Published:Updated:

’வெப் வேர்ல்ட்-டின் பலத்தை உலகம் உணர்கிறது!' - SICA விழாவில் கமல்

பரிசல் கிருஷ்ணா
’வெப் வேர்ல்ட்-டின் பலத்தை உலகம் உணர்கிறது!' -  SICA விழாவில் கமல்
’வெப் வேர்ல்ட்-டின் பலத்தை உலகம் உணர்கிறது!' - SICA விழாவில் கமல்

’தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்’ (South India Cinematographers Association)  சார்பில் இன்று காலை ரஷ்யன் கலாசார மையத்தில் SICA-வின் தமிழ் இணையதளம் திறந்து வைக்கப்பட்டது. வைரமுத்து அவர்கள் இணையதளத்தை ஆரம்பித்து வைத்தார். சங்கத்தலைவர் பி.சி.ஸ்ரீராம், பொதுச்செயலாளர் பி.கண்ணன், ராஜிவ்மேனன், பாரதிராஜா உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வை இளவரசு தொகுத்து வழங்கினார். 

http://www.thesica.in/ என்ற முகவரியில் ஆங்கில இணையதளம் ஏற்கனவே உள்ளது. இன்றைக்கு, அந்தத் தளத்தின் ஒரு பகுதியாக தமிழிலும் http://thesica.in/tamil/ என்ற முகவரியில் தமிழில் இணையம் தொடங்கப்பட்டது. 

விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘Web Worldன் பலத்தை, தமிழகம் மூலம் இன்று உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை’ என்றார். அவர் பேசியதன் முழுத்தொகுப்பு:

“சினிமாவில் எல்லா கலையும் மிக முக்கியமானது.  விருமாண்டியில் வரும் மீசை எல்லாம் நானே வைத்துக் கொண்டது. கொஞ்சம் நாவிதமும் தெரியும் என்பதால். ஒளிப்பதிவும் அதுபோலத்தான். வைரமுத்து பேசும்போது எனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றார். நிச்சயம் இருக்கிறது. ’நிலாவத்தான் கையில பிடிச்சேன்’ என்று நீங்கள் எழுதவில்லை என்றால் காமிராவின் கைகளை நிலாவோடு காட்டியிருக்குமா? மழைக்காட்சி என்றுதான் ராஜ பார்வையில் நாங்கள் சொன்னோம். அதை ‘அந்திமழை’யாக்கியது உங்கள் பேனா தானே. அதற்கு டோன் கொடுத்தது அந்த வார்த்தைதானே. காலை மழையாக இருந்தால் கூலர் டோன் ஆகிருக்கும்.  

எப்படி Francis Ford Coppola வின் ’தி காட் ஃபாதருக்கு ’Gordon Willis’ இருந்தாரோ, எப்படி Ryan's Daughter- ஐ பார்த்துவிட்டு நானும் பாரதிராஜாவும் - 16  வயதினிலே பார்க்கும்போது அதைப்பத்தியெல்லாம் நெனைச்சுகிட்டு இருப்போம். அந்த அளவுக்கு பணம் போட்டு எடுக்க வசதி கெடையாது அப்போ. நானும் தயாரிப்பாளர்ங்கறதால ஜாக்கிரதையா பேசறேன்.. உங்களுக்கு ‘கொஞ்சம்’ பட்ஜெட் கூட்டிக் கொடுத்தா, உலகத்தரம் என்னானு இங்கயே காட்டிடுவீங்க. எல்லா வல்லமையும் இங்கே இருப்பது எனக்குத் தெரியும். நான் இங்கே பெற்றுக் கொண்ட விஷயங்களை அப்படியே சொன்னால்கூட பாடமாக இருக்கும் அளவுக்கு பெரிய பெரிய குருமார்களுடன் நாம் பழக நேர்ந்திருக்கிறது.

வின்செண்ட் மாஸ்டர் பத்தி அவர் மகன் ஜெயனன் கிட்ட பேசிகிட்டிருந்தேன். ஷுட்டிங் டைம்ல, கை ஜாடைல எதோ காட்டுவார். ஜெயனன் ஓடுவார். என்ன மாஸ்டர்னா.. ‘ரிம்... ரிம்’னு ஓடுவார். ஒரு சந்தேகம் கேட்டா, ‘அப்பறம் சொல்றேன்’னு அவர் வாயில இருந்து வராது. வேலைய விட்டுட்டு வந்து ‘அந்த ரிம் லைட்ங்கறது எப்டின்னா..’ன்னு விளக்க ஆரம்பிச்சிடுவார் வின்செண்ட் மாஸ்டர். வரைஞ்செல்லாம் காட்டுவார். அந்த மாதிரி இடத்துல நிற்க எனக்கு வாய்த்திருந்தது.   

Marcus Bartley தான் ‘செம்மீன்’ படத்துக்கு ஒளிப்பதிவு. அவர்கிட்ட ‘செம்மீன்’ நைட் ஷூட்டிங் பத்தி பேசிட்டிருக்கறப்போ, ‘நாளைக்கு எடுக்கப்போறோம் நைட் சீன், வர்றீங்களா’ன்னு கேட்டார். வேற எங்க இருந்தோ அதப் பார்க்கப் போனேன். எனக்கு காட்சிகள் இல்லைன்னாலும். மதியம் 12 மணிக்கு எடுத்தார் நைட் சீனை. கொஞ்சம் கேமராவை இந்தப் பக்கம் திருப்பினா பகல் தெரிஞ்சுடும். அந்தக் கேமராவை அப்படியே நெளிச்சு.. நெளிச்சு அவர் கொண்டு போன விதம், இன்னைக்கும் எனக்கு பாடமாக இருக்கிறது. இப்பவும் நான் சில யோசனைகள் சொன்னேன்னா,  ’உங்களுக்கு எப்படித் தெரியும்’பாங்க.  Marcus Bartley பெயரைச் சொல்லாமல் விட்டால், நான் திருடன். அதுனால ஒவ்வொரு முறையும் சொல்லுவேன்.

