Published:Updated:

மிஸ்டர் ஷாரூக்கான்... நீங்க நல்லவரா... கெட்டவரா? - ரயீஸ் படம் எப்படி? #Raees

மிஸ்டர் ஷாரூக்கான்... நீங்க நல்லவரா... கெட்டவரா?  - ரயீஸ் படம் எப்படி? #Raees
மிஸ்டர் ஷாரூக்கான்... நீங்க நல்லவரா... கெட்டவரா? - ரயீஸ் படம் எப்படி? #Raees

மிஸ்டர் ஷாரூக்கான்... நீங்க நல்லவரா... கெட்டவரா? - ரயீஸ் படம் எப்படி? #Raees

ஷாரூக்கின் ரயீஸ் முதலில் பயோ பிக் என ஒரு பீதி கிளம்பியது. ரிலீஸ் நேரத்தில், இது அவர் பற்றிய படம் இல்லை எனப் பின்வாங்கிக் கொண்டு ரிலீஸ் ஆகியது ரயீஸ். இது யாரைப்பற்றிய படம்?

குஜராத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யும் டான் ஷாரூக். கேங்ஸ்டர். சின்ன வயதில் இருந்தே ரவுடிகளோடு பழகி, கள்ளச் சந்தையில் புகழ்பெற்று ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ-ஆகவும் ஆகிறார். முழுக்க முழுக்க  அரசியல்வாதிகளை கையில் போட்டுக்கொண்டு கொடிகட்டிப் பறக்கும் ஷாருக்கிற்கு சவாலாக வருகிறார் காவல்துறை அதிகாரி நவாசுதீன் சித்திக். அதன்பிறகு ஷாருக்கிற்கும், நவாசுதீன் சித்திக்கிற்கும் நடக்கும் சைலண்ட் மோதலும், வென்றது அதிகாரமா.. ஹீரோயிசமா என்பதுமே ரயீஸ் படத்தின் பார்த்துப் பழக்கப்பட்ட கதை.

சிறுவயதிலேயே கண்ணாடி அணிவதால் ‘பேட்டரி’ என்று அழைக்கப்படுவதில் கடும்கோபம் கொள்ளும் சிறுவனாக ஆரம்பிக்கிறது ஷாருக்கின் கதாபாத்திரம். மனிதர் கட்டுமஸ்தான உடம்பில் படத்தைச் சுமக்கிறார். ஹீரோயின் மஹிரா கானிடம் குழையும்போது உடம்பில் விறைப்பும், கண்களில் காதலும் என கெத்து காட்டுகிறார். ஸ்டைலிஷ் லுக் என்பதைத் தவிர்த்து படம் முழுவதும் ரஃப் அண்ட் டஃபாக வருகிறார். அதுவும் பேட்டரி என்று யாரும் அழைத்தால் அவர்களை சுக்குநூறாக்கும் காட்சிகளில்... மாஸ் பாஸ்! 

ஷாருக்கிற்கு இணையான வேடம் நவாசுதீன் சித்திக்கிற்கு. அறிமுகக் காட்சியில் சட்ட விரோதக் கும்பலைப் பிடித்து வைத்ததும், ‘அவங்கள ரிலீஸ் செய்யணும்’ என்று அதட்டும் முதலமைச்சரிடமே பேப்பரும் பேனாவும் கொடுத்து ‘எழுதிக் கொடுங்க சார்” என்று கூலாகச் சொல்லி கைதட்டல் அள்ளுகிறார். டிராஸ்ஃபருக்கு அஞ்சாத அதிகாரியாக வரும் இவர் சி.எம், மந்திரி, மேலதிகாரி, ஷாருக் என்று எவரிடமும் அசால்ட் காட்டும் மாடுலேஷனில் பேசுவது லைக்ஸ் அள்ளுகிறது.

ஹீரோயின் மஹிரா கான் கண்களால் காதல் செய்கிறார். ஷாருக்கும், நவாஸுதீனும் பார்ட்னர்ஷிப்பில் கலக்கிக் கொண்டிருக்க இவருக்கு ஸ்கோப் குறைவுதான். ஷாருக்கின் நண்பனாக வரும் முகமது ஜீஷன் அய்யூபிற்கு சொல்லிக் கொள்ளும்படியான வேடம். ஷாருக்கை கைது செய்ய, நவாஸுதின் வர, போலீஸ் அருகில் இருப்பதை  நண்பனுக்கு ஃபோனில் சங்கேதமாகத் தெரிவிக்கும் காட்சி.. ஆஹா!

