Published:Updated:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் பாகம் 2 #VikatanAwards

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் பாகம் 2 #VikatanAwards
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் பாகம் 2 #VikatanAwards

திசைகள் எங்கும் நிறைந்திருக்கும் திறமைக்காரர்களைப் பாராட்டவும் பரவசப்படுத்தவும் விகடன் தவறியதில்லை. கடந்த ஒன்பது வருடங்களாக சினிமாவின் சாதனை நாயகர்களை  விருதுகொடுத்து பெருமைப்படுத்திவருகிறது. இந்த வருடத்திற்கான 10வது ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ புத்தகத்தில் மட்டும் அறிவிக்காமல், பிரம்மாண்ட மேடைக்கு திறமையாளர்களை அழைத்து விருதும் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறது. விரைவில் அந்நிகழ்ச்சி உங்கள் அபிமான சன் டிவியில் ஒளிபரப்பவும் தயாராகிவருகிறது. கடந்த 2016ம் ஆண்டிற்கான சினிமா விருதுகளின் பட்டியலின் இரண்டாம் பாகம் முன்னோட்டமாக உங்களுக்கு....! (முதல் பாகத்திற்கான லிங்க் கடைசியிலேயே இருக்கு பாஸ்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்

நைநிகா - தெறி

செம்ம்ம ‘தெறி’ பேபி! மாஸ் ஹீரோ படத்தில் ஹீரோயினுக்கே வேலை இல்லாதபோது, நைநிகா காட்டிய க்யூட் ரியாக்‌ஷன்ஸ் ‘தெறி’யில் அவ்வளவு அழகு. விஜய்யோடு பின்னியெடுத்த டான்ஸ், டீச்சரிடம் க்யூட் லந்து, அப்பாவிடம் மழலை புலம்பல்ஸ், இறுதிக் காட்சியில் ஆக்ரோஷமாகப் பேசும் ஆச்சர்யம் என அள்ளிக் கொஞ்சவைத்தது நைநிகாவின் நடிப்பு.

சிறந்த புதுமுக நடிகை

மடோனா செபாஸ்டியன் - காதலும் கடந்து போகும்

மலையாள ‘ப்ரேமம்' மடோனாவுக்கு, ‘கா.க.போ’ தமிழில் பிரமாதமான ஓப்பனிங். ஊரிலிருந்து வந்து பெருநகரத்தில் அறை எடுத்துத் தங்கி வாழும் ஐ.டி பெண்ணாக படம் முழுக்க மனசுக்குள் மழையடித்தார். தண்ணியடித்துவிட்டுப் பக்கத்து அறை இளைஞனோடு புலம்பித் தூங்குவது, காலையில் அவன் கூப்பிடக் கூப்பிட தெருவில் திரும்பிக்கூடப் பார்க்காமல் போவது, `நீங்க உண்மையிலேயே ரெளடியா? ஏன்னா, எப்பவும் உங்க முகத்துலதான் காயம் இருக்கு' என டென்ஷன் ஏற்றுவது, அப்பா-அம்மாவுக்குத் தெரியாமல் அசால்ட்டாக பீலா விடுவது என, இன்றைய கணினி யுவதியின் அச்சு நகல் காட்டியதற்காகவே மடோனாவுக்கு லைக்ஸ்… லைக்ஸ்!

சிறந்த புதுமுக நடிகர்

விஜய் குமார் - உறியடி

ந்த வருடம் கவனம் கலைத்த படைப்பு ‘உறியடி’. தானே இயக்கி நடிப்பது, சவால். அதையும் முதல் படத்திலேயே செய்வது, இன்னும் சவால். அதை தனது இயல்பான நடிப்பால் சாதித்துக்காட்டியவர் விஜய் குமார். நடிப்பு மிகையானால் வெத்து ஹீரோயிசமாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கும் கதாபாத்திரத்தில், மிக யதார்த்தமாக ஸ்கோர் செய்திருந்தார். கல்லூரி இளைஞனாகக் கனல் கோபம், நண்பனின் பிரிவில் காட்டும் தவிப்பு, ‘ஐ லவ்… லவ்… லப்பர் இருக்கா?’ எனும் ரொமான்ஸ், இறுதிக் காட்சியில் பக்குவமாகத் திட்டமிட்டுப் பழிவாங்கும் வேகம் என விஜய் குமார் காட்டிய வெரைட்டி, அவரது உயரங்களுக்கு வெல்கம் சொல்கிறது.