அதே போலத்தான். பி.எஸ்.லோகநாத் அவர்கள். சாயங்காலம் நாங்க உட்காந்து பேசிட்டிருப்போம். ‘இன்னைக்கு என்ன சார் ஷாட்’னு கேட்டா போதும். கேமராவைக் கொண்டானுடுவார். ‘ஏன் சார் டைட்டில் ஆடிச்சு’ன்னு ஒரு கேள்வி வந்தா போதும், கேமராவைப் பிரிச்சு ரெண்டு ‘க்ளா’ இருக்கற கேமராலதான் எடுக்கணும்பா. இதுல ஒண்ணுதான் இருக்கு’ம்பார். டைரக்டர்கிட்ட சொல்லும்பார். பாலசந்தர் சார்கிட்ட சொன்னா ‘அப்டியா.. சொல்லிருக்கலாமே’ம்பார். மன்மதலீலைல பார்த்தீங்கன்னா டைட்டில் அவ்ளோ ஸ்டடியா இருக்கும். 

இவற்றையெல்லாம் நான் கற்றுக்கொண்டது ஒளிப்பதிவாளர்கள்கிட்டதான். அதுனாலதான் இந்த இணையம் ஒளிப்பதிவாளர்களுக்கு மிக மிக முக்கியமானதென்பேன். நான் புரியாமல் கேட்டவற்றில் இருந்தே அத்தனை கற்றுக் கொண்டிருக்கிறேன் எனும்போது புரிந்து கொண்டவர்கள் எழுதினால் எத்தனை உபயோகமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

நான் Babubhai Mistry அவர்கள் டிரிக் ஷாட் பண்றப்ப கிட்ட இருந்து பார்த்திருக்கேன். ஜி.கே. ராமு சார், ப்ரசாத் சார்.. இவங்கள்லாம் பண்ணும்போது வியப்பா இருக்கும். கோவத்துல கைய எல்லாம் கிழிச்சுட்டு பண்ணுவாங்க. அதுனாலதான் அபூர்வ சகோதரர்கள் மாதிரி படம்லாம் பண்ற துணிச்சல் வந்தது. நான்லாம் சும்மா. சிங்கிதம் சீனிவாசராவ் கத்துகிட்டது மாயாபஜார்ல. அதுல அசிஸ்டெண்ட் டைரக்டர் அவர். 

இந்தக் களஞ்சியத்துல இருந்து எடுத்துக் கொடுக்க வேண்டியது நெறைய இருக்கு. இப்போ யாரோ தமிழ்ப் பொறுக்கிகள்னாங்க. நான் தமிழ் பொறுக்கிதான். இங்க பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்ச பொறுக்கி. டெல்லில பொறுக்க மாட்டேன். (பலத்த கைதட்டல்) என்ன திடீர்னு அரசியல் பேசறேன்னு நெனைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம்.

இன்றைக்கு  வெப்சைட்டின் பலத்தையும், Web Worldன் பலத்தையும் தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழில் இணையம் என்பது மிக முக்கியமானத் தேவை. அதை சரியான நேரத்தில் துவங்கியிருக்கிறார்கள்.  

நான் என்னைவிட வயது குறைந்தவர்களிடம் கூட பாடம் கற்றுக் கொண்டிருகிறேன். ‘ஐ.வி.சசி எப்படி ஷாட் வெச்சார்’னு பாலசந்தர் என்கிட்ட கேட்பார்.  நான் குழந்தைல இருந்து இந்த விளையாட்டைப் பார்த்துட்டிருக்கேன். எனக்கு நடிக்கணும்கறதவிட, டெக்னீஷியனாகறதுதான் ஆசை. அவங்களுக்கு ரொம்ப லேட்டாதான் போஸ்டர்லாம் வெச்சாங்க. பெரும் ஜீனியஸ்லாம் டெக்னீஷியன்ஸா இருக்காங்க.

அழுக்கு வேட்டி, சட்டையோட ஒருத்தர் கதை சொல்ல ஆஃபீஸ் வந்தார். அந்த உடையப் பார்த்து நான் முடிவு பண்ணிருந்தா, நான் இப்ப இங்க இல்லை. கதை சொல்லிமுடிச்சப்பறம்தான் இவர் எவ்ளோ பெரிய ஜீனியஸ்னு உணர்ந்தேன். 16 வயதினிலேதான் அது. நான் கால்ஷீட் குடுக்காம ஓடிப்போய்டுவேனோனு வெறும் கேமராவ எல்லாம் ஓட்டிருக்கார். அந்த மாதிரி படம் எடுக்கணும்கற உணர்வெல்லாம் உள்ள இருந்தாலும் வெளில தெரியாது. 

இந்த மாதிரியான ஒரு விழாவில், என்னையும் உங்களில் ஒருவனாக அழைத்து கலந்து கொள்ளச் செய்தமைக்கு நன்றி!”

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.-பரிசல் கிருஷ்ணா
படங்கள்: ஆதிமூலகிருஷ்ணன்