Published:Updated:

அடேங்கப்பா... இத்தனை படங்களில் நடிக்கிறாரா ப்ரித்விராஜ்?

பா.ஜான்ஸன்
அடேங்கப்பா... இத்தனை படங்களில் நடிக்கிறாரா ப்ரித்விராஜ்?
அடேங்கப்பா... இத்தனை படங்களில் நடிக்கிறாரா ப்ரித்விராஜ்?

குறிப்பிட்ட நடிகருக்கு என சில நேரம் அமையும். வரிசையாக படங்கள் ஒப்பந்தம் ஆவது, அடுத்தடுத்து படங்கள் வெளியாவது என்பது மாதிரியான விஷயங்கள் நிகழும். உதாரணமாக சென்ற வருடம் விஜய் சேதுபதிக்கு அமைந்தது போல. இதுவே மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு ஒருமுறை அமைந்தது. வெற்றி, தோல்வி கணக்கில்லாமல் 2013ல் 12 படங்கள் வெளியானது. அடுத்தடுத்த வருடங்களில் அதை குறைத்துக் கொண்டார் என்றாலும் அந்த இடத்தை 2017ல் ப்ரித்விராஜ் பிடிப்பார் என கொஞ்சம் உறுதியாகவே சொல்லலாம். காரணம் அவர் நடிக்கும், அறிவித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை. அவை என்னென்ன படங்கள்?, எப்படி இருக்கும்? இதோ...

எஸ்ரா:

சென்ற வருடமே வெளியாக வேண்டிய படம், சில தாமதங்களால் இந்த வருட லிஸ்ட்டில் இணைந்திருக்கிறது. கி.மு 1941ல் ஆப்ரஹம் எஸ்ராவின் உடலில் இருந்து ஆன்மா பிரிந்துவிடுகிறது. அதன் ஆவி இப்போதும் உலவிக் கொண்டிருப்பதாக அந்த கிராமமே நம்புகிறது. அந்த கிராமத்துக்கு வரும் ப்ரித்விராஜுக்கும், ப்ரியா ஆனந்துக்கும் சில அமானுஷ்யங்கள் நிகழ்கிறது. அது எதனால்? யார் அந்த ஆப்ரஹாம் எஸ்ரா? என பல மர்மங்களை சொல்லும் படம் எஸ்ரா. ‛இந்தப் படம் மிக நேர்மையான ஹாரர் படமாக இருக்கும், மெது மெதுவாக உங்களைப் பயத்தின் உள்ளே கொண்டுவரும், 'ஓமன்' படம் போல...’ என எஸ்ரா பற்றி கூறியிருக்கிறார் ப்ரித்விராஜ். படம் பிப்ரவரி 10ல் வெளியாகிறது.

மை ஸ்டோரி: 

என்னு நின்டே மொய்தீன் படத்துக்குப் பிறகு ப்ரித்விராஜ், பார்வதி இணையும் படம். ஷங்கர் ராமகிருஷ்ணன் கதையை ‛மை ஸ்டோரி’யாக்கிக் கொண்டிருக்கிறார் ரோஷினி தினகர். ரோஷினி ஒரு ஆடைவடிவமைப்பாளரும் கூட. ப்ரித்விராஜ், பார்வதி ஜோடி என்பதால் ரொமான்டிக் ஸ்டோரியாக இருக்கும் என நினைத்தால் ஒரு வில்லன் கதாப்பாத்திரமும் இருப்பதால் எந்த ஜானராக இருக்கும் என கணிக்க முடியவில்லை. தற்போது படப்பிடிப்பு போர்சுகலில் நடந்து வருகிறது.

தியான்:

சகோதரர்களான இந்திரஜித், ப்ரித்விராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் படம். ரசிகன், இ அடுத்த காலத்து, லெஃப்ட் ரைட் லெஃப்ட் படங்களின் கதாசிரியரும், நடிகருமான முரளி கோபி (பிரேமம் களிப்பு பாடலை பாடியவர்) தான் இந்தப் படத்துக்கும் கதை. தியான் ஒரு பொலிடிகல் ட்ராமாவாக இருக்கும் என்கிறது படக்குழு. ஜியன் கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஏற்கெனவே படத்தின் ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டார்கள் விரைவில் அடுத்த ஷெட்யூலுக்காக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இணையவிருக்கிறார்கள்.

