Published:Updated:

“ரஜினிக்கு அடுத்து சூர்யா தான்!” - சொன்னது யார் தெரியுமா?

பா.ஜான்ஸன்
“ரஜினிக்கு அடுத்து சூர்யா தான்!” - சொன்னது யார் தெரியுமா?
“ரஜினிக்கு அடுத்து சூர்யா தான்!” - சொன்னது யார் தெரியுமா?

சிங்கம் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து சிங்கம் 3 வெளியாக இருக்கிறது. நிறைய தினங்கள் படத்தின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டு பிப்ரவரி 9 வெளியாக இருக்கிறது படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, இயக்குநர் ஹரி, சூரி, ஒளிப்பதிவாளர் ப்ரியன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசியவை கீழே...

விவேகா:

இது இனிமையான தருணம். ஏன்னா, இந்தியாவிலயே இப்படி தொடர்ச்சியான வெற்றி பெற்ற படம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிங்கம், சிங்கம் 2 இப்போது சிங்கம் 3. ஹரி சாருக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட பந்தம் இருக்கிறது. அவருடைய படத்தில் முதல் முதலில் பாடல் எழுதியவன் நான். 'தமிழ்' படம் மூலம் வந்து தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்களால் தேடக்கூடிய கமர்ஷியல் இயக்குநராக மாறியிருக்கிறார் எனும் போது தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு. சிங்கம் மூன்று பாகங்களிலும் பாடல் எழுதியிருக்கிறேன் என்கிற மகிழ்ச்சியும் உண்டு. சூர்யா சார் பற்றி சொல்லணும்னா, அவருக்குள் இருக்கும் சமூக அக்கறையில் இருந்து தான் ஆரம்பிக்கணும். சிங்கம் 2 படப்பிடிப்பு  மணப்பாடு பகுதியில் நடந்த போது நான் அங்கு சென்றேன். படத்தின் ஓப்பனிங் பாடல் படிப்பிடிப்பு நடந்தது. அதற்கு நடுவே சூர்யா சார் மைக்கை வாங்கி, "இந்த மணப்பாடு மக்கள் நம்மை நம்பி இந்த இடத்தில் படப்பிடிப்புக்கு அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், வேலைகளுக்கு நடுவே இங்கு நிறைய குப்பையை போட்டிருக்கிறீர்கள். இங்கிருந்து கிளம்பும் போது அத்தனை குப்பையையும் சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் நாளை வரும் போது நானே சுத்தம் செய்ய இறங்கிவிடுவேன்"  என சொல்ல உடனடியாக அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது. இப்படி சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறைப்படும் பொறுப்புணர்வோடு இருக்கும் நபர் சூர்யா. ‘காக்கி சட்டை போட்டான் பாரு... தேக்கி வெச்ச கோபம் நூறு ... தாக்கப் போறான் தாறுமாறு..  தாங்கப் போற ஆளு யாரு’ என்ற என் வரிகளுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். 

'2D' ராஜசேகர பாண்டியன்:

'சிங்கம் 3' படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. இன்டர்வெல் வந்ததும் தான் நாம மூச்சே விட முடியும் அந்த அளவுக்கு படம் படு வேகமா இருந்தது. இந்தப் படத்த 18 லட்சம் அடி நீளத்துக்கு ஷூட் பண்ணினதா சொன்னாங்க. படத்தை எடிட் பண்ண எடிட்டர்ஸ் மற்றும் ஹரி சார் கூடவே ஓடி இதை பதிவு பண்ணின ப்ரியன் சார் எல்லாரையும் பார்க்கும் போது பிரம்மிப்பா இருக்கு. 

கனல் கண்ணன்:

ஹரி சார் கூட இதுக்கு முன்னால ’பூஜை’ படம் பண்ணேன். இது அவரோட எனக்கு ரெண்டாவது படம். சூர்யா சார் கூடயும் நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். இரண்டு பேரோடையும் சேர்ந்திருப்பது சந்தோஷம். பொதுவா சில இயக்குநர்கள் படத்தோட சீக்குவன்ஸ் சொல்வாங்க. ஆனா, ஹரி சார் முழு பேக்கேஜோடயே வந்திடுவார். அது தான் இந்த படத்துடைய பிரம்மாண்டத்துக்கு காரணம்னு நினைக்கிறேன். சூர்யா சார கொஞ்சம் டார்சரெல்லாம் பண்ணியிருக்கேன். படம் மிகப் பெரிய வெற்றியடையணும்னு ஆண்டவன வேண்டிக்கிறேன். 

