Published:Updated:

மகா கலைஞன்! - நாகேஷ் நினைவு தின சிறப்புப் பகிர்வு

மகா கலைஞன்! - நாகேஷ் நினைவு தின சிறப்புப் பகிர்வு
மகா கலைஞன்! - நாகேஷ் நினைவு தின சிறப்புப் பகிர்வு

மகா கலைஞன்! - நாகேஷ் நினைவு தின சிறப்புப் பகிர்வு

னதிற்கு நெருக்கமான ஒருவரின் மரணம் நம்மை என்ன செய்யும்? அழவைக்கும்...வேதனையில் விம்ம வைக்கும்....வாழ்க்கையையே வெறுக்க வைக்கும்..திரையில் கூட மனம்கவர்ந்த கதாநாயகர்களின் இறப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ரசிகர்கள். ஆனால், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை புரிந்த அந்த மகா கலைஞன், ’மகளிர் மட்டும்’ என்னும் திரைப்படத்தில் இறந்துபோனவராக நடித்தே தனது ரசிகர்களைச் சிரிக்க வைத்தார் என்றால் அக்கலைஞனுக்கு அழிவே கிடையாது என்பதுதான் அதன் அர்த்தம்...அவர் நண்பர்களுக்கு குண்டுராவ்...வீட்டில் குண்டப்பா...பிறப்பால் நாகேஸ்வரன்....நகைச்சுவை விரும்பிகளுக்கு ‘நாகேஷ்’.

வாழ்க்கையில் வலிகளை மறைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தனது நடிப்பால் அளித்த நாகேஷுக்கு தனது ரசிகர்களின் வருத்தமும், வேதனையும் பிடிக்காது! மரணத்தில் கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்த அத்தகைய மா கலைஞன் இம்மண்ணைவிட்டு மறைந்த தினத்தில், அவரது பெருமைகளைப் பார்ப்போம்.

சிறுவயதிலிருந்தே நாகேஷுக்கு நாடகங்கள், நடிப்பு என்றால் உயிர். நாயகனாக வேஷம் கட்டி நடிக்க ஆவல் கொண்டிருந்தவரின் கனவை அடியோடு நசுக்கிப் போட்டது, இரண்டாம் வருடக் கல்லூரிப் படிப்பின்போது அவருக்கு ஏற்பட்ட அம்மை நோய். முகம் முழுவதும் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள். உள்ளத்தில் நொறுங்கிப் போனாலும், உயிர் மூச்சாய் நினைத்த நடிப்பின் மீதான ஆசையை அவர் விடவில்லை. கொஞ்ச காலம் ரயில்வேயில் எழுத்தராய் பணிபுரிந்து கொண்டே, தனது நடிப்பு மீதான ஆசைக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தார் நாகேஷ்.

பலகட்ட கடினப் போராட்டங்களுக்குப் பிறகு, நாடக உலகினுள் நுழைந்தார். மணியனின் ‘டாக்டர் நிர்மலா’ நாடகத்தில் தை தண்டபாணி என்னும் நோயாளியாக நாகேஷ் நடித்த பாத்திரம் அப்ளாஸ் அள்ளியது. அதனால் அவருக்கு ‘தை நாகேஷ்’ என்னும் பட்டப் பெயர் இணைந்து பின்னாளில் அது ‘தாய் நாகேஷ்’ஆக மாறியது. நாகேஷ் அவர்களின் முதல் திரைப்படம் ‘தாமரைக்குளம்’. நாடக உலகின் மீது தீராக் காதல் கொண்டிருந்த நாகேஷ், கதாநாயகனாக நடித்த இப்படம் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. மீண்டும் வாழ்க்கையில் போராட்டம். எனினும், போராடத் தயங்காதவருக்கு கிடைத்த துருப்புச் சீட்டுதான், ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம். கிடைத்த சான்ஸில் கெத்தாக ஸ்கோர் செய்தார். உடல்மொழி, வசன மாடுலேஷன் என்று திரையில் தான் தோன்றும் காட்சிகளிலெல்லாம் சிக்ஸர்களாய் விளாசினார்.  பாலையாவிற்கு அவர் சொல்லும் ‘த்ரில்லர் கதை’ இன்றும் நம்மை சீட்டின் நுனியில் அமர்ந்து சிரிக்க வைக்கும் மாஸ் காமெடி.

