண்டு வந்து தொழில் துவங்கி முதல் லாபம் பெருவது வரையான சிரமத்துக்கு இடையே காமெடி, காதல், டூயட் எல்லாமும் இருக்கிறது. 

'உனக்கு பொறுப்பே இல்லையேப்பா' என சொல்லும் போது அதற்கு வெறுப்பாவது, தந்தையிடம் காட்டும் பாசம், அவ்வப்போது, சைட் அடித்துக் கொண்டு தன்னை ரீசார்ஜ் (சைட் அடிப்பதற்கு துல்கர் வைத்திருக்கும் பெயர்) செய்துகொள்ளும்போது குறும்பாக சிரிப்பதுமாய் ரகளை செய்கிறார் துல்கர். அனுபமா பரமேஷ்வரன் முதல் பாதிக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாம் பாதிக்கு என இரண்டு ஹீரோயின்கள். ஐஸ்வர்யாவிடம் ஹீரோவுக்கு உதவிகள் செய்யும் கூடுதல் பொறுப்பு இருப்பதால் பின்பாதி முழுக்க வருகிறார், நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார். 

மீண்டும் ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியத்தை உதாரணம் காட்டாமல் இருக்க முடியவில்லை. ஒருவேளை அந்தப் படத்தில் ரெஞ்ஜி பணிக்கர் தலைமறைவாகாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதைத் தான் சுரேஷின் கதாபாத்திரம் செய்து கொண்டிருக்கிறதோ என்பது போன்ற யோசனைகள் எழுந்தது. சுரேஷின் அந்த 555 சென்டிமென்ட்டும், ஏதாவது தவறு செய்துவிட்டு, 'ஸ்டில் ஐ லவ் யூ' என சொல்லி துல்கர் தப்பிக்கும் போது ராஸ்கல் எனக் கொடுக்கும் முகபாவமும் செம்ம்ம...!

வித்யாசாகர் இசையில் நோக்கி நோக்கி (லேசாக ஜன்னல் ஓரம் படத்தில் வரும் உன்னப்பாக்காம பாடலை நினைவுபடுத்துகிறது) பாடல் சூப்பர். சில சென்டிமென்ட் காட்சிகளுக்கு பின்னணி இசையும் கொஞ்சம் கனம் சேர்க்கிறது. திருச்சூர் மற்றும் திருப்பூர் பகுதிகளை தன் ஒளிப்பதிவு மூலம் வித்தியாசப்படுத்தி காட்டுகிறார் குமார். 

மலையிலிருந்து பாதாளம் நோக்கி ஒரு வீழ்ச்சி, அதிலிருந்து சம தளம் நோக்கி வரப் போராட்டம், மலை ஏறுவதற்கான முதல் அடி... இதற்கிடையில் வரும் காட்சிகள், குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் எதிலும் அழுத்தம் இல்லாமல் நகர்வது படத்தின் பெரிய குறை. அதனாலேயே முக்கியமான காட்சியும், "சரி ஓகே, ஜெயிச்சுட்டாங்களா, படம் முடிஞ்சிடுச்சா" என்பது போன்ற மந்த நிலையிலேயே பார்வையாளர்களை வைக்கிறது. 

மிக சமீபத்தில் பார்த்த படத்தின் சுவடுகளை நினைவுபடுத்துவதால் இக்பாலின் கதையோ, சத்தியன் அந்திகாட் இயக்கமோ கவனம் கவரவில்லை. அதே சமயத்தில் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் அளிக்கவில்லை. கொஞ்சம் பாதுக்காப்பாக இரண்டிற்கும் நடுவில் தத்தளிக்கிறது ஜோமோன்டே சுவிஷேசங்கள்.