Published:Updated:

ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகள் பெற்ற படங்கள் இவைதான்! #AnandaVikatanCinemaAwards

பா.ஜான்ஸன்
ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகள் பெற்ற படங்கள் இவைதான்! #AnandaVikatanCinemaAwards
ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகள் பெற்ற படங்கள் இவைதான்! #AnandaVikatanCinemaAwards

விகடன் விருதுகள் நிகழ்வில் விருதுகளை அள்ளிய படங்கள் பற்றிய குறிப்பு தான் இது. விருது ஒரு படைப்புக்கான, உழைப்புக்கான அங்கீகாரம், ஒரே படைப்பு நிறைய விருதுகள் பெறுவது அந்தப் படைப்பின் தரத்தை இன்னும் வெளிக்காட்டும் படியான ஏற்பாடு. அப்படி, விகடன் விருதுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தங்கள் குழுவினரை மேடை ஏற்றியவை இந்தப் படங்கள்தான். 

கபாலி:

மலேஷியன் டானாக மாஸ் காட்டுவது, மனைவி மீது காதலுடன் சிலிர்த்துப் போவது என இரண்டு விதமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்த ரஜினிகாந்த் சிறந்த நடிகர் விருதை பெற்றார். மாயநதியில் மென்மையாக வருடியது துவங்கி நெருப்புடா என தெறிக்கவிட்டது வரை ஆச்சர்யப்படுத்திய சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். மலேஷியன் உடைகளுக்கான மெனக்கெடல், ரஜினியின் கோட்டுக்கான நேர்த்தி எனப் பல உழைப்பை செய்திருந்த அனுவர்தன் மற்றும் நிரஞ்சனி அகத்தியனுக்கு ஆடை வடிவமைப்பாளருக்கான விருது கிடைத்தது. சென்ற வருடத்தில் எல்லா சேனல்களிலும் ஒலித்தது பிரதீப்பின் குரல். மாயநதியில் காதலை கரைத்து, வானம் பார்த்தேனில் தனிமையை குழைத்தவருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருது கிடைத்தது. உச்சபட்சமாக, எல்லோரும் நிமிர்ந்து பார்க்கும்படியான விளம்பரம் செய்து, படத்தை உலகெங்கும் கொண்டு சேர்த்த தயாரிப்பாளரையும் பெருமைப்படுத்தியது விகடன். அவை வெற்று பிரம்மாண்டம் மட்டும் அல்ல, படத்தின் தரமும், தகுதியும் கூட. அந்த விதத்தில் அதிக கவனம் ஈர்த்த படத்துக்கான விருதையும் சேர்த்து மொத்தம் ஐந்து விகடன் விருதுகள் வென்றது கபாலி. #ரியல்_நெருப்புடா

விசாரணை:

ஒரு அமைப்பை அதன் செயல்பாடுகளுடன் சேர்த்து உள்ளே நடக்கும் குளறுபடிகளையும் காட்டிய விசாரணையைத் தவிர வேறு எது சிறந்த படமாக இருக்கமுடியும்?. கதையின் அடர்த்தியை காட்சிகளின் வழியே அதிகப்படுத்தி கச்சிதமான படத்தை அளித்திருந்த வெற்றிமாறன் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார். தான் காப்பாற்றி வந்த ஆட்களை தானே பலி கொடுக்கும் சூழலை அத்தனை எதார்த்தமாக நடித்து ஒற்றைக் காட்சியில் கவர்ந்த சமுத்திரக்கனி சிறந்த குணச்சித்திர நடிகர் விருதைப் பெற்றார்.  சின்ன சலிப்பும் சலசலப்பும் ஏற்படாத வகையில் தேவையானதை மட்டும் மிக நேர்த்தியாக தொகுத்திருந்த கிஷோர் மற்றும் ஜி.பி.வெங்கடேஷுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது வழங்கப்பட்டது, புத்தகத்தை சினிமாவாக்குவதில் முதல் சிக்கலே அதன் திரைக்கதை தான், புத்தகத்தை வைத்து பாதிக் கதையைக் கொண்டு போய்.. மீதிக் கதையை சில சம்பவங்களை மையமாக வைத்து  திரைக்கதையை தெளிவாக எழுதிய வெற்றிமாறன் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றார். 

இறுதிச்சுற்று:

முதல் படத்திலேயே அத்தனை பேரையும் கவர்ந்தாள் இந்த சண்டைக்காரி. முரட்டுத்தனம், மாதவனிடம் காதலைச் சொல்லும் விதம் அறிமுக நடிகைக்கான அடையாளமே இல்லாமல் அசத்திய ரித்திகா சிங் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். கலர்கலர் லைட்கள், அழகான காஸ்ட்யூம் மூலம் தான் ஒரு பாடலை கவனிக்க வைக்க முடியுமா, இயல்பாக ஒரு சேரியை சேர்ந்த பெண்ணின் மகிழ்ச்சியை துள்ளலுடன் வெளிப்படுத்திய விதத்தில் பாடலுக்கு அழகு நேர்த்த தினேஷ் சிறந்த நடனத்திற்கான விருதைப் பெற்றார். சாதாரணமாக ஒரு படத்தின் வெற்றி மொத்தமாக அந்த இயக்குநருக்கு போய் சேரும். ஆனால், அது ஒட்டுமொத்தக் குழுவிற்கான வெற்றி படமாக, ஒளிப்பதிவாக, இசையாக ஒவ்வொரு துறைக்குப் பின்னும் பலரது உழைப்பு இருக்கும். அப்படிப்பட்ட சிறந்த படக்குழுவுக்கான விருதையும் சேர்த்து மொத்தம் மூன்று விருதுகளை வென்றது இறுதிச்சுற்று. #நாக்அவுட்