அதன்பின்பு, வரிசையாக நகைச்சுவை கதாபாத்திரங்கள் இவர் பெயர் சொல்லும் வண்ணம் கிடைக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ நாகேஷ் இருப்பார். திரையில் நாகேஷின் ஆஸ்தான ஜோடிகள் என்றால் அது சச்சுவும், ஆச்சி மனோரமாவும்தான்.  இந்த காம்பினேஷனில் வெளியான திரைப்படங்களின் காமெடிகள் இன்றும் சூப்பர் டூப்பர் ஹிட். நாகேஷ் காமெடி உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தபோதே, இயக்குனர் சிகரம் பாலசந்தர் கதை, வசனத்தில் ஒரு படம் வெளியானது.  அழவைக்க, சிரிக்க வைக்க, சிந்திக்க என்று கலந்து கட்டி நடிக்க வேண்டிய அந்தப் படத்திற்கு ஹீரோவாக பாலசந்தரும் சரி, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சுவும் சரி.. யோசிக்காமல் டிக் செய்த பெயர்: நாகேஷ். படம் பெயர். சர்வர் சுந்தரம்! இன்றைக்கும் ஹோட்டல்களில் பணிபுரியும் சர்வர்கள்,  வாடிக்கையாளர்களை எப்படி  எதிர்கொள்ளலாம் என்றறிய அந்தப் படத்தின் முதல் மூன்றரை நிமிடங்கள் பார்த்தாலே போதும்.        

நாகேஷின் நடிப்பில் மகிழ்ந்துபோன பாலசந்தர், ‘நீர்க்குமிழி’ திரைப்படத்திலும் கதாநாயகன் வாய்ப்பை அள்ளிக் கொடுத்தார். அந்தப் படத்தில்தான் அழகென்பது மனதிலும், நடிப்பிலும் இருந்தால் போதும் என்று நிரூபித்துக் காட்டினார் நாகேஷ். இன்று திரைத்துறையில் மிளிரும் பலருக்கும் அது ஒரு தன்னம்பிக்கை பூஸ்ட். ஆம்...நீர்க்குமிழி திரைப்படம் வெற்றிகரமாக பலநாட்கள் ஓடியது. தொடர்ந்து தேன்கிண்ணம், யாருக்காக அழுதான், எதிர்நீச்சல் என்று ஏராளமான கதாநாயக வேடத் திரைப்படங்கள் அவருக்கு கிடைத்தது.

’யாருக்காக அழுதான்’ திரைப்பட இறுதிக் காட்சியில் உண்மையிலேயே அழுது, உருண்டு, பிரண்டு அழுத நாகேஷப் பார்த்து படக்குழுவே பிரமித்துப் போயிருக்கிறது. அப்படத்தினைத் தயாரித்த எழுத்தாளர் ஜெயகாந்தனே வியந்து போயிருக்கிறார். நாகேஷுக்கு, ஜெயகாந்தனும், பாலசந்தரும் ஆருயிர் நண்பர்கள்.

ஒருமுறை ஜே.கேவும், நாகேஷும் காரில் காத்திருந்த தருணமொன்றில், எதார்த்தமாக ‘பிச்சையெடுக்கலாமா?’ என்று ஜெயகாந்தன் கேட்க, நொடியில் சட்டை, பேண்ட்டை களைந்துவிட்டு பிச்சைக்காரனாகவே மாறிப்போனாராம் நாகேஷ். அந்த அர்ப்பணிப்புதான் அவரை மக்களின் மனம் கவர்ந்த கலைஞனாக உயர்த்தியது.

