Published:Updated:

'இந்த வன்முறை சாதாரண மனிதனை அதிர்ச்சிக்குள்ளாக்கும்!' - கமல்

கார்த்தி
'இந்த வன்முறை சாதாரண மனிதனை அதிர்ச்சிக்குள்ளாக்கும்!' -  கமல்
'இந்த வன்முறை சாதாரண மனிதனை அதிர்ச்சிக்குள்ளாக்கும்!' - கமல்

நடிகர் கமல்ஹாசன் மெரினாவில் அறவழியில் போராடிய மாணவர்களுக்காக தொடர்ந்து தனது ட்விட்டர் தளத்தில் ட்விட்கள் இட்டு வந்தார். நேற்று இரவு NDTV தொலைக்காட்சியின் LRC நிகழ்ச்சியிலும் டெலி கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டார். அப்போதும், மாணவர்களுக்கு ஆதரவாக பேசினார். இன்று காலை, 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது

கேரளாவில் நூற்று கணக்கான யானைகளை செண்ட மேள சத்தம், பட்டாசு வெடிக்கும் சத்தங்களுக்கு இடையே நிற்க வைக்கிறோம். அதை அனுமதிக்கவும் செய்கிறோம். அதற்கு யானைகளும் பழகிவிட்டது. பீரங்கி குண்டுகளின் சத்ததிற்கே யானைகளை பழக வைத்த வரலாறு நமக்கு இருக்கிறது. பீஃப் சாப்பிட அனுமதி அளிக்கிறோம். ஆனால், அதே ஏறு தழுவ அனுமதி அளிக்க மறுக்கிறோம். அதுவும், என் காளை மீண்டும் அடுத்த ஆண்டு என்னோடு விளையாட வரும். என வீட்டில் இருக்கும் நாய், பூனையோடு, அதுவும் ஒன்றாக இருக்கும். அது ஒரு செல்ல பிராணியாக இருக்கும். இந்த இரட்டை நிலையைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.

கே : போலீஸார் கட்டவிழ்த்த வன்முறையை எப்படி பார்க்கிறீர்கள்?
அதிர்ச்சி ஆக்கியுள்ளது. ஏதேனும் ஒரு விளக்கம் வரும் என நம்புகிறேன். இது சாதாரண மனிதனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். எப்போது வேண்டுமானாலும், தான் பாதிக்கப்படுவோம் என அஞ்ச ஆரம்பிப்பான். வன்முறையில் ஈடுபட்ட போலீஸாரின் காட்சிகளைப் பார்த்தபோது, இது காவல்துறையாக இருக்காது என்றும் ஏதோ நடிப்பு காட்சிகளுக்கானது என்றும் நம்பினேன். இந்த வன்முறையில் ஈடுபட்ட அவர்கள் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்.

கே: விலங்கு நல வாரியங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அவர்களுக்கு கருத்து சொல்லும் அளவு எனக்கு தகுதி இருப்பதாக நினைக்கவில்லை. நம்மிடம் சென்சார் போர்டு போல், விலங்கு நல வாரியம் இருக்கிறது. பிறகு ஏன் பிற விலங்கு நல அமைப்புகள் இங்கு இருக்க வேண்டும். லண்டனின் RSPCA போல் இங்கும் அமைப்புகள் இருக்கிறன. எனவே, எதற்கும் தடை போடாதீர்கள். ஒழுங்குபடுத்துங்கள் என்றுதான் சொல்கிறேன்.

விபரீதம் என்பதால், ரேஸிங்கை யாரும் தடை செய்யவில்லை. நான் தடைக்கு எதிரானவன். என் சினிமாவாக இருந்தாலும் சரி, காளையாக இருந்தாலும் சரி. நான் தடைக்கு எதிரானவன். என் படம், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றார்கள். அப்போது, பேசாமல், அதைப்பற்றி இப்போது பேசினால், என்னை கோழை என்பார்கள். ஆனால், நான் அப்போதும் அதற்கு எதிராக குரல் கொடுத்தேன்.

கே: மக்களின் பாரம்பர்யத்தை அரசுகள் கண்டுகொள்ளவில்லை என நம்புகிறீர்களா?

பிழையான பெருமை நீதிக்கு கிடையாது. தப்பே பண்ணாத நீதி என்று ஒன்று இல்லை. எந்த சட்டமும் தவறு இழைக்காதது என்றில்லை. முன்பு சட்டமாக இருந்த மனுநீதியை மாற்றி அமைத்தவர்கள் நாம், தூக்கி எறிந்தவர்கள் நாம்.

கே : இது தீடீரென உண்டான கோபம் என நினைக்கிறீர்களா?