ப்ரியன்:

மிகப் பெரிய படம். மிகக் கடுமையான உழைப்பும் கூட. படம் ஆரம்பிச்ச போது, கடுமையான பனியில ருமேனியாவில் பாடல் ஷூட் பண்ணோம். ஓப்பனிங் சாங் எடுக்கும் போது கடுமையான மழை, அதிகமான பயணமும் கூடவே இருந்தது. படத்தின் ஒவ்வொரு அசைவிலும் உழைப்பு இருக்கும். 18 லட்சம் அடி பதிவு பண்ணியிருக்கோம்னு சொன்னாங்க. கேமிரால என்னென்ன வகை இருக்கோ அத்தனையும் பயன்படுத்தி படம் எடுத்திருக்கோம். லேட்டஸ்ட்டா வந்த கோப்ரோ வரை ஒவ்வொரு சீன்லையும் ஐந்து கேமிரா ஆறு கேமிரா இருக்கும். இதுக்கு அனுமதிச்ச தயாரிப்பாளருக்கு நன்றி. ஒளிப்பதிவுக்கு மட்டும் 200 பேர் கிட்ட வேலை செய்திருக்காங்க, அவங்க எல்லாருக்கும் நன்றி தெரிவிச்சுக்கிறேன். 

சூரி:

சிங்கம் இரண்டு பார்ட்டும் பார்த்திட்டு, இவ்வளவு வேகமா ஒரு படமானு ஆச்சர்யப்பட்டேன். மூணாவது பார்ட்ல நடிக்கும் போது தான் அது எப்படிப்பட்ட வேகம்னு தெரிஞ்சது. படம் முழுக்க ஹரி சார் ஓடிகிட்டே இருந்தா, சூர்யா அண்ணே பறந்துகிட்டே இருப்பாரு. என்ன ஒண்ணு.. காபிய குடிச்சாக்கூட படக்படக்படக்னு குடிக்கணும், அவ்வளோ வேகமா இருக்கணும். ஹரி சார் பார்ஸ்ட்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா எந்த அளவுக்குனா, நமக்கு என்ன, எவ்வளவு தேவைனு கரெக்டா முடிவு பண்ற அளவு பார்ஸ்ட். படத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் சீன் வரும். அதில் நம்ம லொள்ளு சபா மனோகர் வந்து கம்ப்ளைன்ட் குடுக்கணும். ஹரி சார் எல்லாத்தையும் ஒரு ரிகர்சல் பார்ப்பாரு அது எவ்வளோ டைம் வருதுன்னும் பாப்பாரு. மனோகர் எப்பிடிப் பேசுவார்னு எல்லாருக்கும் தெரியும். கைய சுத்திகிட்டே சாஆஆஆஆஆஆர்னு சொன்னாரு, நான் கொஞ்சம், ரோபோ ஷங்கர் கொஞ்சம், ஆட்டோகாரர் கொஞ்சம்னு பேசி, அந்த சீனு 1 நிமிஷம் 10 செகண்ட் வந்திருக்கும். 'ஆத்தாடியாத்தா... இவ்வளவு நீளமா வரக்கூடாதே'னு மறுபடி எல்லாத்தையும் குறைச்சு நடிக்க சொல்லுவாரு, டையத்த பாப்பாரு 1 நிமிஷம் 5 செகண்ட். 'இந்த 5 செகண்ட துக்கணுமே'னு இன்னொரு டைம் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணுவாரு. கடைசில பாத்தா எல்லாம் பர்ஃபெக்டா இருக்கும். 'இப்ப வந்துச்சு பாத்தியா’னு சிரிப்பார்.சாஆஆஆஆர்னு பேசற மனோகரயே சார்னு பேச வைக்கற அளவு  அவ்வளவு பர்ஃபெக்ட். 