பர்சானியா படத்திற்காக சிறந்த இயக்குநராக தேசியவிருது பெற்ற ராகுல் தோலக்கியாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது ரயீஸ். தாவூத் இப்ராஹிம் குழுவில் இருந்த, குஜராத்தின் அண்டர்வேர்ல்ட் டான் அப்துல் லத்தீப் என்பவரது கதைதான் இது என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு நடக்கும்போது அப்துல் லத்திப்பின் மகன் “எங்கப்பா கதையை எப்படி எடுக்கலாம்?” என்று கேட்டு நோட்டீஸெல்லாம் அனுப்பினார். எதற்காக இந்த அரதப்பழைய வழக்கமான டான் மசாலாவைத் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. படம் ஏற்கனவே பார்த்த பல படங்களில் சாயல்களிலேயே இருக்கிறது. 

ஒரு பாடலுக்கு வந்து புத்துணர்வூட்டுகிறார் சன்னி லியோன். பாடலும் ‘லைலா மெ(ய்ன்) லைலா’ என்ற சூப்பர் ஹிட் பாடல் வேறு. தியேட்டரில் ஷாருக்கிற்கு இணையாக கைதட்டல்கள் காதைப் பிளக்கிறது. ஒன்றிரண்டு பாடல்கள் தவிர, மற்றதெல்லாம் ஓவர்டோஸ். ஷாரூக்கானுக்கான கெத்து சீன்களுக்கு என ராம்சம்பத் கொடுத்திருக்கும் பின்னணி இசை செம மாஸ். சண்டைகள், ஷாரூக்கின் சில க்ளோஸ் அப்கள் தவிர ஒளிப்பதிவு மூலம் சுவாரஸ்யப்படுத்த எதாவது வேலை கொடுத்திருந்தால் மோகனன் பிரமாதப்படுத்தியிருப்பார்.

அண்டர்வேர்ல்ட் டான் பற்றிய படம் என்று அவர் மகனால் பிரச்னை, ஹீரோயின் பாகிஸ்தானி என்பதால் சிவசேனாவால் பிரச்னை என்று பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி வெளிவந்துள்ள இந்தப் படம் முழுமையான எண்டெர்டெயினராகவும் இல்லாமல், ஷாருக் ப்ராண்ட் ஹீரோயிஸ படமாகவும் இல்லாமல் தொய்வாக இருக்கிறது. படத்தின் நீளம் வேறு சோதிக்கிறது.

சட்ட விரோத செயல்கள் செய்யும் ஹீரோ என்றால் கண்டிப்பாக அவர் தன் ஏரியா மக்களுக்கு நல்லது செய்வார், பள்ளிக் குழந்தைகளுக்கு ரப்பர் வைத்த பென்சில் வாங்கித்தருவார், 'உங்களால தான் தம்பி.....' என யாராவது அவரைப் புகழ்வார்... அமீர் நடித்த டங்கல் போல, ஷாருக்கே இதற்கு முன் நடித்த டியர் ஜிந்தகி போல கொஞ்சம் பொறுப்பான படங்கள் வரும் போது அரதப் பழைய மேட்டர் ஒன்றை வைத்து மாஸ் காட்டுகிறேன் என ஷாரூக் கலெக்‌ஷனை மட்டும் அள்ளுவது வரவேற்கத்தக்கது இல்லை.  உண்மையில் இது மாஸ் மசாலா படமா? கேங்ஸ்டர், அண்டர்வேர்ல்ட் டான் என எந்த சாயம் பூசிக் கொண்டாலும் அதன் முழுமை படத்தில் இல்லை என்பது உண்மை. மாஸ் படமாகவும் இல்லாமல், க்ளாசிக் படமாகவும் அல்லாமல் அல்லாடுகிறது ரயீஸ். ஆனால், 120 ரூபாய் டிக்கெட் என்கிற கயிறால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்யும் கொடுமை நடக்காதது ஆறுதல்.  

அடுத்த கட்டுரைக்கு