சிறந்த புதுமுக இயக்குநர்

பிரசாத் முருகேசன் - கிடாரி

`தம்பிக்கு இதுவா முதல் படம்?!' என ஆச்சர்யப்படுத்தியது, ‘கிடாரி’யில் பிரசாத்தின் உழைப்பு. ஒரு மண்ணின், மக்களின் வன்முறைப் பின்னணியை ரத்தமும் சதையுமாகத் திரையில் கொண்டுவந்ததில் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். படமாக்கலிலும் கதை சொல்லலிலும் காட்டியிருந்த மெனக்கெடல், இவரது நாளைய சினிமா குறித்த நம்பிக்கையை விதைத்தது. வன்முறையை வெறும் அடிதடியில் மட்டும் காட்சிப்படுத்தாமல், மனிதர்களின் ஆழ்மன உணர்வுகளின் வழியே கதையை நகர்த்தியதிலும், இவ்வளவு கனமான கதைக்களத்தைக் கையாண்டவிதத்திலும் பிரசாத் முருகேசன் தமிழ் சினிமாவுக்குப் புதிய… இனிய நம்பிக்கை.

சிறந்த நகைச்சுவை நடிகை

வினோதினி - ஆண்டவன் கட்டளை

க்கா, அண்ணி ஸ்பெஷல் வினோதினிக்கு, ‘ஆண்டவன் கட்டளை’யில் காமெடி வக்கீல் கேரக்டர். மிகச்சில காட்சிகளில் வந்தாலும், சின்னச்சின்ன பார்வையிலும் கணீர் குரலிலும் செம அப்ளாஸ் அள்ளினார். ‘எல்லாத்துக்கும் ஆள் இருக்கு’ எனக் கண்ணைக் காட்டி, தலையை ஆட்டும் அந்த ஸ்டைலே கிச்சுக்கிச்சு. ஜூனியர் வக்கீலாக சீனியரையே சுத்தியடித்து, ‘பாத்துக்கலாம்… பாத்துக்கலாம்’ என இவர் காட்டிய காமெடி பெர்ஃபாமன்ஸ் அவ்வளவு இயல்பு. தொண்டை கிழியக் கத்துவது, அதீத நடிப்பு என்ற க்ளிஷேக்கள் எல்லாம் இல்லாமல் சிரிக்கவைத்த வினோதினி, சிம்ப்ளி ஸ்வீட்!

சிறந்த நகைச்சுவை நடிகர்

யோகி பாபு - ஆண்டவன் கட்டளை

வர் திரையில் வந்தாலே தியேட்டர் தெறிக்கிறது. அசால்ட் உடல்மொழியும் அல்லுசில்லு வசனங்களுமாக, கிடைத்த வாய்ப்பில் எல்லாம் ஸ்கோர் அடிக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’யில் இயல்பாக இவர் அடித்தது சிரிப்பு செஞ்சுரி. ‘வெற்றிவேல் வீரவேல்… இன்னா கேள்வி வேணா கேள்’ என்று விசா இன்டர்வியூவுக்கு பில்டப் காட்டிப்போவது, தூதரக அதிகாரி முன் தும்மித் துடைத்துப் பம்முவது, ஜெயித்ததும் வெளியே வந்து ரிப்பீட் பில்டப் ஏற்றுவது எனப் படம் முழுக்கப் பின்னிப் பெடலெடுத்திருந்தார். சின்னச்சின்ன வசனங்களைக்கூட டைமிங்கிலும் மாடுலேஷனிலும் சிரிப்பு வெடியாக்கும் யோகி, தனித்துவமான காமெடியன். கலக்குங்க பாஸ்!

