Published:Updated:

ஒரே டைட்டில்... வேற கதை.... மாற்றான் சினிமாஸ்!

SHYAM SUNDAR L
ஒரே டைட்டில்... வேற கதை.... மாற்றான் சினிமாஸ்!
ஒரே டைட்டில்... வேற கதை.... மாற்றான் சினிமாஸ்!

கோலிவுட் வரலாற்றில் காலங்காலமா பின்பற்றப்படுகிற முக்கியமான பழக்கம் ஆஃப் பாரம்பரியம் எதுன்னு கேட்டா அது கண்டிப்பா வெச்சே பேரையே திரும்பத் திரும்ப படத்துக்கு வைக்கிறதாதான் இருக்கும். என்னதான் பழைய படத்துக்கும் புதுப் படத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லைனாலும் எங்களுக்கு அந்த தமிழ்ப் பட டைட்டில்கள் தான் வேணும்னு சொல்லி வைப்பாங்க. சரி அந்தப் பழைய படத்துக்கும், அதே பேர் வெச்ச புதுப் படத்துக்கும் என்னதான் கனெக்‌ஷன் இருக்குனு பார்ப்போமா...

* 'பொல்லாதவன்' 1980-ல ரஜினி நடிச்சு முக்தா ஸ்ரீனிவாசன் டைரக்ட் பண்ண படம். இந்தப் படத்துல ரஜினி, வில்லன்கள் எல்லோரையும் தேடித் தேடிக் கொலை பண்ற மாதிரி பழி வாங்கும் படலத்தோட கதை அமைச்சு இருப்பாங்க. ரஜினி நடிச்ச 'பொல்லாதவன்' தீபாவளிக்குதான் ரிலீஸ் ஆனது. அதே மாதிரி 27 வருஷத்துக்கு அப்புறம் தனுஷும் 'பொல்லாதவன்' படம் எடுத்தார். பழைய 'பொல்லாதவன்' மாதிரியே இந்தப் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது, மாஸ் ஹிட் ஆனது. பட் இந்த ரெண்டு விஷயத்தைத் தவிர இந்தப் படத்துக்கு நடுவுல வேற எதுவும் தொடர்பு இருக்கான்னு எல்லா ஆங்கிள்லேயும் யோசிச்சுப் பார்த்தாச்சு. ஒண்ணுமே இல்லை பாஸ். அப்புறம் ஏன் பாஸ் அந்தப் பேர் வெச்சீங்க....சொல்லுங்க. #பொல்லாதவன்கள்_சூழ்_உலகு. 

* 'பொல்லாதவன்' மாதிரியே தனுஷ் யூஸ் பண்ண இன்னொரு ரஜினி படத் தலைப்புதான் 'படிக்காதவன்'. பழைய 'படிக்காதவன்' படத்துல ரஜினி ஒண்ணும் தெரியாதா பையனா சுஜுக்கு புஜிக்கி கேரக்டர்ல அழகா நடிச்சு இருப்பார். படமும் அப்போ கிராமம், நகரம் எல்லாத்துலேயும் மாஸ் ரீச் ஆனது. பட் அதே நேம் வெச்சு கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி தனுஷோட 'படிக்காதவன்' படம் ரிலீஸ் ஆனது. படத்துல காமெடி பண்ணி பார்த்து இருப்பீங்க, படத்தையே காமெடியா பண்ணிப் பார்த்து இருக்கீங்களா புது 'படிக்காதவன்' படம் பாருங்க. பழைய படத்துல ரஜினி, வில்லனை எல்லாம் வெச்சு செஞ்சு இருப்பார். இதில் ஆடியன்ஸையே வெச்சு செஞ்சு இருப்பாங்க. #படிக்காதவன்_பார்க்கக்கூடாதவன்.

* கோலிவுட் ஹிஸ்டரியில் அதிரி புதிரி ஹிட் அடிச்ச படம்தான் எம்.ஜி.ஆர் நடிச்ச 'ஆயிரத்தில் ஒருவன்'. கிட்டத்தட்ட இப்போ இருக்கிற ஹீரோ எல்லோருக்கும் ரீமேக் பண்ணணும்னு நினைக்கிற ஆல் டைம் ஃபேவரைட் படம். எம்.ஜி.ஆர் அதில் சர்வாதிகாரத்தை எதிர்க்கிற டாக்டரா நடிச்சு இருப்பார். அந்தப் படம் வந்து பல மாமாங்கம் கழிச்சு செல்வராகவன் டைரக்‌ஷன்ல கார்த்தி நடிச்சு புது 'ஆயிரத்தில் ஒருவன்' வந்தது. பேரைத் தவிர ரெண்டு படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லாஜிக்படி பார்த்தா, இந்தப் படத்துக்கு ஆயிரத்தில் இரண்டாவது ஆள் அப்படின்னுதான் வெச்சு இருக்கணும். அந்தப் படத்துல ஹீரோயின் ஆயிரத்தில் ஒருத்தின்னு சொல்லி இருப்பாங்க. பட்ஷே இந்தப் படத்துல ஹீரோயின் யாருன்னு சொல்லவே இல்லையே பாஸ்?

