தந்திரா.. களவாணி.. குட்டிக் காட்டேரி... கூட்டணி எப்படி? - 'அதே கண்கள்' விமர்சனம்

டாப் ஹீரோ, ஹீரோயீன் கால்ஷீட், பெரிய பேனர், டாப் டெக்னீஷியன்கள், மரண ஹிட் பாடல்கள்,  பரபர விளம்பரங்கள் இதெல்லாம் தேவையில்லை. நல்ல கதையும், தெளிவான படமாக்கலும் இருந்தால் நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம் என்று ரசிகர்களைச் சொல்ல வைத்திருக்கிற இன்னொரு படம் அதே கண்கள்.

அதே கண்கள்

ஹீரோ வருணுக்கு (கலையரசன்) 15 வயதில் வந்த உடல்நல பிரச்னையால் கண் பார்வை பறிபோகிறது. உணவகம் வைத்திருக்கும் அவர் மீது பத்திரிகையாளரான சாதனாவுக்கு (ஜனனி) காதல். கலையரசனுக்கு திடீரென ஒரு நாள் தீபாவின் (ஷிவதா) அறிமுகம் கிடைக்கிறது. பின் அது காதலாகவும் மாறுகிறது. எதிர்பாராத விதமாக கலையரசனுக்கு விபத்து ஏற்பட அந்த சிகிச்சையோடு பார்வை கிடைப்பதற்கான சிகிச்சையும் நடந்து பார்வை பெறுகிறார். விழித்துப் பார்க்கையில் ஷிவதாவைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சில நாட்கள் கழித்து கலையரசனுக்கும் ஜனனிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது ஷிவதா பற்றிய தகவல் கிடைக்கிறது. அவரைத் தேடிப்போகிறார் கலையரசன். ஷிவதாவுக்கும், அவரைத் தேடிப்போகும் கலையரசனுக்கும் என்ன ஆகிறது என்பதை ஸ்பீடான திரைக்கதையில் சொல்லியிருக்கும் படம் அதே கண்கள்.  

மிக எளிமையான களத்தில் விறுவிறுப்பு சேர்த்த விதத்தில் அறிமுகப் படத்திலேயே கவனம் பெறுகிறார் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன். பார்வையற்றவராக கலையரசன் வரும் முற்பாதி முழுவதும் அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களை, ஒலிகளால் அமைத்திருப்பது ‘அட’ போட வைக்கிறது. கூடவே பெர்ஃப்யூம் வாசனைகளை அவர் உணர்வதாய் காட்டிய இடங்களையும் சொல்லலாம். இந்த டீட்டெய்லிங் படம் முழுவதுமே தெரிகிறது.

  

பார்வையற்றவராக வரும் கலையரசன் நடிப்பு ஓ.கே. இரண்டு நாயகிகளுடன் நடிக்கும் வாய்ப்பிலும் வித்தியாசத்தைக் காண்பித்திருக்கிறார். ஜனனியை நண்பியாகவும், ஷிவதாவைக் காதலியாகவும் கலையரசன் உணர்வதை காட்சிகளால் இயக்குநர் அமைக்க, தன் உடல்மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் கலையரசன். பார்வை தெரிந்த பின்னும், வெளிச்சத்தைப் பார்க்கும்போதெல்லாம் கண்களைச் சுருக்குவது... வெல்டன் ப்ரோ!

இந்தக் கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்னதற்காகவே ஜனனிக்கு வெரிகுட் சொல்லலாம். இன்னொரு நாயகியான ஷிவதாவைச் சுற்றியே படமும், நாயகனும் நகர்ந்து கொண்டிருந்தாலும் தன் கதாபாத்திரத்திற்குண்டான நியாயத்தை இயல்பாகக் கொண்டு சென்றிருக்கிறார். ‘உனக்கு இன்னமும் அவதான் பிடிச்சிருக்குன்னா... இட்ஸ் ஓகே. நாம ஃப்ரெண்ட்ஸாவே தொடரலாம்’ என்று தீர்க்கமாகச் சொல்லும் அவரது கதாபாத்திர அமைப்பு, தெளிவான முடிவெடுக்கும் இளைஞர்களின் குரலாய் இருக்கிறது. குடும்ப நண்பியாய், ஜர்னலிஸ்டாய், ஒருதலைக்காதலியாய், மனைவியாய் என்று படத்தில் இவருக்கு பல பரிமாணங்கள். 