சிறந்த குணச்சித்திர நடிகை

பூஜா தேவரையா - குற்றமே தண்டனை

நீளமான வசனங்களோ, நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிச் சூழல்களோ இல்லை. அவ்வப்போது நாயகனை ஏக்கப் பார்வையோடு கடந்துபோகும் வாய்ப்பு மட்டும்தான் ‘குற்றமே தண்டனை’யில் பூஜாவுக்கு. ஆனால், அவரது உடல்மொழியே அவ்வளவு அபாரமாகப் பேசியது. வருங்காலம் குறித்த அச்சத்தையும் காதல் அரவணைப்புக்கான ஏக்கத்தையும் அலைபாயும் அந்தக் கண்களே அத்தனை வலிமையாக வெளிப்படுத்தின. கீழ் மத்தியதரவர்க்கப் பெண்ணின் வேதனைப் பக்கங்களை, வாழ்வியல் சிக்கல்களை கண் முன் விரித்த பூஜா தேவரையா, தமிழ் சினிமாவுக்கு நல்வரவு.

சிறந்த குணச்சித்திர நடிகர்

பி.சமுத்திரக்கனி - விசாரணை

மகாலத்தில் நேர்மையாகப் பணியாற்றத் துடிக்கும் ஒரு காவல் அதிகாரியின் மனப் போராட்டத்தை, ‘விசாரணை’யில் வெகு இயல்பாக உணரவைத்திருக்கிறார் கனி. அறத்தின் வழியில் நிற்பதா அல்லது அதிகாரத்துக்கான அடிவருடியாக  இருப்பதா என்ற ஒரு காவல் துறை அதிகாரியின் நிதர்சனங்களை உடல்மொழி, வசனம், பார்வை என அனைத்திலும் கடத்தியது கனியின் பெர்ஃபாமன்ஸ். நீதிமன்றத்தில் துடிப்பாகப் பேசி அப்பாவிகளை மீட்கும்போதும், பின்னால் அவர்களையே அதிகார ஏவலுக்குப் பலிபோடத் தயாராகி குற்றஉணர்ச்சியில் குமுறுவதுமாக… ஹேட்ஸ் ஆஃப் கனி!

சிறந்த வில்லி

விஜி - வெற்றிவேல்

காத்திருந்து பழிவாங்கிக் கழுத்தறுக்கும் வில்லியாக மிரட்டல் விஜி. தமிழ் சினிமாவின் கிராமத்து அம்மா கதாபாத்திரங்கள், நாம் பார்த்துப் பழகிய வார்ப்புகள். இருப்பினும், ‘மதயானைக்கூட்ட’த்தில் வித்தியாசமான கிராமத்து அம்மாவாக தரிசனம் காட்டிய விஜி, ‘வெற்றிவேல்’ படத்தில் வன்மமும் சூழ்ச்சியும் நிறைந்த வில்லி அம்மாவாகக் கலவரப்படுத்தினார். மண்ணை வாரி இறைத்துச் சாபமிடும் காட்சியில் தொடங்கும் விஜியின் வன்மம், படமெடுத்து ஆடும் பாம்பைப்போல படம் முழுக்க வெவ்வேறு பரிமாணங்களில் விஸ்வரூபம் எடுக்கும். கிராமத்துப் பெரிய மனிதரான தன் அண்ணன் பிரபுவையே ஆள்வைத்துக் கடத்தி மிரட்டுவது, சசிகுமாரின் காதலைப் பிரிக்க சகுனி வேலை பார்ப்பது என வில்லத்தனத்தில் உச்சம் தொட்டார் விஜி.

சிறந்த வில்லன்

வேல ராமமூர்த்தி - கிடாரி

ள்ளே கோழை, வெளியே வீரன் என ஒற்றை உடலில் இரட்டை வேடம் சுமக்கும் கனமான கதாபாத்திரத்தில் வெளுத்தெடுத்தார் வேலா. சதித்திட்டம் தீட்டிக்கொண்டே இருக்கும் தந்திர மனதும், பெற்ற மகனையே போட்டுத்தள்ளும் அதிகார வெறியுமான கொம்பையா பாண்டியனை,  இவரது கண்களே அபாரமாக வெளிப்படுத்தின. நம்புகிறவனுக்கு அன்பு முகமும், நம்ப முடியாதவனைக் கழுத்தறுக்கும் குணமுமாக இவர் காட்டியது வெரைட்டி வில்லத்தனம். இளவயதில் தொடங்கும் முதுகில் குத்தும் துரோகக் குணம், இறுதி வரை குறையாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும்போதும் கண்களில் கொப்புளிப்பது பிரமாதம்.