படத்தில் ஒரு சீன்ல நாய், குதிரை எல்லாம் நடிக்குதுன்னா கூட அசிஸ்டென்ஸ் வெச்சு பக்காவா ட்ரெயினிக் குடுத்திருப்பார். ஷூட்டிங்கு முன்னால நாய், குதிரைய ஒருத்தர் கூட்டிட்டு வந்திருப்பார், ஷூட்டிங் அன்னைக்கு பார்த்தா, நாய், குதிரை எல்லாம் சேர்ந்து 'ஏய் ஷூட்டிங்கு டைம் ஆச்சு'னு அவர இழுத்துட்டு வரும். அந்த அளவு கரெக்ட்டா பண்ணணும்னு நினைக்கிறவர் ஹரி சார்.

ஹாரிஸ் ஜெயராஜ் அண்ணே, நீங்க ஹரி சாரோட வேலை பார்க்கும் போது உங்க ஸ்டுடியோவுல இருக்க அத்தனை பேத்துக்கும் வேலை இருக்கும்னு நினைக்கிறேன். சில படங்களுக்கு சில இன்ஸ்ட்ரூமென்ட் தேவை இல்லைனு எடுத்து வெச்சிருவாங்க, ஆனா ஹரி சார் படம்னா அதென்னா பல்ப்பா உடைச்சுவிடு.. இதென்ன.. இதையும் உடைச்சு விடுன்னு டுமீல்.. டமாஆஆஆல்னு எல்லாத்தையும் யூஸ் பண்ணுவாரு. வாழ்த்துகள் அண்ணே.

ஹாரிஸ் ஜெயராஜ்:

நான் பின்னணி இசைக்கு அதிக நாள் எடுத்துகிட்ட படம் இது, கிட்டத்தட்ட 35 நாள் ஆச்சு. ரெண்டரை மணிநேரப் படம்னா அந்த ரெண்டரை மணிநேரமும் படத்தில் மியூசிக் இருக்கும். படத்துக்கு என்ன தேவைனு கரெக்ட்டா சொல்றவர் ஹரி. சூரி சொன்ன, அந்த 1.10 நிமிஷம், 1.05 ஆனது, அப்பறம் 1 நிமிஷம் ஆனது எனக்கும் தெரியும். ஆனா, அந்த சீன் இப்போ படத்திலையே இல்லைங்கறது எனக்கு மட்டும் தான் தெரியும். (ஹாரிஸ் இதை சொல்ல சூரி, ஐயய்யோ அது இல்லையா, எடுத்துட்டீங்களா என ஹரியிடம் கேட்டு சிரிக்க, சூர்யாவும் ஹரியும் அவரை விட அதிகமாக சிரிக்கிறார்கள்) பொதுவா எல்லா படத்துக்கும் எல்லாப் பாட்டும் இருக்கற மாஸ்டர் சிடி குடுக்கறதுக்கு முன்னால நான் ஃபைனலா ஒரு முறை கேட்டுட்டு, சின்னச் சின்ன கரெக்‌ஷன் பண்ணுவேன். சிங்கம் 3ல சார் இந்த இடத்தில் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் வேணாமே எடுத்திறலாமானு கேப்பேன். உடனே பதறிப் போய் 'ஐயோ, புதுசா எதாவது சேர்க்கறதுனா கூட சேருங்க, ஆனா எதையும் எடுத்துறாதீங்கனு சொல்லுவார் ஹரி. 

ஹரி அவர்களோட அருள் படத்துக்குப் பிறகு 12 வருஷம் கழிச்சு வேலை செய்யறேன். அவருடைய சாமி படம் பண்ண பிறகு என்னைத் தேடி நிறைய போலீஸ் கதைகள் வந்தது. அப்படிப்பட்ட அவரால இப்போ நான் பாடலாசிரியராவும் மாறியிருக்கேன். ஒரு சிச்சுவேஷன் சொல்லி ரெண்டே நாள்ள பாட்டு வேணும்னு கேட்டாரு. ட்யூன நான் குடுத்துட்டேன். ஆனா, வரிகளுக்கு என்ன பண்றது. இந்த பாடலாசிரியர்கள் எல்லாம் பிஸியாகிட்டாங்க. சரி வாங்க நாமளே எழுதலாம்னு கூப்பிட்டார். ராத்திரி 9 மணிக்கு உட்கார்ந்து விடியக்காலைலே பாட்ட எழுதி முடிச்சோம். அந்த பாட்டு தான் வை வை வை வைஃபை. இன்னொரு விஷயம் படத்தின் சவுண்டு முதற்கொண்டு எல்லாமே என்னுடைய புதிய ஸ்டுடியோவான 'ஸ்டுடியோ ஹெச்'ல ரெக்காட்ர் பண்ண படம் சிங்கம் 3. 

