உண்மையிலே விஜய்க்கு அந்தக் கெட்ட பழக்கம் இருக்கா?

`பைரவா' படத்தில் ‘இன்னைக்கு நிறைய பேர் கிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்குது... சொன்ன வார்த்தையை காப்பாத்துறது...'என சொல்லியிருப்பார் விஜய். அது படத்தில் வரும் ஒரு சாதாரண வசனம் என்றாலும், நிஜ வாழ்க்கையிலும் பல இடங்களில் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றியிருக்கிறார் விஜய். அவை...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் அடித்த படம் 'துப்பாக்கி'. அந்தப் படத்தில் இடம்பெறும் 'வெண்ணிலவே...' பாடலை மட்டும் சந்தோஷ் சிவனுக்கு பதிலாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன் சுப்ரமணியம். அப்போது நட்டியை அழைத்து 'கூடிய விரைவில் புதுமையான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன். அந்தப் படத்திற்கு நீங்கள் தான் ஒளிப்பதிவு' என சொல்லியிருக்கிறார் விஜய். சொன்னதைப்போலவே, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த 'புலி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு நட்டிக்கு வழங்கப்பட்டது. விஜய் நடித்த யூத் படத்தை ஒளிப்பதிவு செய்ததும் நடராஜன் சுப்ரமணியம் என்கிற நட்டிதான்.

விஜய்க்கு இருக்கும் கெட்ட பழக்கம்

'நண்பன்' படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் இயக்குநர் அட்லி. அப்போதே அட்லியிடம் 'நல்ல கன்டென்ட் வெச்சிருந்தீங்கன்னா எப்ப வேணும்னாலும் சொல்லுங்க, நாம பண்ணலாம்’ என சொல்லியிருக்கிறார் விஜய். 'ராஜா ராணி' ரிலீஸுக்கு பிறகு அட்லியும் 'தெறி' கதையைச் சொல்ல, 'மைண்ட் ப்ளோயிங்... பண்ணலாம்' என சொல்லியிருக்கிறார் விஜய். அதன் பிறகு 'தெறி' அடைந்த சக்ஸஸ் தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே...

 ஒரு சமயத்தில், ‘இனி கண்டிப்பாக மாதம் ஒருமுறை  ரசிகர்களை சந்திப்பேன்' என கூறியிருக்கிறார் 'இளையதளபதி' விஜய். அதேபோல், மாதம் ஒருமுறையாவது தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். சமயங்களில் வெளிநாடுகளுக்குச் செல்ல நேரிடும்போதும், அங்குள்ள தமிழ் ரசிகர்களைச் சந்தித்து பேசுவாராம். அந்தச் சந்திப்பில் விஜய்யின் படங்கள் குறித்து அவர்கள் சொல்லும் நிறை, குறைகளை கேட்டறிவாராம்.

'எனக்கு தெரியாத மொழிகளில் பேசி, அவ்வளவு ஈடுபாட்டோடு நடிக்க முடியாது' என சொல்லும் விஜய், பிற மொழிப் படங்களில் நடிக்க எவ்வளவோ வாய்ப்புகள் வந்திருந்தும் நடிக்க மறுத்துவிட்டார்.

சாந்தனு திருமணத்தில் விஜய்'

‛எனக்கும் என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க மட்டுமே தெரியும்' என சொல்வார் விஜய். பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ஒரு தீவிர விஜய் ரசிகர். எந்த அளவிற்கு என்றால் தனது திருமணத்தில் விஜய்தான் தாலி எடுத்துக் கொடுக்கவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதேபோல், சாந்தனுவின் திருமணத்திற்கு சீக்கிரமே வந்து தாலியை மணமகன் கையில் எடுத்துக் கொடுத்து, நீண்ட நேரம் மண்டபத்திலேயே இருந்து மணமக்களை ஆசீர்வதித்துச் சென்றார் விஜய்.

விஜய், சூர்யா இணைந்து நடித்த பிளாக் பஸ்டர் படம் 'ப்ரெண்ட்ஸ்'. இந்த படத்தை பிரபல மல்லுவுட் இயக்குநர் சித்திக் இயக்க அப்பச்சன் என்பவர் தயாரித்தார். அந்த சமயத்தில், தனது அடுத்த படத்தையும் அப்பச்சன் தயாரிப்பிலேயே நடித்துக்கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார் விஜய். ஆனால், அடுத்த நான்கைந்து ஆண்டுகளாக கால்ஷீட் கொடுக்கமுடியாத நெருக்கடியான சூழல் எழுந்துள்ளது. ஆனாலும், சொன்ன சொல் மறவாமல் அழகிய தமிழ் மகன் படத்தை அப்பச்சன் தயாரிக்க நடித்தார் விஜய். 

- ப.சூரியராஜ் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!