Published:Updated:

‘நட்புடன்’ சசிகுமார்... பார்பி கேர்ள் தமன்னா... - விகடன் விருதுகள் ரெட் கார்ப்பெட் மொமண்ட்ஸ்! #VikatanCinemaAwards

‘நட்புடன்’ சசிகுமார்... பார்பி கேர்ள் தமன்னா... - விகடன் விருதுகள் ரெட் கார்ப்பெட் மொமண்ட்ஸ்! #VikatanCinemaAwards
‘நட்புடன்’ சசிகுமார்... பார்பி கேர்ள் தமன்னா... - விகடன் விருதுகள் ரெட் கார்ப்பெட் மொமண்ட்ஸ்! #VikatanCinemaAwards

சிறப்பாக நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வின் ஹைலைட்டாக அமைந்திருந்தது ரெட் கார்ப்பெட் வரவேற்பு. முகம் நிறைந்த சிரிப்போடும், அட்டகாச உடைகளோடும் வரிசைகட்டி வந்தார்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள். தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் வந்த விஐபி களை பேட்டி காண, அது யூட்யூபில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. கலாய்களும், கேலிகளும், கொஞ்சம் சீரியஸ் உணர்ச்சிகளுமாய் களைகட்டியிருந்தது ரெட் கார்ப்பெட் ஏரியா...


 

"சூயஸ் கால்வாய்க்கு கிழக்கே, தெற்காசியாவில் இருந்த ஒரே ஸ்டூடியோன்னா... அது ஜெமினி தான். அதை உருவாக்கிய பெருமைக்குரியர் எஸ்.எஸ். வாசன் அவர்கள்  1926யில் வைத்தியநாதன் என்பவரிடம் "ஆனந்த விகடன்" என்ற 8 எழுத்துக்களுக்கு, எழுத்துக்கு 25 ரூபாய் என்ற வீதத்தில் 200ரூபாய் கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிகை 90 ஆண்டுகளை எட்டியுள்ளது. வாழ்த்துக்கள்..." என்று தன் பாணியில் பேசி அசத்தினார் தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் சிவக்குமார். 

வந்த நட்சத்திரங்கள் அனைவரும் கண்ணாடி டேபிளில் தங்கள் கையெழுத்துக்களை இட்டனர். சசிகுமார் வந்த போது, அவர் "நட்புடன் சசிகுமார்..." என்று எழுத, ஜெயச்சந்திரனோ "கையெழுத்தில் கூட நட்பை விட மாட்டேங்கிறாரே..." என்று சசிகுமாரை கலாய்க்க, அவரோ..." ஏன்யா..." என்றபடி தன் ஸ்டைலில் நான் - ஸ்டாப் சிரிப்பு சிரிக்க... ரெட் கார்ப்பெட் ஏரியாவே களைகட்டியது.

"பல ஆண்டுகளாக என்னோட மனசுல பதிஞ்சுப் போன ஒரு கதாபாத்திரம் ஆனந்த விகடனின் அந்த உச்சிக் குடுமி தாத்தா...இன்னும் பத்தாண்டுகளில் அவருக்கு 100 வயசாகப் போகுது. அதையும் நான் பார்த்து வாழ்த்துவேன். நூறாண்டுகளைக் கடந்து இன்னும் பல ஆண்டுகள் ஆனந்த விகடன் சிறப்பாக வாழ வேண்டும்" என்று வாழ்த்தினார் நாசர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட டீ ஷர்ட்டில் வந்திருந்த சமுத்திரகனி " விகடன் நான் வளர்ந்த இடம்... இது எனக்குப் புதுசு இல்ல... ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும், தமிழ் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்..." என்று தன் உணர்வுகளை வார்த்தைகளாய் சொல்லி நகர்ந்தார். 

இப்படியாக சின்ன சின்ன அழகான சம்பவங்களால் அழகடைந்திருந்தது ரெட் கார்ப்பெட். அதில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார் ஜெயச்சந்திரன்...