நான் ஒரு கட்சிக்கு எதிராகப் பேசவில்லை. இந்த சிஸ்டத்தில் இருக்கும் பிரச்னை இது. பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு இருந்த கோபம் இன்று வெளியாகி இருக்கிறது. இது திடீரென எழுந்த கோபம் அல்ல. ஜல்லிக்கட்டு ஒரு காரணம் மட்டுமே. மக்கள் ஒரு காரணத்திற்காக காத்துக்கொண்டு இருந்தார்கள். இந்தி எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். நான் இந்தி மொழிக்கு எதிராக அந்த போராட்டத்தில் இல்லை. இந்தி போராட்டம் என்பது நேருவுக்கோ, காந்திக்கோ எதிரான போராட்டம் இல்லை. அது இந்தி மொழிக்கு எதிரானதும் இல்லை. நம்மை முட்டாள் எனக் கருதி, நம் மீது திணிக்கப்பட்டதற்கு எதிராகத்தான் போராடினோம். அந்தக் கோபம் பல போராட்டங்களுக்கு வித்திட்டது.

கே : போராட்டக்காரர்களிடம் அரசு பேசியிருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

இப்போதும் இந்த போராட்டத்தினர் முன்பு பேசியிருக்க முடியும். ராஜாஜி அதை ஒருமுறை செய்தார். எம்.ஜி.ஆர்.இருந்து இருந்தால் செய்து இருப்பார் என்றே நம்புகிறேன். இப்போதும் அவர் இருந்து இருந்தால், கூட்டத்திற்கு எதிராக கமிஷனர் அலுவலகம் முன்பு அமர்ந்து இருப்பார்.அரசாங்கத்திடமும் இது பற்றி பேசினேன். உடன் நாங்கள் வருகிறோம் என்றும் சொன்னேன். எத்தனை நடிகர்கள் வருவார்கள் என்று தெரியாது. எந்த கட்சியையும் சாராது தான் இந்த முடிவை எடுத்தேன். அங்கு இருக்கும் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் தான் பெரிதும் வருந்தினேன். காந்தியின் கனவை நிஜமாக்கியவர்கள் இவர்கள். நள்ளிரவு 12 மணிக்கு பெண்கள் எப்போது நிம்மதியாக சாலையில் நடக்க முடிகிறதோ, அது தான் நிஜமான சுதந்திரம் என்றார் காந்தி. நாம், பெண்கள், என் சகோதரர்களோடு அங்கு நள்ளிரவில் அமைதியாய் இருப்பதை காண முடிந்தது. அது டெல்லியிலும் சாத்தியமாகும். அரசு நிச்சயம் பேசி இருக்க வேண்டும். மாணவர்களின் வெற்றியை நாம் திருடிவிடக்கூடாது என என் நண்பர்களிடமும் சொன்னேன். அதனால் தான் நடிகர் சங்க போராட்டத்தில் இருந்து விலகி இருந்தேன். மேலும், நடிகர் சங்கத்தில் நான் ஒரு உறுப்பினர் அவ்வளவே. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.  நாசர், விஷால், கார்த்தி அதை திறம்பட எதிர்கொள்வார்கள். நான் பயந்ததால், அவர்களிடம் இருந்து விலகி இருப்பதாக சொல்வது தவறு. தற்போது, மீடியாவை சந்தித்து பேசுவதற்குத் தான் அஞ்ச வேண்டும். ஆனால், நான் அதை செய்து கொண்டு இருக்கிறேன். தமிழக முதல்வர் வந்து பேசியிருக்க வேண்டும்.

கே : நீங்கள் தலைவராக இவர்களை வழிநடத்த விரும்புகிறீர்களா?

ஆல்பர்ட் கேமஸீன் தத்துவத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன், "என் பின்னால் நடக்காதீர்கள்; என்னால் வழிநடத்த முடியாமல் போகலாம். என் முன்னால் நடக்காதீர்கள்; நான் உங்களை பின்தொடராது போகலாம். என்னோடு இணைந்து ஒரு நண்பராக நடக்க ஆரம்பியுங்கள்". இது ஒரு தலைமை இல்லாத கூட்டம் என கேலி பேசுகிறீர்கள் என்றால், இதில் இருக்கும் ஒழுங்குமுறையை பாருங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பிக்னிக் செல்லும் போது, உங்களால் மலையைக்கூட ஏற முடியும். ஆனால், அலுவலகத்தில், உங்களுக்கு சோம்பல் ஏற்படலாம். விருப்பத்தின் பெயரால், போராட்டத்துக்கு சென்றார்கள். அது அவர்களது தற்காலிக வீடாக இருந்தது. நான் நெகிழ்ந்து போனேன்.

 கூடுதல் கேள்வி, பதில்கள் விரைவில்...
 

படம்:சு.குமரேசன்