ஷிவதா! எங்கம்மா இருந்தீங்க இவ்ளோ நாள் என்று கேட்க வைக்கிறார். நெடுஞ்சாலை படத்தின் ஹீரோயினுக்கு (அந்த இளநீர் - ஸ்ட்ரா ஸ்டில் ஞாபகம் இருக்கிறதா?) இதில் லைஃப் டைம் கேரக்டர். பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ஆண்கள் மீதான வெறுப்பை, அந்த நகைக்கடைக் காட்சியில் கண்களாலேயே காட்டுகிறார். காதல், சோகம், அடிதடி என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து மிரட்டியிருக்கிறார். காரில் செல்லும்போது ‘பின்னாடி இருக்கற பேக் எடு’ என்று கூட்டாளியிடம் சொல்லி, அவர் செய்யும் செயல்... ப்பா! சரியான எதிர்காலம் இருக்கு பொண்ணே!

 

ஆக்‌ஷனுக்கு ஷிவதா என்றால், காமெடிக்கு பாலசரவணன். ‘ஒனக்கு டீ சொல்லாதது தப்புதான்.. போய் குடிச்சுட்டுப் போ’ என்பதில் தொடங்கி ‘நீங்க டிவிலலாம் வருவீங்க.. உங்களால முடியும்’ என்று கலையரசன் தூபம் போட்டதும் தொப்பியை விறைப்பாய் மாட்டிக்கொண்டு கெத்தாக நிற்பது வரை.. நின்னுட்டீங்க ப்ரோ. பைக்காரனிடம் கண்டபடி திட்டு வாங்கும் போது கொடுக்கும் ரியாக்‌ஷன்களுக்கு அப்ளாஸ் பறக்கிறது. அந்த செல்போன் கடைக்கார அல்போன்ஸாக வரும் அப்துலும் கவனிக்கத்தக்க வரவு.

ஷிவதாவுக்கு கொடுக்கும் அந்த விசில் சவுண்ட் திரும்பத் திரும்ப கேட்க வைக்கிறதென்றால்... அவர் கேரக்டருக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கும் ‘அடியே நீ களவாணி’ பாடல் இன்னொரு சரசர சாரக்காத்து லெவல். தந்திரா.. தந்திரா... தந்திரா என்று இன்னமும் காதில் ஒலிக்கிறது லியோனார்ட் அடித்த விசிலுடன். அழகான சதிகாரி அடங்காப்பிடாரி என்று பெண்ணைப் பற்றிய பாடலை அனுராதா என்ற பெண் கவிஞரை வைத்தே எழுத வைத்திருக்கிறார் ஜிப்ரான்! சபாஷ் சாரே! உமாதேவி, பார்வதி, அனுராதா என்று இந்தப் படத்திற்கு பாடல் எழுதிய மூவருமே பெண் கவிஞர்கள் என்பது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தகவல்! குறைந்த பட்ஜெட் படம் என்பதை எந்த இடத்திலும் காட்டக் கூடாது என உழைத்திருக்கிறது ரவிவர்மன் நீலமேகத்தின் கேமிரா.

படத்தின் எதிர்மறை கதாபாத்திரம் யார் என ஆடியன்ஸுக்கு தெரிந்த பின்னும் அதை வைத்து கதையில் கொஞ்சம் விளையாடுவது, நடந்த சம்பவங்களுக்கான ஃப்ளாஷ்பேக் என சில இடங்களில் அலுப்பு. பால சரவணன் பிற்பாதி முழுவதும் வருகிறார் எனும்போது இன்னும் காமெடிக்கு பலம் சேர்த்திருக்கலாம். ஸ்பீடான பிற்பாதியில் கவனம் செலுத்திய அளவு முதல்பாதிக்கு மெனக்கெடவில்லையோ எனத் தோன்றுகிறது. யோசிக்காமல் ஒன்றிரண்டு பாடல்களுக்கு கத்திரி காட்டியிருக்கலாம். அறிமுக குழாம் என்று வரவேற்றாலும், த்ரில் படங்களுக்கான டெம்போ படம் முழுக்க இல்லை என்பது 'note the point' யுவர் ஹானர் !   

ஸ்கிரிப்ட்டை நம்பி களம் இறங்கியிருக்கும் ரோஹின் வெங்கடேசனுக்கு கோடம்பாக்கம் ஆதரவு ஹைஃபை தந்ததில் ஆச்சர்யம் இல்லை. கிடைத்த வாய்ப்பில் கில்லி ஆடியிருக்கிறார். ட்விஸ்ட்கள் கொண்ட கதை, அதை நேர்த்தியாய் சொல்லும் திரைக்கதை, சேதாரம் இல்லாத காஸ்டிங் என ஷூட்டிங்குக்கு முந்தைய முனைப்புகளிலேயே முத்திரை பதித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!