சிறந்த நடிகை

ரித்திகா சிங் - இறுதிச்சுற்று

ரிங்கில் மட்டும் அல்ல, அதற்கு வெளியேயும் நாக்அவுட் கொடுத்த சக்சஸ்ஃபுல் சண்டைக்காரி ரித்திகா சிங். அடக்க முடியாத ஜல்லிக்கட்டுக் காளை போல சீறிப்பாயும் கோபம், எதற்கும் வளைந்து கொடுக்காத கம்பீரக் கெத்து, `வா மச்சானே...' பாடலில் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடும் கூத்து எனக் குறும்புக்காரி மதி, இறுதிச்சுற்றின்  இன்க்ரெடிபிள் வின்னர். நிஜமான குத்துச்சண்டை வீராங்கனை என்பது கூடுதல் பலமாக இருக்க, முதல் படம் எனச் சொல்லவே முடியாத முத்திரை நடிப்பு. அக்காவுக்காகத் துடிப்பது, மாதவன் மீதான காதலை மறைத்துக்கொண்டு சிலிர்ப்பது, பாக்ஸிங் ரிங்கில் நாக்அவுட் பன்ச் கொடுத்து வெடிப்பது என உணர்வுகளைக் கச்சிதமாகக் கடத்திய ரித்திகா, தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அபார வரவு.

சிறந்த நடிகர்

ரஜினிகாந்த் - கபாலி

25 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியைச் சந்திக்கக் காத்திருக்கும் நாயகன், இன்னும் ஓர் இரவைக் கடந்தாக வேண்டும். மலேசியாவுக்கே மரண பயம் காட்டும் மாஃபியா தலைவன். ஆனால், தூய நரையிலும் காதல் வழியக் கசிந்து தவிக்கிறான். ஆயிரம் சொற்கள் கடத்த முடியாத அந்த இரவின் அடர்த்தியை, ரஜினிகாந்தின் சின்னச்சின்ன அசைவுகளும் முகபாவனைகளும் உடல்மொழியும் அநாயாசமாகக் கடத்திச் சென்றன. இளமையைத் தொலைத்துவிட்ட காதலன், ஆண்டுகள் கடந்தும் பாதுகாத்துவைத்திருக்கும் தீராக்காதலை மனைவியிடம் வெளிப்படுத்தும் காட்சியில், ரஜினி வெளிப்படுத்திய ரொமான்ஸ், தமிழ் சினிமாவின் அபூர்வ அற்புதம். மகளின் அணைப்பிலும், மனைவியைத் தேடும் தவிப்பிலும், எதிரிகளின் மீதான கோப நெருப்பிலும் ரஜினி `கபாலி'யாகவே காட்சியளித்தார். ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக வீரதுரந்திரனின் சீற்றம், காணும் குழந்தைகளை எல்லாம் மகளாகப் பார்க்கும் கருணை, ஒரு சொடக்கில் தெறிக்கும் மாஸ்… என `கபாலி' காட்டிய எக்ஸ்பிரஷன்ஸ் அத்தனையும் நெருப்புடா!