திருவிளையாடல் படத்தின் புலவன் தருமி - கடவுள் சிவன்  காட்சி. எதிரில் நிற்கும் சிவாஜி, சாதாரண வேடம் என்றாலே கம்பீரமான நடிப்பைத் தரும் நடிப்பு இமயம். இதில் கெத்தாக சிவன் வேடம் வேறு. இடுப்பில் கைவைத்து, ‘கேள்விகளை நீ கேட்கிறாயா.. நான் கேட்கவா’ என்று சிம்மக்குரலில் கேட்பதைப் பார்த்தால் எதிரில் நிற்கும் எவருக்கும் நடுங்கும். அந்தக் காட்சியில் சளைக்காமல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அடுத்தவர் கவிதையை தன் கவிதை என்று பொய் சொல்ல வேண்டும் என்ற குற்ற உணர்ச்சியும், வேறு வழியில்லை என்ற தன் நிலையையும் உடல்மொழியிலேயே வெளிப்படுத்தியிருப்பார்.  ஒட்டிய வயிறுடன் அவர் செய்த சிலிர்ப்பான நகைச்சுவை வேடம், சிவாஜியை படப்பிடிப்பில் பலமுறை சிரிக்க வைத்த ஒன்று.   தனது முகத்தழும்புகளைக் கூட, வாழ்வின் ஏணிப்படிகளாகவே பார்த்தவர் நாகேஷ். முன்பொரு பேட்டியில், ‘மாவு அரைபட நன்றாக கொத்தப்பட்ட அம்மி தேவை. அப்படி கடவுள் என்முகத்திலும் கொத்திய குழிகள்தான், இன்று வாழ்க்கையில் நான் வளர்ந்திடக் காரணம்’ என்று நகைச்சுவையாகவே அதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நடனத்தையும் விட்டுவைக்காத சகலகலா திறமைசாலி. கால் முட்டியில் கைகளை மாறி மாறி வைத்தபடி அவர் ஆடும் நடனம் அவரது டிரேட் மார்க்.  

வயோதிகம் சூழந்தபோதும், இவரது நடிப்பின் வேகம் தணியவில்லை. ரஜினி, கமலுக்கே சவால் விடும் வில்லாதி வில்லன் கேரக்டர்களையும் அசால்ட்டாக நடித்து அட்ராசிட்டி செய்தவர் நாகேஷ். ‘ஆபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமலையும், ’அதிசய பிறவி’ படத்தில் ரஜினியையும் உப்பு தின்று தண்ணீர் குடிக்க வைக்கும் மோஸ்ட் வாண்டட் வில்லன். கமலுடன் நெருங்கிய பாசப்பிணைப்பு கொண்டிருந்த நாகேஷ், தனது இறப்பிற்கு முன்பு கடைசியாக நடித்ததும் கமலுடன் தான். ‘தசாவதாரம்’ திரைப்படம்தான் அவரது திரையுலக வாழ்வில் ரசிகர்களுக்கு கிடைத்த கடைசிப் பொக்கிஷம். தனது நடிப்பிற்கு உயர்வான விருதுகள் கிடைக்காதததைக் கூட அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரசிகனின் மனம் மகிழ்ந்த சிரிப்பையே தனக்கான விருதாக ஏற்றுக் கொண்டவர். 

இந்தப் பெரும் கலைஞன், ஆனந்த விகடன் நிருபரிடம் சொல்லி தன் பெயரில் விகடனில் ஜோக்ஸ் எழுதியிருக்கிறார் என்பது தெரியுமா உங்களுக்கு?   ஒருமுறை நாகேஷ், ‘எப்போது அவர் `கட் என்கிறாரோ? எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  கடவுள் எப்பவுமே ` டூ லேட் ஆசாமி’ என்று மரணத்தைக் கூட ரசனையான பதிலாக சொல்லியிருக்கிறார். 2009ல் இதே தினத்தன்று கடவுள் இவரை தன்னருகே அழைத்துக் கொண்டான். நிச்சயம் நாகேஷ் அங்கேயும் பலரைச் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். கண்ணதாசன் சொன்னதைப் போல.. இவரைப் போன்ற கலைஞர்கள்.. நிரந்தனமானவர்கள்.. அழிவதில்லை.. எந்த நிலையிலும் இவர்களுக்கு மரணமில்லை!  

-பா.விஜயலட்சுமி


 

அடுத்த கட்டுரைக்கு