Published:Updated:

இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? #WeekendMovies

பா.ஜான்ஸன்
இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? #WeekendMovies
இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? #WeekendMovies

சிங்கம் 3. இந்தப் படம் சென்ற வருடமே வெளிவந்திருக்க வேண்டியது, ஆனால் தள்ளிப் போடப்பட்டு, இந்த வாரம் வெளிவருவதாக இருந்து, இப்போது மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இப்போது வரை வெளியாவது உறுதியாகியிருப்பது இந்த மூன்று படங்கள் தான். இதிலும் எது சேரும் எது விலகும் என்பது முதல் ஷோ பார்க்கும் வரை உறுதியாக சொல்ல முடியவில்லை. நிலைமை சீரானதும் அடுத்த வாரங்கள் நிறைய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

அதே கண்கள்:

அறிமுக இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா நடித்திருக்கும் படம் அதே கண்கள். கண் பார்வை இல்லாத கலையரசனுக்கு ஒரு விபத்து மூலம் திடீரென பார்வை கிடைக்கிறது. பார்வை இருக்கும் போது நடந்த விஷயம் ஒன்றைப் பற்றி அறிய அலைகிறார். அது என்ன? அதைக் கண்டுபிடித்தாரா என்பது போன்ற களத்தில் படம் பயணிக்கும் என படத்தின் டிரெய்லர் உணர்த்துகிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 

ரயீஸ்:

குஜராத்தின் போபட்டியாவாட் பகுதியில் வளர்ந்தவன் அப்துல் லத்தீஃப். தன் சிறுவயதிலேயே சூதாட்ட விடுதிகளில் மது ஊற்றிக் கொடுக்கும் சர்வராக வாழ்வை துவங்குகிறான். அதன் பின் கள்ளச்சாராய கடத்தலை துவங்கியவன் அதன் மூலம் பிரபலமாகிறான். சூதாட்டக் கூடம், ஹவாலா, நிலப் பஞ்சாயத்து, கொலை என வளர்ந்து ஆட்டிபடைத்தான். 1985ல் மும்பையின் பதன் கும்பலைச் சேர்ந்த அலாம்ஸெப் உடன் சேர்ந்து தனக்குப் போட்டியாக இருந்தவரை அழித்து பின்பு தாவூத் இப்ராஹிமின் உதவியுடன் அலாம்ஸெப்பையும் அழித்து, குஜராத்தின் அசைக்க முடியாத ஆளானான். 40 கொலை வழக்குகள், 50க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் வழக்குகள், தாவூத் இப்ராஹிமுடன் கூட்டு, 1993ல் மும்பை தொடர்குண்டு வெடிபில் தொடர்பு... என விரிகிறது லத்தீஃபின் க்ரைம் லிஸ்ட். 1997ல் சிறையிலிருந்து தப்ப முயன்ற லத்தீஃபை சுட்டுக் கொன்றது போலீஸ். இந்த லத்தீஃபின் சில அத்தியாயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படமே ரயீஸ். ஷாரூக் vs நவாஸுதீன் சித்திக் திருடன் போலீஸ் விளையாட்டு படத்தை சுவாரஸ்யமாக்கும் என நம்பலாம். படம் எப்போதும் போல் அல்லாமல் புதன்கிழமையே (ஜனவரி 25) வெளியாகிறது.

Raees Trailer:

காபில்:

பார்வையற்ற ஹீரோ, ஹீரோயின் இருவரும் காதலிக்கிறார்கள். பின்பு திருமணமும் நடக்கிறது. திடீரென ஹீரோயினுக்கு சிலரால் ஒரு பாதிப்பு ஏற்பட அவர்களை பழிவாங்க கிளம்புகிறான். யார் அவர்கள்? என்ன நடந்தது? பார்வை இல்லாமல் அந்த எதிரிகளை ஹீரோ வெல்கிறானா? இது தான் காபில் படத்தின் கதை. 1990ல் வெளியான அமெரிக்கப் படம் 'ப்ளைன்ட் ஃபுர்ரி' மற்றும் கொரியன் படமான ப்ரோக்கன் படங்களின் இன்ஸ்பிரேஷன் நிறைய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தபடி இருக்கிறன. ஹ்ரித்திக் ரோஷன், யாமி கௌதம் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பது 'ஜஸ்பா' மூலம் ஐஸ்வர்யா ராய் ரீ-என்ட்ரி படம் இயக்கிய சஞ்சய் குப்தா. இந்தப் படத்துக்கு இசையமைத்துதயாரித்திருக்கிறார் ராஜேஷ்ரோஷன். இந்தப் படமும் ஜனவரி 25 வெளியாகிறது. காபில் என்ற பெயரிலேயே தெலுங்கிலும், பலம் என்கிற பெயரில் தமிழிலும் டப் செய்யப்பட்டும் வெளியாகிறது. 

இந்த வாரம் இவ்வளவு தான், அடுத்த வாரம் சிங்கம் 3-யின் வேட்டை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம்!