சிறந்த இயக்குநர்

வெற்றி மாறன் - விசாரணை

நான்கு சுவர்களுக்குள் சிக்கிக்கொள்ளும் நான்கு அப்பாவிகளுக்கு நேரும் அவலமும் துயரமுமே சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவல். வணிக சினிமாவாக மாற்றக்கூடிய எந்தவித முகாந்திரமும் இல்லாத வலி நிறைந்த வாழ்வு அது. அப்படி ஒரு படைப்பை சினிமாவாக்க நினைத்த வெற்றி மாறனின் ஆர்வம், தமிழ் சினிமாவுக்கே அத்தியாவசியமானது. அதிகாரத்தின் சட்டகங்களுக்குள் சிக்கிக்கொண்ட மனிதர்களில் ஒருவனாக பார்வையாளனையும் மாற்றிவிடும் லாகவம், வெற்றி மாறனின் திரைத்திறமைக்கு சாட்சி. இறுதிக் காட்சியில் சதுப்புநிலப் பகுதியில் வேட்டை நாய்களைப் போல் துரத்தும் காவலர்களுக்கு நடுவில் படம் பார்த்துக்கொண்டிருந்த நாமும் பதற்றத்தோடு மறைந்து இருந்தோம். ரத்தவிளாறாக தினேஷ் அடிவாங்கும் காட்சியில், நம் முதுகிலும் தோளிலும் சில செதில்கள் உரிந்து விழுந்தன. அவசிய அரசியலையும் எப்போதைக்குமான மனிதத்தையும் காட்சிமொழியில் கடத்திக்காட்டிய வெற்றி மாறன், தமிழ்த் திரையின் தவிர்க்க இயலாக் கலைஞன்.

சிறந்த படம்

விசாரணை

ம் காலத்தின் மனிதஉரிமை மீறல்களை, தமிழ்த் திரையில் இதற்கு முன் இவ்வளவு அழுத்தமாக எவரும் பதித்தது கிடையாது. எளிய மனிதர்கள், எப்படி எல்லாம் அதிகாரத்தின் கொடுங்கரங்களுக்குப் பலியாகிறார்கள் என்பதைப் பதறப்பதறச் சொல்லி, ஜனநாயகத்தின் போலி முகத்தைக் கூண்டிலேற்றியது ‘விசாரணை’. காவல் துறையின் அத்துமீறல்கள், போலி என்கவுன்ட்டர்கள், லாக்கப் படுகொலைகள் என  ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் பின்னிக்கிடக்கும் அரசு அதிகாரச் சதிகளை, திரையில் வெளிச்சமிட்டுக் காட்டிய நோக்கமும் உழைப்பும் வணக்கத்துக்குரியவை. ஆதார் கார்டுகள் இல்லாத அடையாளமற்றவர்களின் வாழ்வைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியதில் தொடங்கி, உண்மையின் வலி நிறைந்த குரலை உரக்கப் பதிவுசெய்தது வரை ‘விசாரணை’ தமிழ் சினிமாவுக்கான வரம்... உரம்… அறம்!

எஸ்.எஸ்.வாசன் விருது

கமல்ஹாசன்

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா தத்தெடுத்துக்கொண்ட சின்னஞ்சிறுவன், பிறகு திரைக்கடலில் மூழ்கி முத்தெடுத்துப் பெருங்கலைஞன் ஆனது இந்திய சினிமாவுக்கான பெருமித வரலாறு. சிறகுகள் வலிக்க வலிக்க இவர் அடைய முயற்சித்த உயரங்கள், தனி மனிதனுக்கானவை அல்ல; தமிழ் சினிமாவுக்கானவை. வெற்றிகளைத் தலைக்கு ஏற்றாமல், தோல்விகளைப் பாடங்களாக வைத்து ஓயாமல் உழைத்து இவர் இட்ட உரத்தில் முளைத்துப் பூத்திருக்கின்றன மூன்று தலைமுறைகள். புதிய புதிய முயற்சிகள், உலகத் தொழில்நுட்பங்களைத் தேடித் திரியும் தாகம், நடிப்பின் எல்லைகளை உடைத்தெறியத் துடிக்கும் அடங்காத மோகம், ஒவ்வொரு சினிமாவிலும் ஒவ்வொரு பிறவி எடுக்கும் ஆச்சர்ய வேகம் என கமல்ஹாசன் ஓர் அபூர்வக் கலைஞன். தனது கண்ணீரையும் புன்னகையையுமே கலையாக்கிக்கொண்ட பயணம்  இவருடையது. நேற்றில் நிஜம் கற்று, இன்றில் விஸ்வரூபம் பெற்று நாளையோடு போட்டிபோடும் சளைக்காத உலக சினிமா சாமுராயைக் கௌரவிப்பதில் ஆனந்த விகடன் பெருமைகொள்கிறது.

​​​​​

அடுத்த கட்டுரைக்கு