கிடாரி:

தோற்றம், நடிப்பு அத்தனையிலும் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தை மறைத்து வைத்து இறுதியில் இவர் தான் வில்லன் எனும் போது முந்தைய காட்சிகளை நினைத்து சிலிர்க்கும் படியான நடிப்பு வேல.ராம மூர்த்தியினுடையது. சிறப்பான நடிப்பில் ஈர்த்த வேல.ராம மூர்த்திக்கு சென்றது சிறந்த வில்லன் விருது. கிராமத்துப் பின்னணியில் நிகழும் கதைக்கு தனது வித்தியாசக் கோணங்கள் மூலம் உலகத்தரம் கொடுத்த எஸ்.ஆர்.கதிருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது. ஒரு சம்பவம், அதை யார் செய்திருப்பார் என சுவாரஸ்யமாக நம் கைபிடித்து அழைத்துச் சென்று இறுதியில் கொடுத்த திருப்பம் என முதல் படத்திலேயே ஆச்சர்யம் அளித்த பிரசாத் முருகேசனுக்கு புதுமுக இயக்குநர் விருது சென்றது.

ஆண்டவன் கட்டளை:

சிரிக்க வைப்பதற்கு என பிரத்யேகமான தனி முயற்சிகள் எதுவும் இன்றியே நம்மை சிரிக்க வைப்பவர் யோகி பாபு. அவரின் வசன உச்சரிப்பு, கரடு முரடான உருவம் என்ற சவால் இருந்தாலும் அதைத் தாண்டி அவரின் அசட்டையான செயல்கள் என ஒவ்வொன்றின் மூலமும் சிரிக்கவைத்த யோகிபாபு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெற்றார். குணச்சித்திர வேடங்கள் செய்யும் பலருக்கும் நகைச்சுவை அவ்வளவு சுலபத்தில் வந்துவிடுவதில்லை, ஒரு கால இடைவெளிக்குப் பிறகு பெண் நகைச்சுவை நடிகைகளுக்கான இடமும் காலியாகத் துவங்கியிருந்தது. வெறும் குணச்சித்திர நடிகை மட்டுமல்ல தன்னால் நகைச்சுவையும் கொண்டு வர முடியும் என நிரூபித்திருக்கும் வினோதினி சிறந்த காமெடி நடிகைக்கான விருதைப் பெற்றார்.

தெறி: 

மீனா போலவே அவரது மகளும் சினிமாவுக்குள் குழந்தை நட்சத்திரமாக நுழைந்திருக்கிறார். அவரைப் போலவே அசத்தியும் இருக்கிறார், அதே ரத்தம்... அப்படித்தானே இருக்கும். குறும்பும் குழந்தைத்தனமுமாக கவர்ந்த தெறிபேபி நைநிகா சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றார். வழக்கமான கமர்ஷியல் படம் தான். ஆனால் உள்ளே இருக்கும் சண்டைக் காட்சிகள் வழக்கமானது இல்லை. குறிப்பாக அந்த பாரிஸ் கார்னர் ஃபைட் சீன் தெறித்தனமான ஒன்று. அட்டகாசமாக அதை வடிவமைத்த திலீப் சுப்பராயன் மற்றும் கலோயனுக்கு சிறந்த சண்டைப்பயிற்சி விருது கொடுக்கப்பட்டது.

24: 

டைம் ட்ராவல் பற்றிய படம், காலத்தை முன்னும் பின்னுமாக புரட்டும் படத்தில் கலை இயக்கத்துக்கான இடம் மிகப் பெரியது. அந்த டைம் ட்ராவல் வாட்ச் இருக்கும் பெட்டியின் சாவி துவங்கி, பிரம்மாண்டமான அந்த ஆய்வுக் கூடம் வரை அத்தனை நேர்த்தி. அதை அழகாக வடிவமைத்த அமித் ரே, மற்றும் சுப்ரதா சக்ரபோர்ட்டிக்கு சிறந்த கலை இயக்கத்துக்கான விருது கிடைத்தது. படத்தில் மூன்று சூர்யா, கூடவே காலத்தை சுழற்றி விளையாடும் வசதி இதனை தன் விஷுவல் எஃபக்ட்ஸ் மூலம் சாத்தியப்படுத்திக்காட்டிய ஜூலியனுக்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருது கிடைத்தது.

ஜோக்கர்

அரசியல் அமைப்பு, நிகழும் அநீதிகளை ஒட்டியே எழுதப்பட்ட வார்த்தைகள் அதை சமூக அக்கறையோடு வசனமாக தொகுத்த  விதத்தால் கவர்ந்தது ராஜூமுருகன் மற்றும் முருகேஷ் பாபுவின் பேனா. சிறந்த வசனத்திற்கான விருது இவர்களுக்குச் சென்றது.  இப்படிப்பட்ட படத்தை எதிர்ப்பு எதுவும் வருமோ என்கிற பயம் இல்லாமல் எந்தத் தலையீடும் இல்லாமல் அற்புதமாகத் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த தயாரிப்பு விருது வழங்கப்பட்டது.

- பா.ஜான்சன்