* கமல், ரஜினி, ஜெயபிரதான்னு பெரிய டீம் நடிச்சு 80-கள்ல ஹிட் ஆன படம் 'நினைத்தாலே இனிக்கும்'. ரஜினிக்கும், கமலுக்கும் இடையில் நடக்கிற கான்வர்சேஷன் எல்லாமே மரணமா ஹிட் ஆகியிருக்கும். அதே பேர்ல முழுக்கு முழுக்க வேற கதையோட 2009-ல இன்னொரு 'நினைத்தாலே இனிக்கும்' படம் வந்தது. 'நினைத்தாலே இனிக்கும்'ங்கிற பேரைத் தவிர ரெண்டு படத்துக்கும் வேற என்னதான் ஒற்றுமை இருக்குனு விழுந்து புரண்டு யோசிச்சதுல ஒரே விஷயம்தான் தெரிஞ்சது. அது என்ன ஒற்றுமைனா....உங்களுக்கும் அப்படி எதுவும் தெரிஞ்சா நீங்களே சொல்லுங்க பாஸ். #ஒற்றுமை_எங்கடா.

* டைரக்டர் சுராஜுக்கு ரஜினி படத் தலைப்பு மேல என்ன கோவங்கள் அண்ட் கொடூரங்கள்னு தெரியலை. இதுவரைக்கும் ஹிட் ஆன முக்கால்வாசி ரஜினி படத்தோட டைட்டிலை எல்லாம் இவர் படத்துக்கு வெச்சு உண்மையாவே செஞ்சிட்டாரு. ரஜினி நடிச்ச பழைய 'மாப்பிள்ளை' படத்தை பட்டும் படாம தொட்டும் தொடாம புது 'மாப்பிள்ளை' படம் எடுத்து இருப்பார். என்னதான் தனுஷ், ஹன்சிகா, விவேக்னு பெரிய டீம் இருந்தாலும் படத்தோட காமெடில `கா` கூட இல்லை. ஆனாலும் இந்த ரெண்டு படத்துக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கு. ரெண்டுலேயும் மாமியார்தான் பிராப்ளம். #ரீமேக் பண்ண மாதிரியும் இருக்கணும், பண்ணாத மாதிரியும் இருக்கணும்.

* ரஜினி பட டைட்டில் மட்டும் இல்லை. கமல் பட டைட்டிலையும் காலி பண்ணுவேன்னு சுராஜ் எடுத்த படம்தான் 'சகலகலா வல்லவன்'. எல்லோருக்கும் கமல் நடிச்ச பழைய 'சகலகலா வல்லவன்' படம் ஞாபகம் இருக்கும். பட் அதே பேர்ல ரெண்டு வருஷம் முன்னாடி இன்னொரு 'சகலகலாவல்லவன்' படம் வந்தது வரலாற்று சுவடுகள்ல பதியப்படாம அப்படியே காணமா போயிடுச்சு. இந்தப் படத்துக்கும் பழைய படத்துக்கும் எந்த ஒற்றுமையுமே இல்லை பாஸ். பழைய படம் தியேட்டர்ல ஓடினது இந்தப் படம் தியேட்டரை விட்டு ஓடினது. சுராஜோட அடுத்த பட டைட்டிலுக்குதான் கோலிவுட்டே காத்துக்கிட்டு இருக்கு.

* பழைய பட பேர்கள் வைக்கிறதுல ரஜினி பட பேருக்கு மட்டும் ஏன் இவ்வளவு போட்டின்னு தெரியலை. 'படிக்காதவன்', 'பொல்லாதவன்' மாதிரி இன்னொரு ரஜினி பட டைட்டில்தான் 'நான் சிகப்பு மனிதன்'. எப்படிப் பழைய ரஜினி படத்துல வில்லனை ஹீரோ தேடிப் போய் கொலை பண்ணுவாரோ அதே மாதிரிதான் இந்தப் படத்துலேயும் நடக்கும். அந்த 'நான் சிகப்பு மனிதன்' படத்துல ஹீரோ மட்டும்தான் சிகப்பு மனிதன். பட் இந்தப் படத்துல கதை மொத்தமும் சிகப்பாதான் இருக்கும். அந்த அளவுக்கு ஆடியன்ஸைக் கதறக் கதற பழி வாங்கி இருப்பாங்க.

-லோ.சியாம் சுந்தர்.