Published:Updated:

''சினிமாவுக்கு நான் ஏன் நோ சொல்றேன் தெரியுமா..?'' - ’டப்ஸ்மாஷ்’ மிருணாளினி

''சினிமாவுக்கு நான் ஏன் நோ சொல்றேன் தெரியுமா..?'' - ’டப்ஸ்மாஷ்’ மிருணாளினி
''சினிமாவுக்கு நான் ஏன் நோ சொல்றேன் தெரியுமா..?'' - ’டப்ஸ்மாஷ்’ மிருணாளினி

டப்ஸ்மாஷ் க்வீன் மிருணாளினி ரவி பெங்களூர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். அஃபீஷியல் ஃபேஸ்புக் பேஜ் எல்லாம் வைத்துக் கொண்டு கலக்குகிறார். இரண்டே மாதத்தில் 50 டம்ஸ்மாஷுக்கு மேல் செய்திருக்கிறார். இவரது ரெமோ டப்ஸ்மாஷ் பட ப்ரொமோஷன் வரை பயன்படுத்தப்பட்ட வைரல் ஹிட் மெட்டீரியல். கொஞ்சநாளாகவே ஆஃப்லைனில் இருக்கும் இவர் சினிமாவில் நடிக்கப் போவதாய் ஏகப்பட்ட தகவல்கள். அப்படியா என்று விசாரித்தோம்;

”எப்படி இருக்கீங்க பெங்களூர் பொண்ணே?” என்று கேட்டால் “ஹலோ.. அப்பாம்மா ஊர் கடலூர்தான்ங்க. நான் படிச்சது வளர்ந்தெல்லாம்தான் பெங்களூர்” என்கிறார்.’’

“என்ன கொஞ்சநாளா அப்டேட்ஸ் காணோம்?” 

“நேரம் இருக்கறதில்லைங்க. அவ்வளவுதான். ஆஃபீஸ்ல வேலையே சரியா இருக்கு.”

“உங்க ஆஃபீஸ்ல நீங்க ஒரு டப்ஸ்மாஷ் ஸ்டார்னு தெரியுமா?”

“ஃப்ரெண்ட்ஸுக்கு தெரியும். மேனேஜர்ஸுக்கெல்லாம் தெரியாது. டிவி ஷோவுக்கு வர்றப்ப எல்லாம் கூட காய்ச்சல், தலைவலினு சொல்லிட்டுதான் போவேன். நான் வேலைல ரொம்ப சின்சியர் தெரியுமா?” 

“ஷூட்டிங்லாம் போக ஆரம்பிச்சுட்டீங்களா? ஃபோட்டோ ஷூட் ஃபோட்டோஸ்லாம் பார்த்தேனே”

“ஷூட்டிங்கா? நீங்க வேற.. சினிமா படம் எல்லாம் இல்லைங்க. கோவைல ஒரு பொட்டிக்-குக்கு ஃபோட்டோ ஷூட் கூப்டிருந்தாங்க. சேலை, பட்டுப்புடவைன்னு படங்கள் எடுக்கறதுதானேனு வீட்ல அதுக்கு ஓகே சொல்லிட்டாங்க. அப்ப எடுத்த படங்கள்தான்.”

“இணையத்துல நீங்க சினிமால நடிக்கறதா பேசப்படுதே..”

“ஆமாங்க... நானும் பார்த்தேன். ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியா நடிக்கறதா எதுலையோ ஷேர் பண்ணிருந்தாங்க. ஈட்டி பட டைரக்டர் ஆஃபீஸ்ல இருந்து அழைப்பு வந்தது உண்மை. ஆனா நான் இப்போதைக்கு நடிக்கலை.”

“வேற சில இயக்குநர்கள் படங்கள்ல நடிக்க உங்களுக்கு அழைப்பு வந்ததா உங்க நட்பு வட்டத்துல விசாரிச்சப்ப சொன்னாங்களே...” 

“ஆமா சார்.. டிமாண்டி காலனி டைரக்டர் அஜய் ஞானமுத்து சார் ஆஃபீஸ்ல இருந்து கூப்டிருந்தாங்க. பாலா சார் ஆஃபீஸ்ல இருந்து கூப்டிருந்தாங்க. பொதுவா எல்லாரும் கூப்பிடறப்பவே ‘நீங்க இப்ப நடிக்க அக்செப்ட் பண்ண மாட்டீங்கனு தெரியும்’னுதான் ஆரம்பிப்பாங்க. அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கு போல. எதுக்குமே ஓகே சொல்லலைங்க.”

“ஏன் சினிமா வாய்ப்புகளை மறுக்கறீங்க?”

“இப்ப என்ன அவசரம்னுதான். பொறுமையா பண்ணலாம்” என்றவர் யோசித்து “ரொம்ப சின்ன வயசுனு வீட்லயும் யோசிப்பாங்கள்ல? இப்போதைக்கு மியூசிக் ஆல்பம், ஃபோட்டோ ஷுட்னு ஒருநாள், ரெண்டு நாள்ல பண்ற விஷயங்கள்னா, வீட்ல ஓகே வாங்கிடறேன். நடிக்கத் தெரியுமானும் தெரியல. எக்ஸ்ப்ரஷன்ஸ் நல்லா இருக்குனு நண்பர்கள் சொல்றதுண்டு. ஆனா நடிப்புங்கறது வேற லெவல் அல்லவா?”

“ஒரு பேச்சுக்கு கேட்கறேன். நடிக்கலாம்னா யார் படம்னா உடனே ஓகே சொல்லுவீங்க?”

”நான் கௌதம் வாசுதேவ் மேனன் சாரோட பெரிய விசிறி. அச்சம் என்பது மடமையடாதான் கடைசியா பார்த்த படம். அடுத்து எனை நோக்கிப் பாயும் தோட்டாவுக்கு வெய்ட்டிங். அவர் படத்துல நடிக்கக் கூப்பிட்டா வீட்ல எப்படியாவது ஓகே வாங்கிடணும்னு தோணும். ஆனா அதெல்லாம் நடக்கணுமே!”

“இணையத்துல உங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கே..”

”இணையத்துல இருக்கற எல்லாருக்கும் பெரிய பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கறேன். என்னோட எந்த ஃபோட்டோ பார்த்தாலும் பாராட்டி கமெண்ட் போடறதுனு ஊக்குவிக்கறது அவங்கதான். மோசமான கமெண்ட்லாம் ஒண்ணு ரெண்டு இருந்தாலும், ஒப்பிடறப்போ அது ரொம்பவே கம்மி. எனக்கு வர்ற பாராட்டையெல்லாம் பார்த்து அப்பா அம்மா சந்தோஷம்தான் படுவாங்க. ‘நல்லா இருக்கு சிஸ்டர், அக்கா அப்டி தான் எல்லாரும் கூப்பிடுவாங்க. படிக்கறப்பவே சந்தோஷமா இருக்கும்.”

சிரித்துக் கொண்டே பேசி முடிக்கிறார் மிருளாளிணி!

-சத்ரியன்