ஹரி:

ஹரிக்கான இன்ட்ரோ கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, இருக்கையிலிருந்து ஓடி மைக் அருகே வருகிறார். சார் உங்க படம் தான் ஸ்பீடுனா நீங்க அதை விட ஸ்பீடா இருக்கீங்களே என தொகுப்பாளினி கேட்க எப்பவும் அப்படித்தான் என்பது போல சிரித்துவிட்டு பேசத்துவங்குகிறார் ஹரி. 

சிங்கம் 2வுக்கு கிடைச்ச சப்போர்ட்டும், சந்திக்கும் எல்லோரும் அடுத்த பார்ட் எப்போ எப்போனு கேட்ட ஆர்வமும் தான் இந்தப் படத்தை சாத்தியமாக்கியிருக்கு. நானும் சூர்யா சாரும் வேற ஒரு படம் பண்றதா தான் இணைஞ்சோம். ஆனா, சிங்கத்துக்கான எதிர்பார்ப்பு வேற லெவல்ல இருந்ததால, சிங்கம் 3 ஒன்லைன் ரெடி பண்ணி சூர்யா சார்கிட்ட சொன்னேன். உடனே பண்ணலாம்னு சொன்னார். இதோ படமும் ரிலீஸ் ஆகப் போகுது. 

எவ்வளவு நெருக்கமான ஆளா இருந்தாலும் அண்ணன் தம்பியாவே பழகினாலும் சின்னதா ஒரு கசப்பு வரும். ஆனா, எங்களுக்குள் இருக்கும் பத்து வருஷ பழக்கத்தில் ஒரு நாள் கூட சின்ன கசப்பு கூட உண்டாகல. என் மேலான அவரின் புரிதலுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நடிப்பு பொறுத்தவரை, எடுக்கும் சீன்ல நியாயமும் எதார்த்தமும் இருந்தா, அதைப் பவர்ஃபுல்லா நடிச்சுக் கொடுப்பார் சூர்யா. அதுக்கும் நன்றி. 

பொதுவா படங்கள்ல மெசேஜ் சொல்றதில் எனக்கு உடன்பாடு கிடையாது. வசனங்கள்ல சின்னதா எதாவது அமையும். ஆனா, இந்தப் படத்தில் சொல்லிக்கும் படியா, இன்றைய இளைஞர்களுக்கான ஒரு மெசேஜ் இருக்கு. முதல் இரண்டு பாகத்தில், துரை சிங்கத்தின் முதல் ஐந்து மணிநேரக் கதைய பார்த்திட்டீங்க, இனி அதுக்குப் பிறகான இரண்டரை மணிநேரத்தையும் சேர்த்து ஏழரை மணிநேர கதையைப் பார்க்கப் போறீங்க. நான் மட்டும் வேகமா ஓடினா, தனியா தான் ஓடணும். என்கூடவே சேர்ந்து ஓடி இந்தப் படத்துக்காக உழைச்ச அத்தனை பேருக்கும் நன்றி. 

ஞானவேல் ராஜா:

படத்தில் நடிச்சவங்களாகட்டும், டெக்னீஷியன்ஸ் ஆகட்டும், உதவி இயக்குநர்களாகட்டும் எல்லாரும் ஒரு போர் நடக்கற மாதிரி பரபரப்பில் இருந்தாங்க, எந்த டென்ஷனும் இல்லாம ஜாலியா ரிலாக்சா இருந்தது நான் மட்டும் தான். ஏன்னா எனக்கு அமைஞ்ச டீம் அந்த மாதிரி. எல்லாரும் கிண்டலா கேட்பாங்க என்னங்க சிங்கம் 30 வரைக்கும் போவீங்களானு, உண்மையாலுமே அதுவரைக்கும் போகக் கூடிய தைரியத்தை இந்தப் படம் குடுத்திருக்கு படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்வீங்க. 