டெட்ராய்ட் க்ராசிங்:

இவிடே படத்துக்குப் பிறகு வெளிநாட்டு பின்னணியில் தயாராகவிருக்கும் ப்ரித்விராஜ் படம் ‛டெட்ராய்ட் க்ராசிங்’. அமெரிக்காவின் டெட்ராய்ட் மற்றும் மிசிகனில் உள்ள தமிழ் கேங்களைச் சுற்றி நிகழும் க்ரைம் ட்ராமாதான் படம். மலையாளம் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் தயாராகவிருக்கும் இப்படத்தை இயக்குவது நிர்மல் சகாதேவ். 

கர்ணன்:

கேரள 'லைலா மஜ்னு'வான காஞ்சனா மொய்தீன் காதலை 'என்னு நின்டே மொய்தீன்' படத்தில் பதிவு செய்தவர் ஆர்.எஸ்.விமல். அடுத்த படத்திற்காக கைகோத்திருப்பதும் முந்தைய படத்தில் நடித்த ப்ரித்விராஜுடன்தான். ஆனால் இம்முறை மிகப்பெரிய  உழைப்பிற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.விமல். மகாபாரதத்தை மையமாக வைத்து கர்ணனின் கதையைப் படமாக உருவாக்க இருக்கிறார்கள். பாகுபலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த செந்தில்குமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். கண்டிப்பாக மலையாளத் திரையுலகு இதுவரை செய்திராத அளவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படம் இருக்கும் என ஒட்டு மொத்த மல்லுவுட்டும் கூறுகிறது. படத்துக்கான வேலைகளை கவனிக்க ஒரு குழுவுடன் புறப்பட்டிருக்கிறார் ஆர்.எஸ்.விமல். தெலுங்கில் பாகுபலி போன்று மலையாளத்தில் கர்ணன் பேசப்படும் ஹிஸ்டாரிகல் எபிக்காக இருக்கும் என்கிறார்கள்.

ஆடு ஜீவிதம்:

பென்யமின் மலையாளத்தில் எழுதிய கேரள சாகித்ய அகாடமி விருது வென்ற 'ஆடு ஜீவிதம்' நாவலின் திரை வடிவம் தான் இந்தப் படம். நஜீப் முகமத் புதிதாக திருமணமானவன். நல்ல வேலை தேடி கல்ஃப் செல்பவன், பெரிய செல்வந்தர் மூலம் ஆடு, ஒட்டகம் மேய்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அடிமையாக்கப்படுகிறான். அங்கிருந்து அவன் தப்பி மீண்டும் இந்தியா வந்து சேர்வதே கதை. இப்படத்தை இயக்குவது ப்ளஸ்ஸி. 3டியில் உருவாகவிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ், இந்தியில் வெளியாகவிருக்கிறது.

ப்யூட்டிஃபுல் கேம் மற்றும் விமானம்:

இந்த இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பும், இதில் நடிக்க புதுமுகங்கள் தேர்வுக்கான அழைப்பும் விடப்பட்டிருக்கிறது. ஜமேஷ் இயக்கும் ‛ப்யூட்டிஃபுல் கேம்’ கால்பந்தாட்டத்தை மையமாக வைத்தும், பிரதீப் எம் நாயர் இயக்கும் ‛விமானம்’ ஒரு நிஜ சம்பவத்தைத் தழுவியும் உருவாகவிருக்கிறது. 

எழுத்தாளர் கமலா தாஸ் வாழ்க்கையை மையமாக வைத்து கமல் இயக்கும் படம் ஆமி. கமலாதாஸாக வித்யாபாலன் நடிக்கும் இப்படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் ப்ரித்விராஜ் இடம்பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு மோகன் லால் நடிப்பில் ப்ரித்விராஜ் இயக்கும் 'லூசிஃபர்' படமும் இருக்கிறது. இவற்றில் எஸ்ரா தவிர மற்றவை எப்போது வரும்? இந்த வருடமே வருமா? இடையில் எது கைவிடப்படும்? புதிதாக எது சேர்க்கப்படும் என்பதை ப்ரித்விராஜ் அறிவிக்கும் போதே நாம் அறிந்து கொள்ள முடியும்.

- பா.ஜான்ஸன்