" விகடன்ல எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது ரொம்பவே சந்தோஷமான விஷயமாக இருந்தது. ஒரு பார்பி பொம்மை போல தமன்னா அந்த ரெட்கார்ப்பெட்ல நடந்து வந்தாங்க. அவங்க டிரெஸ்ஸ யாரும் மிதிச்சிடாம இருக்கணுங்கறதுக்காகவே மூணு பேர் தனி பாதுகாப்பு கொடுத்தாங்க... அந்தளவுக்கு அவங்களோட டிரெஸ் இருந்தது. அதே மாதிரி சசிகுமார் சாராட சேர்ந்து கலாட்டா செய்தது, பாரதிராஜா சார் கிட்ட அவர் ஸ்டைல்லயே பேசி மைக்ல பைட் வாங்கலாம்ணு பார்த்ததெல்லாம் செம அனுபவம். ஆனா அவரு ‘நான் மேடையில தான் பேசுவேன்’னு சொல்லி என்னைக் கலாய்ச்சுட்டுப் போயிட்டாரு.

விஜய் சார இதுவரைக்கும் இவ்வளவு ஸ்மார்ட்டா நிச்சயம் யாருமே பார்த்திருக்க முடியாது. அவரோட இந்த சூப்பர் ஸ்டைல் முதன்முதல்ல விகடன் ரெட் கார்ப்பெட்ல ரிவீல் ஆனதுங்குறது ஹைலைட்டான விஷயம். அதே மாதிரி தான்... சூப்பர் ஸ்டார். முதல்ல அவர் வர்றத பார்த்து அப்படியே மெய் மறந்து நின்னுட்டேன்... நான் சுதாரிக்குறதுக்குள்ள புயல் வேகத்துல அப்படியே க்ராஸ்  பண்ணிப் போயிட்டாரு. யாருங்க சொன்னா அவருக்கு உடம்பு சரியில்லைன்னு... சத்தியமா அவரு வேகம் சான்ஸே இல்ல...

இப்படி அட்டகாசமா ஒரு பக்கம் ரெட்கார்ப்பெட் நடந்திருந்தாலும் எனக்கு சில நெகிழ்ச்சியான விஷயங்கள் இதில் இருந்தது. பிரபு சார்கிட்ட நான் கேள்வி கேட்க மைக்க நீட்டுனா... அவர் என்ன மேலும், கீழுமா பார்த்துட்டு... "ஹே... நான் உன்னோட பெரிய ஃபேன். டிவியில தொடர்ந்து உன்னோட நிகழ்ச்சிகள நான் பார்த்துட்டு வர்றேன்..." என்று என்னை அவ்வளவு அன்பா பாராட்டியத என்னால மறக்கவே முடியாது. அதே மாதிரி சிவகார்த்திகேயன் மைக், கேமரா, ரெட்கார்ப்பெட் எல்லாத்தையும் மறந்து அவ்வளவு பாசமா "அண்ணே நல்லாயிருக்கீங்களா?"ன்னு கேட்டது என்னை ரொம்பவே உணர்ச்சிவயப் படவச்சது...

எல்லாத்துக்கும் மேல... இன்னிக்கு உலகையே திரும்பிப் பார்க்க வச்ச இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தோட வலிமைய ரெட்கார்பெட்லயே நான் பார்த்தேன். தமிழகத்தோட ஒரு முக்கியமான விருது நிகழ்ச்சிக்கு வெற்றிமாறன், சமுத்திரக்கனின்னு விசாரணை டீம்ல பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் கொண்ட டீ ஷர்ட்ல வந்தது மிக முக்கிய விஷயம். கிடைக்கும் களங்களில் தங்கள் குரலை ஒலிக்க செய்யணும்ங்குற அவங்களோட எண்ணம்... சிறப்பு..." என்று தன் அனுபவங்களை உணர்ச்சிகள் மேலோங்க சொல்லி முடிக்கிறார் ஜெயச்சந்திரன். 

இப்படி பல பிரபலங்கள் கலந்து கொண்ட,  ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்டம் 29.1.2017 ஞாயிறு மாலை 5 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. டோண்ட் மிஸ் மக்கா!  

                  - இரா. கலைச் செல்வன்.