ரசிகர்களுக்கு நான் இந்த நேரத்தில் ஸாரி சொல்லிக்கிறேன். ஏன்னா படம் வெவ்வேறு காரணங்களால தள்ளிப்போயிடுச்சு. தீபாவளிக்கு எங்களால கொண்டு வர முடியல, டிசம்பர் எல்லாருக்குமே தெரியும் சி.எம் இறப்பு, டீமானிடைசேஷன், புயல்னு பல விஷயங்கள் இருந்தது. ஆனா, பிப்ரவரி எனக்கு ரொம்பவும் லக்கியான மாசம். ஏன்னா, தமிழ்ல பருத்திவீரன் ரிலீஸ் ஆனது பிப்ரவரி 23, தெலுங்குல ஸ்டுடியோ க்ரீன் பேனர் ஆயிரத்தில் ஒருவன் மூலமா கொண்டு போனது பிப்ரவரி 5. இப்போ சிங்கம் 3 பிப்ரவரி 9 ரிலீஸ் ஆகப்போகுது. ஃபேன்ஸுக்கு இன்னொரு மன்னிப்பும் சொல்லிக்கிறேன், எல்லாருமே படத்துடைய வசூல் என்னனு போடுறாங்க, நீங்க மட்டும் போடவே மாட்டறீங்கனு சொல்றாங்க. முதல் விஷயம் பொய் சொல்லக் கூடாதுங்கறது, ரெண்டாவது சூர்யா சார் அதை விரும்பல. ஏன்னா ஒரிஜினல் வசூல சொல்லிகூட அதனால யாரும் காயப்படக்கூடாதுன்னு தான். ஆனா, ரசிகர்களுக்காக சூர்யா சார்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஒரு சில விஷயங்கள இங்க பகிர்ந்துக்கிட்டே ஆகணும். மொத்த வியாபாரத்தை வெச்சு தான் நம்பர் 1, நம்பர் 2 அப்படிங்கற கேம் இருக்குதுன்னா, வியாபார ரீதியில் ரஜினி சாருக்கு அடுத்து அதிக பட்ச வியாபாரம் இருக்கும் ஹீரோ சூர்யா சார்னு என்னால உறுதியா சொல்ல முடியும். நிறைய பேர் வாங்குற சம்பளம் தான் நம்பர் 1ன தீர்மானிக்குதுன்னு நினைக்கறாங்க, ஆனா, படத்தின் தயாரிப்பாளருக்கும் லாபம் கிடைக்கணும். அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹீரோ சூர்யா சார். ரிலீஸுக்கு முன்னாலயே 100 கோடிகிட்ட வியாபாரம் ஆகிடுச்சு.

சூர்யா:

என்னுடைய கேரியர்ல பெஸ்ட்னு அடிக்கடி சொல்லும் படங்கள்ல சிங்கம் முக்கியமானது. ஹரி சார் கூட பயணிச்சது ரொம்ப அழகான ஒரு விஷயம். முதல் இரண்டு பாகம் ஹிட்டாகிடுச்சு. மூணாவது பண்ணலாம்னு துவங்காம, அதுக்காக ஒரு டைம் எடுத்து வேலை செஞ்ச அவருடைய உழைப்பு, அவரது உதவி இயக்குநர்களுடைய உழைப்பு ரொம்ப பெரிய விஷயம். படத்தை என்வீட்டு ஆட்கள் பார்த்திட்டாங்க, எல்லாரும் கேட்டது, எப்படி இவர் இவ்வளவு அழகாவும் வேகமாவும் யோசிக்கறாருன்னு தான். இன்னும் கொஞ்ச ஆட்களும் பார்த்தாங்க, பார்த்திட்டு, இந்தப் படத்தை ஏன் தள்ளித் தள்ளிப் போடுறீங்க? எப்ப வேணாலும் ரிலீஸ் பண்ணலாமேனு சொன்னாங்க. நேத்து நைட் ஒரு ஃபீட் பேக் வந்தது, கண்ணு படம் நல்லாயிருக்கு கண்ணு, எப்படி ஹரி இப்படி எல்லாம் வசனம் எழுதுறாருனு ஆச்சர்யப்பட்டாங்க. இத சொன்னது என் அம்மா. எனக்கு நெருக்கமான ஆட்களோட வாழ்த்துக்கள் தந்த நம்பிக்கை அதிகமாகியிருக்கு, அதே போல படம் வெற்றி பெறணும்னு ஆசைப்படறேன், நம்பறேன்.

-பா. ஜான்சன்